Published:Updated:

ஒன் பை டூ

பா.ஜ.க பிரமுகர் ஒருவர் எஸ்.பி-யின் சட்டையைப் பிடித்துத் தள்ளுகிறார். அங்கிருக்கும் ஒரு எஸ்.ஐ அதற்குக் கோபப்படுகிறார். ஆனால், எஸ்.பி விட்டுவிடச் சொல் கிறார்.

பிரீமியம் ஸ்டோரி

``பா.ஜ.க-வினர் கலந்துகொள்ளும் விவாத நிகழ்ச்சிகளில் இனி நாங்கள் பங்கேற்க மாட்டோம் என தி.மு.க தரப்பு சொல்வது சரியா?”

கே.என்.நேரு, தி.மு.க முதன்மைச் செயலாளர்:

``விவாத நிகழ்ச்சிகள், கட்சிகளின் தரப்பு நியாயங்களை மக்களிடம் சொல்ல நடத்தப்படுகின்றன. அரசியல் கற்க நல்ல தளம் இவை. ஆனால், அண்மைக்காலமாக இவை ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பேசும் கதாகாலட்சேபமாக மாறியிருக்கின்றன. பா.ஜ.க-விலிருந்து விவாத நிகழ்ச்சிக்குப் பெரும்பாலும், அரசியல் தெரியாதவர்கள், கருத்தை முறையாக முன்வைக்க முடியாதவர்கள்தான் வருகிறார்கள். அவர்களுக்குப் பேசவே தெரியவில்லை. அதனால், தரம் தாழ்ந்த விமர்சனங்கள், தனி நபர் தாக்குதல்கள், மிரட்டல் தொனியில் பேசுவது என எல்லை மீறுகிறார்கள். மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கின்ற காரணத்தால், ஊடகங்கள் இதில் நடுநிலையோடு செயல்பட முடியாத சூழலும் இருக்கிறது. இப்படியே போனால் அரசியல் சூழலே பாழ்பட்டுவிடும்.

இப்படித்தான் எல்லா துறைகளிலும் அதிகாரம் செலுத்துகிறார்கள். அண்மையில் ஒரு யாத்திரை நடந்தது. அதில் பங்கெடுத்த பா.ஜ.க பிரமுகர் ஒருவர் எஸ்.பி-யின் சட்டையைப் பிடித்துத் தள்ளுகிறார். அங்கிருக்கும் ஒரு எஸ்.ஐ அதற்குக் கோபப்படுகிறார். ஆனால், எஸ்.பி விட்டுவிடச் சொல் கிறார். எல்லா இடங்களிலும் பா.ஜ.க இப்படித்தான் நடந்து கொள்கிறது. அவர்களுக்கு நாங்கள் பயப்படவில்லை. களத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். இரண்டு கைகளையும் கட்டிப்போட்டுவிட்டுச் சண்டைக்கு வரச் சொன்னால், எப்படிச் சண்டையிட முடியும்... மேலும், சண்டை செய்யத் தெரியாத கோமாளியிடம் எப்படிச் சண்டையிட முடியும்?!’’

ஒன் பை டூ

குஷ்பு, பா.ஜ.க பிரமுகர்:

``அது அவர்கள் கூட்டணி முடிவு. இதனால், பா.ஜ.க-வுக்கு எந்த ஒரு சறுக்கலும் இல்லை. காங்கிரஸில் நான் இருந்தபோதும், இரண்டு தனியார் தொலைக்காட்சியின் விவாதங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றார்கள். அப்படித்தான் இதுவும். நிச்சயம் விவாத நிகழ்ச்சிக்கு ஊடகங்கள் எங்களை அழைக்கும். நாங்கள்தான் மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கிறோம். அப்படிப்பட்ட எங்களை விட்டுவிட்டு விவாத நிகழ்ச்சி நடத்தினால், அது நடுநிலைத் தன்மையுடன் இருக்காது என்பது மக்களுக்கும் ஊடகங் களுக்கும் நன்கு தெரியும். நாங்கள் விவாதங்களில் உண்மையைப் பேசுகிறோம். உண்மையைப் பேசினாலே தி.மு.க தரப்புக்கு பயம் வந்துவிடும்போல. சிந்தனைகளையும் கருத்துகளையும் எதிர்கொள்ள முடியாதவர்கள், இப்படிச் சாக்கு போக்குச் சொல்லி பின்வாங்குகிறார்கள் என்றே தோன்றுகிறது. மக்கள் எங்களை நம்பத் தொடங்கிவிட்டார்கள். இதனால், எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு