Published:Updated:

ஆப்பிள் தேசத்தின் அவலங்கள்!

காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
காஷ்மீர்

சிறப்பு அந்தஸ்து ரத்து - ஓராண்டு நிறைவு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2020, ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. எப்படியிருக்கிறது ஆப்பிள் தேசம்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுருண்டுவிட்ட சுற்றுலா!

ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாத்துறை மிகப்பெரிய அளவுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறையாக இருந்தது. ஊரடங்கு மற்றும் பல்வேறு கெடுபிடிகளால் சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிந்துவிட்டது. தங்கும் விடுதிகள், போக்குவரத்து, கைவினைப் பொருள்கள் வியாபாரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறையைச் சார்ந்திருந்த சுமார் ஒன்றரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

கசந்துபோன ஆப்பிள் வர்த்தகம்!

காஷ்மீரின் பொருளாதாரத்தில் ஆப்பிள் வர்த்தகம் முக்கியப் பங்குவகிக்கிறது. இந்தியாவில் 75 சதவிகித ஆப்பிள் உற்பத்தி காஷ்மீரில்தான் நடைபெறுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக, ஏற்கெனவே பாதிக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த ஓராண்டாக நீடிக்கும் ஊரடங்கால் மேலும் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது ஆப்பிள் உற்பத்தி. இதே நிலை நீடித்தால், ஆப்பிள் உற்பத்தி முற்றிலும் அழிய நேரிடலாம்.

வீட்டுச்சிறையில் தலைவர்கள்!

ஓராண்டுக்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். ஃபரூக் அப்துல்லாவும் உமர் அப்துல்லாவும் விடுதலை செய்யப்பட்டபோதிலும், மெஹபூபா முஃப்தி சிறையில்தான் இருக்கிறார். பொதுமக்கள் சுமார் 400 பேர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர்
காஷ்மீர்

முடங்கிய இணைய சேவை!

ஓராண்டுக்கு முன்னர் துண்டிக்கப்பட்ட தொலைபேசிச் சேவை மீண்டும் வழங்கப்பட்ட போதிலும், 4ஜி இணையதள சேவை இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இணையதள சேவை என்பது கருத்து சுதந்திரத்தின் ஓர் அங்கம். அது, மக்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையைப் பறிக்க முடியாது’ என்று கூறியது. ஆனாலும், ‘தேசப் பாதுகாப்பு’ என்ற காரணத்தால், 4ஜி சேவை இதுவரை தரப்படவில்லை.

ஊடகங்கள், பத்திரிகைகள்!

சிறப்பு அந்தஸ்து நீக்கத்தைத் தொடர்ந்து, ஊடகத்துறை கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. ஆரம்பத்தில் தொலைபேசி மற்றும் இணைய சேவை இல்லாமல் பத்திரிகையாளர்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில், ‘புதிய ஊடகக் கொள்கை 2020’ என்கிற ஒன்றை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் கொண்டுவருகிறது. ஊடகங்களையும் பத்திரிகையாளர்களையும் முடக்குவதற்காகவே இது கொண்டுவரப்படுவதாக அச்சம் தெரிவிக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். அவர்கள் கூறுகையில், “பொய்ச் செய்தி எது என்பதை அரசு முடிவு செய்யும். அப்படி அவர்கள் முடிவு செய்வதைவைத்து ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்மீது நடவடிக்கை எடுக்கும் அம்சங்கள் உள்ளிட்டவை அந்தக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன” என்றனர் கவலையுடன்.

நீக்கப்படும் அரசுப் பணியாளர்கள்!

தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபட்டதாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, காவல்துறை மற்றும் சிவில் நிர்வாகத்துறைகளில் பணியாற்றிவரும் உயர் அதிகாரிகள் சுமார் 200 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவர்கள், ‘தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்தனர்’ என்பது குற்றச்சாட்டு.

முடங்கிய பொருளாதாரம்!

ஓராண்டுக் காலம் ஊரடங்கு நீடிப்பதால் விவசாயம், கட்டுமானம், சுரங்கம், சேவைத் துறைகள், வர்த்தகம், சுற்றுலா, தொழில்துறை, போக்குவரத்து, கைவினை எனப் பல்வேறு துறைகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. 18,000 கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு கடந்த ஜனவரி மாதம் மதிப்பீடு செய்தது. `இப்போது அது, ரூ.20,000 கோடியைக் கடந்துவிட்டது’ என்கிறார்கள்.

காஷ்மீர்
காஷ்மீர்

குறைந்தன பயங்கரவாத செயல்கள்!

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும், 370-வது சட்டப்பிரிவை நீக்கியதிலிருந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் சம்பவங்கள் குறைந்துள்ளன. கடந்த 2018-19-ல் 107 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், 2019-20-ல் 70 சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. பயங்கரவாதிகளின் ஊடுருவல் கட்டுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஓர் ஆண்டுக்கு முன்புவரை 350 பயங்கரவாதிகள் இங்கிருந்த நிலையில், இன்று 200 பேர் மட்டுமே ஆக்டிவ் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் கூறியிருக்கிறது. ராணுவத்தின்மீது கல்லெறியும் சம்பவங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராகப் பணிபுரிந்த கிரீஷ் சந்திர முர்மு சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் மத்திய ரயில்வேதுறை இணையமைச்சரும் மூத்த பா.ஜ.க தலைவருமான மனோஜ் சின்ஹா புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் பல வர்ணஜாலங்களை காஷ்மீரில் கொண்டுவரப்போவதாகக் கூறுகிறார்கள்.