Election bannerElection banner
Published:Updated:

`மோடியால் கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளன!’ - சீதாராம் யெச்சூரி

சி.பி.எம் கூட்டம்
சி.பி.எம் கூட்டம் ( எம் விஜயகுமார் )

`தேர்தல் என்பதைக் கேலிக் கூத்தாக பா.ஜ.க நினைத்துவருகிறது. இதற்கு பெரும் எடுத்துக்காட்டு சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற ஆட்சி மாற்றமே’ - சீதாராம் யெச்சூரி.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் சேலம், அழகாபுரத்திலுள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டம் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டார்கள்.

பிரவீன்
பிரவீன்

இந்தக் கூட்டத்தில் பேசிய சீதாராம் யெச்சூரி, ``தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியோடு அ.தி.மு.க அரசு செயல்பட்டுவருகிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படும் அதி.மு.க - பா.ஜ.க போன்ற தீய கட்சிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ.க எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் நிலைமையை மேலும் மேலும் சீரழித்துவருகிறது. தனியார்மயக் கொள்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்திருக்கிறார்கள்.

சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

மத்திய மோடி அரசு கொரோனா காலத்திலும் பொதுமக்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு நல உதவிகள் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். ஆனால், மக்களை ஆறுதல்படுத்தவும், அவர்களுக்கு உதவவும் முன்வரவில்லை. மக்கள் வறுமையில் வாடிய சூழ்நிலையில் பத்து லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் சேதம் அடைந்ததாக மத்திய அரசு அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. சிறு தொழில்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

நரேந்திர மோடியால் கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இதற்காக லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயக் கொள்கையால் தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்குக் கொடுத்த கடன் உதவியை மோடி அரசு வசூலிக்காமல் மேலும் மேலும் கடனை வாரி வழங்குகிறது.

தி.மு.க தலைமையில் இடதுசாரி அமைப்புகள் ஆதரவோடு ஆட்சி அமைந்தால் மட்டுமே தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படும். அ.தி.மு.க கூட்டணியைத் தோற்கடிப்பதன் மூலமே இது சாத்தியமாகும். கோவா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, திரைமறைவாக ஆட்சி அமைத்துவருகிறது.

`மோடியால் கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளன!’ - சீதாராம் யெச்சூரி

தேர்தல் என்பதைக் கேலிக்கூத்தாக பா.ஜ.க நினைத்துவருகிறது. இதற்குப் பெரும் எடுத்துக்காட்டு, சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற ஆட்சி மாற்றமே. எந்த விதிமுறையும் இல்லாமல் அநியாயமான நடைமுறையை கையாளக்கூடியவிதத்தில் செயல்படும் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அ.தி.மு.க-வின் முகத்திரையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

``இந்தியாவை வாழத் தகுதியற்ற நாடாக மாற்றிவருகின்றனர்!" - சீதாராம் யெச்சூரி வேதனை
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு