Published:Updated:

பேராவூரணி:ஓ.பி.எஸ் அலுவலகத்திலிருந்து வந்த போன்... கலக்கத்தில் வைத்திலிங்கம் ஆதரவு வேட்பாளர்

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

ஜெயலலிதா வெற்றிபெறக்கூடிய வேட்பாளருக்குத்தான் சீட் கொடுப்பார். ஆனால் வைத்திலிங்கம் தனக்கு அடிமையாக இருக்கும் நபர்களுக்கே சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அ.தி.மு.க தொடங்குவதற்கு காரணமாக இருந்தவரின் மகனுக்கு பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வைத்திலிங்கம் சீட் வாங்கி தரவில்லை என்ற சலசலப்பு எழுந்துள்ளது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கட்சிக்காக உழைத்த குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு சீட் கொடுக்கவில்லை என அந்த நபர் போர்க்கொடி தூக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஜி.ஆர் உடன் குழ.செல்லையா
எம்.ஜி.ஆர் உடன் குழ.செல்லையா

அ.தி.மு.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக இருப்பவர் பேராவூரணியை சேர்ந்த அருள்நம்பி. இப்பகுதியில் அ.தி.மு.க வளர்வதற்கு முக்கியமான காரணகர்த்தாவாக இருந்த முன்னால் எம்.எல்.ஏ குழ.செல்லையாவின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு அருள்நம்பி விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். சீனியர், தகுதியின் அடிப்படையில் கட்சிக்காக உழைத்த தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. கிடைக்கும் பட்சத்தில் எளிதாக வெற்றியை அடையலாம் என்ற சூழ்நிலையும் நிலவியதாகச் சொல்லப்படுகிறது.

போராட்டம்
போராட்டம்

இந்தநிலையில்,பேராவூரணி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திருஞானசம்பந்தம் என்பவர் அறிவிக்கப்பட்டார் . தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து அ.தி.மு.க-வுக்கு வந்து மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தன் கைக்கு அடக்கமாக இருக்கக்கூடிய நபர் என்பதற்காக திருஞானசம்பந்தத்துக்கு சீட் வாங்கி கொடுத்திருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் கொதிப்படைந்த அருள்நம்பியின் ஆதரவாளர்கள், வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி கறுப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். இந்தத் தகவல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் செல்ல, அவருடைய அலுவலகத்திலிருந்து அருள்நம்பிக்கு போன் வந்திருக்கிறது. அப்போது, `ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க. நல்லது நடக்கும்’ எனக் கூறியதாக தகவல் சொல்லப்படுகிறது. இதுதான் பேராவூரணி தொகுதியில் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டுவருகிறது.

அருள்நம்பி
அருள்நம்பி

இது குறித்து அருள்நம்பியிடம் பேசினோம். ``அ.தி.மு.க தொடங்குவதற்கு முன்பே எங்க அப்பா குழ.செல்லையா அ.தி.மு.க., அதாவது `அதிருப்தி தி.மு.க’ என போஸ்டர் ஒட்டி சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது முறைப்படி அதில் இணைந்தார். அ.தி.மு.க தொடங்கப்பட்டபோது கையெழுத்திட்ட ஐந்தாவது நபர் எங்க அப்பா குழ.செல்லையா. அ.தி.மு.க தொடங்குவதற்கும் காரணகர்த்தாவாக இருந்தவர் என்று சொன்னாலும் மிகையாகாது. கட்சிக்காகத் தீவிரமாக உழைத்தவர், இப்பகுதியில் அ.தி.மு.க வேரூன்ற ஆழமான அடித்தளம் அமைத்தவர்.

இதற்காக எம்.ஜி.ஆர்., ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பதவியை அப்பாவுக்குக் கொடுத்தார். ஆட்சி மன்றக்குழு உறுப்பினர், கொறடா என எம்.ஜி.ஆர் தலைமையின் கீழ் இருந்திருக்கிறார். ஜெயலலிதா தலைமையின் கீழும் மாநில விவசாயப் பிரிவு செயலாளர், மாவட்டச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்.

வேட்பாளரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
வேட்பாளரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

நானும் 1989-ல் கட்சியில் முறைப்படி உறுப்பினராகச் சேர்ந்தேன். சேதுபாவாசத்திரம் ஒன்றிய துணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறேன். தற்போது வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக இருக்கிறேன். கட்சிப் பணிகளில் அப்பாவைப்போலவே ஈடுபாட்டுடன் செய்துவருகிறேன். ஒரு முறை ஜெயலலிதா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது போராட்டம் நடத்தி கைதாகி 13 நாள்கள் சிறையிலிருந்திருக்கிறேன்.

96-ம் ஆண்டிலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துவருகிறேன். இந்த முறை நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தேன். ஆனால் முன்னால் எம்.எல்.ஏ-வான திருஞானசம்பந்தம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது எனக்குக் கடும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் உண்டாக்கியது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

என்னுடைய ஆதரவாளர்கள் வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவர் த.மா.கா-விலிருந்து அ.தி.மு.க-வுக்கு வந்து மூன்று வருடங்களே ஆகின்ரன. அத்துடன் கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்து தொகுதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை என்பதால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்.

இவருடைய அண்ணன் மருமகள் சசிகலா ரவிசங்கர் பேராவூரணி ஒன்றியப் பெருந்தலைவராக உள்ளார். தற்போது ஆலங்குடி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்கவேல், திருஞானசம்பத்தத்தின் அக்கா மகனாவார். இதில் பெரிய வேதனை என்னவென்றால் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து அ.தி.மு.க-வுக்கு வந்து 40 நாள்களே ஆன நிலையில் தங்கவேலுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தம்
திருஞானசம்பந்தம்

கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் இருக்கும்போது இப்பகுதியில் அ.தி.மு.க ஒரு குடும்பத்தினரின் கைக்குள் சிக்கி அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதற்குக் காரணமாக வைத்திலிங்கம் இருக்கிறார் என்பது பெரும் வேதனை. ஜெயலலிதா வெற்றிபெறக்கூடிய வேட்பாளருக்குத்தான் சீட் கொடுப்பார். ஆனால் வைத்திலிங்கம், தனக்கு அடிமையாக இருக்கும் நபர்களுக்கே சீட் வாங்கி கொடுத்துள்ளார்.

இதனால் நிச்சயம் வெற்றி உறுதி என சொல்லக்கூடிய தொகுதியாக இருந்த பேராவூரணி தற்போது தி.மு.க-வுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது. அ.தி.மு.க-வின் கோட்டையான இப்பகுதியில் ஓட்டை விழும் நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டனர். இந்தத் தகவல் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவருடைய அலுவலகத்திலிருந்து என்னைத் தொடர்புகொண்டு `ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க' எனக் கூறியுள்ளனர். நானும் நல்லது எனக்கு மட்டுமல்ல... இந்தத் தொகுதிக்கும் நடக்கும் என காத்திருக்கிறேன்" என்றார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

திருஞானசம்பந்தத்தின் ஆதரவாளர்கள் தரப்பில் விசாரித்தோம், ``கட்சிக்கு எப்ப வந்தோம் என்பது முக்கியமல்ல... கட்சியின் வளர்ச்சிக்காக எப்படி வேலை செய்கிறோம் என்பதுதான் முக்கியம். தலைமைக்கு விசுவாசமாக இருந்ததால் வைத்திலிங்கம் சீட் வாங்கி கொடுத்திருக்கிறார். நிச்சயம் வெற்றிபெற்று பேராவூரணி தொகுதி அ.தி.மு.கவின் கோட்டை என்பதை திருஞானசம்பந்தம் நிரூபிப்பார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு