Published:Updated:

ஒன் பை டூ - தே.மு.தி.க-வின் எதிர்காலம்?

தே.மு.தி.கவின் எதிர்காலம்

பிரீமியம் ஸ்டோரி

பார்த்தசாரதி, தலைமை நிலையச் செயலாளர், தே.மு.தி.க.

``தமிழ்நாடு முழுவதும் நாங்கள் மட்டுமே களத்தில் இறங்கி வேலை செய்துவருகிறோம். மற்ற கட்சிகளில் தலைவர்கள் பிரசாரத்துக்குச் செல்கிறார்களே தவிர, களப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தமிழகத்தை ஏழு மண்டங்களாகப் பிரித்து மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பகுதிவாரியான கூட்டங்களை நடத்திவருகிறோம். அதனால், வரும் தேர்தலில் நாங்கள் பெருவாரியாக வெற்றிபெறுவோம்.

பார்த்தசாரதி
பார்த்தசாரதி

இன்றைக்கும் தமிழகத்தில் இரு கழகங்களுக்கு மாற்றாக இருக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க-தான். எங்களது வாக்குவங்கி குறைந்துவிட்டதாக சிலர் பேசுகிறார்கள். நாங்கள் தனியாக நின்றபோது பெற்ற வாக்குகள்தான் எங்கள் வாக்குவங்கி. கூட்டணியில், குறைந்த தொகுதிகளில் நின்று பெற்ற வாக்குகளை வைத்துக்கொண்டு, எங்களின் வாக்குவங்கியைக் கணக்கிடுவது தவறானது. எதிர்க்கட்சியாக இருந்தபோது என்ன பலத்துடன் இருந்தோமோ, அதே பலத்துடன்தான் இப்போதும் இருக்கிறோம். கண்டிப்பாகக் கோட்டையில் கேப்டனின் கொடி பறக்கும்!’’

ப்ரியன்
ப்ரியன்

ப்ரியன், மூத்த பத்திரிகையாளர்

``தே.மு.தி.க ஆரம்பித்தபோது, ‘இரு கழகங்களுக்கும் மாற்று நாங்கள்தான்’ என்று மிகவும் நம்பிக்கையுடன் சொன்னார்கள். முதல் தேர்தலில் வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் விருத்தாசலத்தில் வெற்றிபெற்று தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தார் விஜயகாந்த். தமிழகம் முழுவதும் சாதி, மத, இனம் கடந்த ஒரு வாக்குவங்கி அவருக்கு உருவானது. ஆனால், கூட்டணிக்குச் சேர்ந்த பிறகு தனித்தன்மையை இழந்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தும், பொறுமையில்லாமல் அவர் நடந்துகொண்டது அவரது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாகக் கூட்டணிச் சுழலில் சிக்கி, செல்வாக்கை இழந்து, வாக்குவங்கியையும் இழந்தது தே.மு.தி.க. விஜயகாந்தின் உடல்நிலையும் சரியில்லாமல் போய்விட்டது. ஆனால், அவர் பிரசாரத்துக்கு வருவார் என்று பிரேமலதா சொல்லிக்கொண்டிருக்கிறார். தற்போது அந்தக் கட்சியின் வாக்குவங்கி வெறும் 2.25 சதவிகிதம்தான். தி.மு.க மற்றும்

அ.தி.மு.க-வுக்கு மாற்று வாக்குகளைக் கைப்பற்ற தற்போது நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் வந்துவிட்டன. அதுமட்டுமல்ல... தே.மு.தி.க தற்போது குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. அதனால், அதன் எதிர்காலம் இனி தேய்ந்துகொண்டேதான் போகும். அதிசயம் ஏதாவது நடந்தாலன்றி தே.மு.தி.க-வுக்கு இனி மறுமலர்ச்சி சாத்தியமில்லை!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு