Election bannerElection banner
Published:Updated:

ஓ.பி.எஸ் பெயரில் ரூ.61 லட்சம்; மனைவி பெயரில் ரூ.7 கோடி - துணை முதல்வரின் மொத்த சொத்துப் பட்டியல்

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

வேட்பு மனுவில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த தகவல்படி, அவர் மற்றும் அவர் மற்றும் அவருடைய மனைவியின் சொத்து மதிப்புப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க சார்பில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம். இதற்காக, கடந்த 12-ம் தேதி மதியம், போடி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் ஓ.பி.எஸ். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரது சொத்து விவரங்கள் ஏதும் இடம்பெறவில்லை. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலகர்களிடம் கேட்ட போது, ``வேட்புமனுத் தாக்கல் செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் சொத்துப் பட்டியலைத் தாக்கல் செய்யலாம்” என்றனர். அதன்படி, ஓரிரு நாள்களில், ஓ.பி.எஸ் தனது சொத்துப் பட்டியலை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், நேற்று, தனது சொத்துப் பட்டியலைத் தாக்கல் செய்தார்!

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் மனைவி விஜயலெட்சுமி ஆகியோரின் அசையும் சொத்து விவரங்கள்:

ஓ.பன்னீர்செல்வத்திடம் கையில் ரொக்கப் பணமாக 23,500 ரூபாயும், அவரது மனைவி விஜயலெட்சுமியிடம் 3,82,500 ரூபாயும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் பெயரிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில், வைப்புத்தொகையாக 11,42,698 ரூபாயும், அவரின் மனைவி விஜயலெட்சுமி பெயரிலுள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகையாக 23,98,824 ரூபாய் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேனி : `1+20; தேர்தல் விதிகளை மீறிய ஓ.பி.எஸ்!’ - நடவடிக்கை பாயுமா?

எந்த ஒரு நிறுவனத்துக்கோ அல்லது தனி நபருக்கோ ஓ.பன்னீர்செல்வம் கடனாகப் பணம் கொடுக்கவில்லை என்றும், அவரது மனைவி விஜயலெட்சுமி, தனது கணவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 65,55,411 ரூபாயும், தனது இளைய மகன் ஜெயபிரதீப்புக்கு 3,12,30,803 ரூபாயும் கடனாகக் கொடுத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, தனது கணவருக்கும் மகனுக்கும் சேர்த்து, விஜயலெட்சுமி கொடுத்திருக்கும் மொத்த தொகை, 3,77,86,214 ரூபாய்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

ஓ.பன்னீர்செல்வத்திடம் 67,440 ரூபாய் மதிப்புள்ள 16 கிராம் தங்கம், வெள்ளி நகைகளும், அவர் மனைவியிடம் 8,43,000 ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் தங்கம், வெள்ளி நகைகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, ஓ.பன்னீர்செல்வத்தின் மொத்த அசையும் சொத்து மதிப்பாக, 61,19,162 ரூபாயும், அவர் மனைவி விஜயலெட்சுமியின் மொத்த அசையும் சொத்து மதிப்பாக, 4,57,52,415 ரூபாயும், சொத்துப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னென்ன வாகனங்கள் உள்ளன?

ஓ.பன்னீர்செல்வத்திடம் 5,54,980 ரூபாய் மதிப்புள்ள மஹிந்திரா ஜினியோ எல்.ஜி.வி 2011 மாடல் காரும், 17,85,655 ரூபாய் மதிப்புள்ள டொயோடா இன்னோவா 2013 மாடல் காரும், 25,44,789 ரூபாய் மதிப்புள்ள டொயோடா இன்னோவா 2016 மாடல் காரும் என மொத்தம் 48,85,424 ரூபாய் மதிப்புள்ள மூன்று கார்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, அவர் மனைவி பெயரில், மொத்தம் 43,34,377 ரூபாய் மதிப்புள்ள இரண்டு டெம்போ டிராவலர் வாகனம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ் வேட்புமனுத் தாக்கல்
ஓ.பி.எஸ் வேட்புமனுத் தாக்கல்

ஓ.பன்னீர்செல்வத்திடம் அசையா சொத்துகளாக எதையும் குறிப்பிடவில்லை. அவர் மனைவி விஜயலெட்சுமியின் பெயரில் 56 ஏக்கர் 41.5 சென்ட் விவசாய விளைநிலம் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, விஜயலெட்சுமி பெயரில், விவசாயம் அல்லாத 1,732 சதுரடி நிலம், பெரியகுளம் அக்ரஹாரத்தில் இருப்பதாகவும், அதன் நடப்பு சந்தை மதிப்பு, தோராயமாக 7,50,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டடமாக, அதே பெரியகுளம் அக்ரஹாரத்தில் 2,068 சதுரடி கொண்ட வீடு இருப்பதாகவும், அதன் நடப்பு சந்தை மதிப்பு தோராயமாக 30 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி பெயரிலுள்ள அசையா சொத்துகள் மதிப்பு 2,63,75,106 ரூபாய்.

மொத்த சொத்து மதிப்பு:

ஓ.பன்னீர்செல்வம் : அசையும் சொத்து மதிப்பு : 61,19,162 ரூபாய்.

விஜயலெட்சுமி : அசையும் சொத்து மதிப்பு : 4,57,52,415 ரூபாய்.

ஓ.பன்னீர்செல்வம் : அசையா சொத்து மதிப்பு - இல்லை.

விஜயலெட்சுமி :அசையா சொத்து மதிப்பு : 2,63,75,106 ரூபாய்.

ஓ.பன்னீர்செல்வம் : மனைவிடம் வாங்கிய கடன் தொகை : 65,55,411 ரூபாய்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு