”கொங்குப் பகுதியில் தி.மு.க எதனால் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வருகிறது?” என அப்பகுதியின் தி.மு.க சீனியர் ஒருவரிடம் கேட்டோம். முகம் மறைத்துப் பேசத் தொடங்கினார்:
“கொங்குப் பகுதியில் சுமார் 61 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. இவற்றில் மூன்றில் இரு பங்கு தொகுதிகளை இந்த முறை ஜெயித்துவிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எண்ணியிருந்தார். ஆனால், கிடைத்ததோ, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தலா 4, ஈரோடு, திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 3, சேலத்தில் ஒன்று என மொத்தம் வெறும் 18 தொகுதிகளே!
2016 தேர்தலில் மடத்துக்குளம், சிங்காநல்லூர், பரமத்திவேலூர், சேலம் வடக்கு என நான்கு தொகுதிகளில்தான் வென்றிருந்தோம். இதை ஒப்பிட்டுப் பார்த்தால், நிச்சயம் அதிகமான தொகுதிகளைத்தான் வென்றிருக்கிறோம். இதே கொங்குப் பகுதியை ஜெயித்துதான் 2016-ல் அ.தி.மு.க தொடர்ச்சியாக இரண்டாவது முறை அரியணை ஏறியது, இந்த முறையும் 66 தொகுதிகளைப் பெற்றது. 2016 தேர்தலைக்காட்டிலும், தற்போது அதிகம் தொகுதிகள் கிடைத்திருந்தபோதும், வாக்குவங்கி என்பது உயரவேயில்லை.

இதற்கான காரணங்களை அலசுகையில் சில உண்மைகளைச் சொல்லியே தீர வேண்டும். அதாவது, ஒரு காலம் வரை முக்குலத்தோர் கைகளில் இருந்த ஆட்சி, கவுண்டர்கள் கைகளுக்குச் சென்றதுமே கொங்குப் பகுதியே களேபரமானது. ஏனென்றால், இது அந்தச் சமூகத்தின் நீண்ட நாள் கனவு. கவுண்டர் ஒருவர் முதல்வராக இருப்பதை அந்தச் சமூக மக்கள் மனதார விரும்பினார்கள். அதனால்தான், இந்த முறையும் வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள்.
அடுத்து, கமல் மற்றும் சீமான் ஆகியோர் பிரித்த வாக்குகள். ஒருபக்கம் கவுண்டர் ஆட்சி விரும்பும் அதே கொங்கு மக்கள்தான், மறுபக்கம் எப்பவுமே மாற்றத்துக்குத் தலைவணங்குபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தி.மு.க-விலிருந்து வெளியேறிய வைகோவுக்கும், முதன்முறை ஒன்றிணைந்த அ.தி.மு.க-வாகப் போட்டியிட்ட ஜெயலலிதாவுக்கும், தனிக்கட்சியாகக் களம்கண்ட விஜயகாந்த்துக்கும் ஆதரவுக்கரம் நீட்டியது கொங்கு மக்கள்தான். அந்த வகையில்தான் கமல் மற்றும் சீமானுக்கு கொங்குப் பகுதியில் ஓரளவுக்குச் சொல்லிக்கொள்ளும் வகையில் வாக்குகள் கிடைத்தன. அவர்கள் பிரித்தது முக்கால்வாசி தி.மு.க வாக்குகளைத்தான்.
முதல்வராக இருந்த எடப்பாடி, அமைச்சர்களாக இருந்த வேலுமணி, தங்கமணி போன்றோர் தனித்தனியாக டீம் வொர்க் செய்திருந்தனர். தி.மு.க-விலும் பணம் புழங்கியது. ஆனால், அது உரியவர்களிடம் சென்று சேர்ந்ததா என்பதை நாங்கள் கவனிக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க-வினர் அதற்கென தனித்தனி டீம் போட்டு வேவு பார்த்தனர். கடைசி இரு தினங்கள் கரன்சி மழையே பொழிந்தது அதன் காரணமாகத்தான்.
மேலும், தி.மு.க கூட்டணியிலும் கவுண்டர் சமூகத்தவர்கள் போட்டியிட்டனர். அவர்களை எப்படிச் சமாளித்தார்கள் என்றால், ‘கவுண்டர் எம்.எல்.ஏ ஆவது முக்கியமா இல்லை கவுண்டர் ஒருவர் மீண்டும் முதல்வராவது முக்கியமா?’ என்று அந்த மக்களை மூளைச்சலவை செய்தனர். இதில் மயங்கியவர்கள் பல்லாயிரம் பேர். இவை மட்டுமன்றி, எடப்பாடியாரின் தாயார் குறித்து ஆ.ராசா விமர்சித்ததும் தி.மு.க-வின் கொங்கு தோல்விக்கு முக்கியக் காரணம்.
ஆ.ராசா பேசியது என்னவோ, எடப்பாடியின் அரசியல் வாழ்க்கையைப் பற்றித்தான் என்றாலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் கொங்கு மக்கள் மனதில் அனலாகக் கொதித்தன. அதை எடப்பாடியும் நாசூக்காக அரசியலாக்கி, பிரசாரத்தில் கண்ணீர் சிந்தினார். இதனால் பெண்கள் மத்தியில் எடப்பாடி மீது கிரேஸ் ஏறியது.
இறுதியாக, ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம், வாஷிங் மெஷின் இலவசம் என அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது கொங்குப் பகுதி பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைக் கொடுத்தைக் கண்ணால் காண முடிந்தது. இப்படியான சில பல காரணங்களால்தான் தி.மு.க மீதான அபிமானம் கொங்குப்பகுதி மக்களிடம் குறைந்து, அ.தி.மு.க மீதான இமேஜ் எகிறியது. விளைவு, மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளைக்கூட ஜெயிக்க முடியவில்லை. அதனால், இந்த கொரோனா பேரிடர் முடிந்த பின்னர் ‘ஆபரேஷன் கொங்கு’ என்கிற திட்டத்தைக் கையிலெடுத்து செயல்படுத்தினால்தான் தி.மு.க-வால் கொங்குவில் மீண்டு வர முடியும்!” என முடித்தார்.
“கொங்குப் பகுதியில் தி.மு.க மீதான அபிமானம் மாறுவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?” என்பது குறித்து தி.மு.க கூட்டணியில் அங்கம்வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ-வுமான ஈஸ்வரனிடம் பேசினோம். “கிரிக்கெட்டில் முதல் பாலிலேயே சிக்ஸர் விளாசுவதுபோல, முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே அதிரடி காட்டிவருகிறார். அ.தி.மு.க ஆட்சியில் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த, ஊழல் கறை படியாத அதிகாரிகளைத் தேடிப்பிடித்து தனக்கான தளபதிகளாக நியமித்துக்கொண்டிருக்கிறார். இதுவே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஊழலற்ற ஆட்சியை முதல்வர் கொடுப்பார் என்பதற்கான சான்று!
இத்தகைய நடவடிக்கைகள், பொதுவாக அனைத்துப் பகுதி மக்களின் உள்ளங்களிலும் முதல்வர் மீதான மரியாதையை அதிகப்படுத்தியிருக்கின்றன. இதற்கு கொங்குப்பகுதி ஒன்றும் விதிவிலக்கல்ல! எனினும், கொங்குவில் தி.மு.க முழுமையாக மீண்டெழ வேண்டும் என்றால் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

மைக்ரோ லெவல் வியூகம்
முதலில் கொரோனா பேரிடர் காலம் முடிவடைந்ததும், மைக்ரோ லெவல் பாலிடிக்ஸ் பண்ண வேண்டும். அதாவது, கொங்குப்பகுதியிலுள்ள தி.மு.க-வினர், அந்தப் பகுதி கூட்டணிக் கட்சியினருடன் தொகுதியளவில் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்து, அதன் மூலம் மைக்ரோ லெவலில் இறங்கி, கிராமம் கிராமமாகச் சென்று அரசின் நலத்திட்டங்கள் யாருக்குச் சென்று சேர்ந்திருக்கின்றன, யாருக்கெல்லாம் அரசின் சலுகைகள் கிடைக்கவில்லை என்பதை ஆராய்ந்து, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அண்ணா அறிவாலயக் கிளை
எல்லா மாவட்டங்களிலும் தி.மு.க-வுக்கென அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. எனினும், மிக முக்கியமாக சென்னையிலுள்ள தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் போன்று, கொங்கு மண்டலத்தில் ஒரு நிரந்தர அலுவலகத்தை அமைக்க வேண்டும். அதுவும் கொங்குப் பகுதி மக்கள் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய கோவையில், அண்ணா அறிவாலயக் கிளை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவருக்கும் கொங்குப் பகுதியில் நல்ல பெயர் இருப்பதைப் பயன்படுத்தி, இருவரில் ஒருவரை கொங்குப் பகுதிக்கான பொறுப்பாளராக நியமித்து, கட்சியினரை அவர்களுக்குக் கீழ் செயல்படவைக்க வேண்டும்.
உடனடி ஆக்ஷன்
தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் சொன்னதுபோல, முந்தைய அரசின் ஊழல் அமைச்சர்கள், குறிப்பாக கொங்குப் பகுதியைச் சார்ந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான், அவர்களெல்லாம் எப்படி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர் என்பதை கொங்கு மக்கள் அறிந்துகொள்வார்கள். இதன் மூலம், தி.மு.க-வுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என வாக்காளர்களே வருத்தப்படுவார்கள்.
செயல் திட்டங்கள்
அத்திக்கடவு-அவினாசி திட்டம் போன்று, திருமணிமுத்தாறு, ஆணைமலையார் நல்லாறு போன்ற கொங்குப் பகுதிக்கான குடிநீர் திட்டங்களை முடுக்கிவிட வேண்டும். கொங்குப் பகுதியில்தான் பெரும்பாலான தொழிற்சாலைகள் உள்ளன. விசைத்தறி, திருப்பூர் பின்னலாடை, கோவையில் பம்ப்செட்டுகள் உற்பத்தி, நாமக்கல்லில் லாரி கட்டுமானம் மற்றும் முட்டை, கோழிப்பண்ணைகள் ஆகியவற்றில் நிலவிவரும் பிரச்னைகளைத் தீர்க்க தனித் திட்டம் தேவை. கொங்குப்பகுதி தொழிற்சாலைகளுக்கென தனி ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி இவற்றைச் செய்ய வேண்டும்.
அதேபோல், பின்னலாடை உள்ளிட்ட தொழிற்சாலைகளால் ஏற்படும் சாயக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண வேண்டியது அவசியம். ஜெயலலிதா இதற்கான தீர்வை அறிவித்தார். ஆனால் செய்து முடிக்கவில்லை. முதல்வர் இவற்றைச் செய்துமுடித்தால் சாயக்கழிவு பிரச்னையும் தீரும், ஆறுகளும் சுத்தமாகும்.
கொங்கு மக்கள் அனைவருக்கும் குலதெய்வக் கோயில்கள் உள்ளன. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அவற்றையெல்லாம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்துவிடுவார்கள் என்று மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட திட்டம் அரசிடம் இல்லை என்பதை கொங்கு மக்கள் உணரச் செய்திட வேண்டும். இது போன்ற, மக்களின் தேவை உணர்ந்த பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், அரசியல்ரீதியிலான சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலுமே போதுமானது. கொங்குப் பகுதி அ.தி.மு.க-விடமிருந்து, தி.மு.க-வுக்கு மாறிவிடும். அடுத்து தி.மு.க-தான் கொங்குவின் ‘கிங்’காக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை!” என்றார் தெளிவாக!