பிரீமியம் ஸ்டோரி
முழு ஊரடங்கை அறிவித்து, கொரோனாத் தடுப்புப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது தமிழக அரசு. முதல்வரில் தொடங்கி அமைச்சர்கள் வரை பலரும் அவரவருக்குப் பொறுப்பளிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் களப்பணியில் இருக்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளைத்தான் எங்குமே பார்க்க முடியவில்லை. என்னதான் செய்கிறார்கள் இந்தக் கட்சிகளின் தலைவர்கள்?
என்ன செய்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள்?

“நம்ம அருமையை உணர்வாங்க...”

மே இரண்டாவது வாரம் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை நோக்கி நகர்ந்த நேரத்தில், அ.தி.மு.க-வில் எதிர்க்கட்சித் தலைவர் பஞ்சாயத்தும் உச்சத்தில் இருந்தது. அதைச் சரிக்கட்டுவதற்கே எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் போதவில்லை என்பதால், கொரோனாத் தடுப்புப் பணிகளில் அவர் ஆர்வம் செலுத்தவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, பிரதமருக்குக் கடிதம், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அரசை வலியுறுத்தி ஏதாவது அறிக்கைகள் என எடப்பாடியின் பொழுது கழிந்துகொண்டிருக்கிறது.

மே 14-ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி தொகுதிகளின் அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் ஆய்வு செய்தார்கள். அங்குகூட எடப்பாடி செல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் கிரீன்வேஸ் சாலையில் ‘செவ்வந்தி’ அரசு இல்லத்தில் தொடர்ந்து அவர் வசிப்பதற்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் பஞ்சாயத்து நடந்தபோது சென்னையிலிருந்த எடப்பாடி, இப்போது சேலத்தில் இருக்கிறார். கட்சிக்காரர்களைக்கூடப் பார்ப்பதில்லை. நிர்வாகிகளிடம் போனிலேயே பேசிக்கொள்கிறார்.

சமீபத்தில்தான் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டதால், உடல்நலனில் உஷாராக இருக்கிறார் எடப்பாடி. அவ்வப்போது கஷாயம், ஆரோக்கிய உணவு, அரை மணி நேர நடைப்பயிற்சி என தன் உடல்நிலையை சீராக வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் ஊரடங்கு அமலில் இருந்தபோது, அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்களும், நிர்வாகிகளும் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினர். அதுபோன்ற எந்த நடவடிக்கைகளையும் இந்த முறை காணவில்லை. சமீபத்தில், எடப்பாடிக்கு நெருக்கமான கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர் அவரிடம் நலம் விசாரித்தபோது, “பத்து வருஷத்துக்கு அப்புறம், தி.மு.க ஆட்சியை இப்பதானே மக்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. போகப் போக நம்ம அருமை மக்களுக்குப் புரியும். இப்ப தேவையில்லாம நாம ஏன் களத்துல இறங்கணும்?” என்றிருக்கிறார் எடப்பாடி.

என்ன செய்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள்?

துக்கத்தில் முடங்கிய பன்னீர்!

எதிர்க்கட்சித் தலைவர் பஞ்சாயத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் தோல்வியடைந்த ஓ.பன்னீர்செல்வம், அந்தத் துக்கத்திலிருந்தே மீள முடியாமலிருந்தார். அடுத்த இடியாக அவர் தம்பி ஓ.பாலமுருகன் மே 14-ம் தேதி மரணமடைந்தார். நீண்ட நாள் உடல்நலக்குறைவு காரணமாகத்தான் பாலமுருகன் இறந்தாலும், அந்த இழப்பை பன்னீரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இறுதி அஞ்சலிக்காக பெரியகுளம் சென்ற பன்னீர்செல்வம், 16-ம் நாள் சடங்குகள் முடியும் வரை அங்குதான் தங்குகிறார்.

இந்த துக்கத்திலும் எடப்பாடிக்கு ‘டஃப் பைட்’ கொடுக்க பன்னீர் தவறவில்லை. அவ்வப்போது அறிக்கைகள் பன்னீரின் பெயரில் தனி லெட்டர் பேடில் வெளிவந்தன. பிரதமருக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில், எடப்பாடி பழனிசாமி தன் பெயருக்குக் கீழே முன்னாள் முதலமைச்சர் என்று போட்டுக்கொண்டவுடன், தன் அறிக்கைகளிலும் முன்னாள் முதலமைச்சர் எனப் போட்டுக் கொண்டார் பன்னீர். பாலமுருகன் மறைவுக்கு துக்கம் விசாரிக்க பெரியகுளம் சென்ற முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர், ‘தனி லெட்டர் பேடு ஆவர்த்தனம் சச்சரவுகளுக்கு வழிவகுக்கும்’ எனக் கேட்டுக்கொண்ட பிறகுதான், அ.தி.மு.க-வின் லெட்டர்பேடில் பன்னீரின் அறிக்கைகள் வர ஆரம்பித்தன.

‘நாங்க ஒரே கட்சி... ஆனா ரெண்டு பேரும் தனித்தனி’ என்பது போல எடப்பாடி ஆதரவாளர்களும் பன்னீர் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் சண்டை போடுகிறார்கள். ‘தாயின் தலைமகனுக்குத்தான் தலைமைப் பதவி’ என பன்னீர் ஆதரவாளர்கள் களமாடுகிறார்கள். ஓ.பி.எஸ் பேரவை ஆரம்பித்துவிட்டதாக பீதி கிளப்புகிறார்கள். இன்னொரு பக்கம், ‘நாங்கள் தாயில்லாப் பிள்ளைகள். எங்கள்மீது ஊழல் வழக்கு போடுவதைக் கைவிட வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை வைத்ததாகவும் ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை சமூக வலைதளங்களில் பலர் பரப்பினார்கள். இதன் பின்னணியில் பன்னீர் ஆதரவாளர்கள் இருப்பதாக சந்தேகப்படுகிறது எடப்பாடி தரப்பு. இந்நிலையில், ‘பேரவை ஆரம்பிப்பதையும், உண்மைக்கு மாறான செய்திகள் வெளியிடுவதையும் தவிர்க்க வேண்டும்’ என எடப்பாடியுடன் இணைந்து அறிக்கையும் விட்டிருக்கிறார் பன்னீர். அவரைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார் எடப்பாடி.

என்ன செய்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள்?

நான் ரொம்ப பிஸி!

“கடந்த முறை ஆளும்கட்சியாகவும் இந்தமுறை 65 எல்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சியாகவும் இருக்கிறது அ.தி.மு.க. அந்தக் கட்சியின் தலைமைகூட. ‘நாம் எதனால் தேர்தலில் தோல்வியடைந்தோம், எங்கே தவறு நடந்தது’’ என்பது குறித்தெல்லாம் இன்னும் ஆலோசனை நடத்தவில்லை. ஆனால், 234 தொகுதிகளில் ஒரு இடத்தில்கூட வெற்றியில்லை என்றபோதும் தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு மறுநாளே கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் இணைய வழியாக ஆலோசனையில் இறங்கினார் சீமான். அடுத்ததாக, நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட 117 ஆண் வேட்பாளர்கள், மற்றும் 117 பெண் வேட்பாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்.

நடுவில் தந்தை இறப்புக்காக தன் சொந்த ஊரில் இருந்த இரண்டு நாள் தவிர தொடர்ச்சியாக கட்சியின் கட்டமைப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதேபோல, முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே 18-ம் தேதியன்று, ‘இன எழுச்சி நாள்’ என்கிற பெயரில் இணைய வழியில் கூட்டத்தை நடத்தினார் சீமான். கொரோனா நலத்திட்ட உதவிகள் செய்யக் களத்தில் இறங்கி வேலை செய்யும் கட்சியினரிடம் அவ்வப்போது அலைபேசி வாயிலாகப் பேசி உற்சாகப்படுத்தியும் வருகிறார். விடியற்காலையில் உடற்பயிற்சி, காலையில் இணையவழி கூட்டங்கள், மாலை முதல் இரவு புத்தக வாசிப்பு என மிகவும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது சீமானின் நேரம்.

என்ன செய்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள்?

அங்கேயே இருந்திருக்கலாமோ!

விஜயகாந்துக்கு உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டதால் மே 19-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்களில் வீடு திரும்பிவிட்டார். அவருக்குக் கொரோனா போலவே அறிகுறிகள் இருந்ததால், குடும்பத்தினர் பயந்துவிட்டனர். நல்லவேளையாக நெகட்டிவ் ரிசல்ட் வந்துவிட்டது. பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் என ஒருவரும் வீட்டை விட்டு வெளியேறவில்லை. எல்லோருமே ஓய்வில் இருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களின் எண்ணம் நிறைவேறாததால் சிலர் கட்சி மாறிவிட்டனர். சென்னை உட்பட பல மாவட்டங்களில் நிர்வாகிகளே கட்சியை உயிர்ப்புடன் வைக்கும் விதமாக கொரோனா நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுவும் கட்சியின் வழிகாட்டுதலால் இல்லை; தங்கள் சொந்தச் செலவில் செய்துவருகிறார்கள். ‘`அவசரப்பட்டு அ.தி.மு.க கூட்டணியை முறித்துக்கொள்ளாமல், அங்கேயே இருந்திருக்கலாமோ’’ என குடும்பம் இப்போது ஃபீல் பண்ணுகிறதாம். கடைசி நேரத்தில் தி.மு.க பக்கம் போய் முட்டி மோதியபோது, ‘`நாங்கள் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டோம். எங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தால், ஒரு ராஜ்ய சபா சீட் தருகிறோம்’’ என்று வாக்குறுதி தரப்பட்டதாம். ‘அதையாவது செய்திருக்கலாமே’ என குடும்பத்தில் இப்போது விவாதம் நடக்கிறதாம்.

என்ன செய்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள்?

கல்யாண வேலையில் பிஸி!

தன் உடல்நலனில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பவர் டி.டி.வி.தினகரன். தேர்தல் பிரசாரத்தின்போது கூட, தன் வேனுக்கு அருகில் தொண்டர்கள் வருவதையே விரும்பாதவர். கொரோனா முதல் அலையின்போது, தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, புதுச்சேரி அருகேயுள்ள தன் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்ட பிறகே, சென்னைக்குத் திரும்பினார். ஆனாலும், தன் கட்சியின் பொருளாளராக இருந்த வெற்றிவேல் கொரோனாவுக்கு பலியானதால், அப்போதே உஷாராகிவிட்டார் தினகரன். தேவையற்ற சந்திப்புகள், வெளியூர்ப் பயணம் எதையும் மேற்கொள்வதில்லை அவர். “தேர்தல் என்பதால்தான் அவர் வெளியே வந்தார். அவர் எதிர்பார்த்த மாதிரி ரிசல்ட் வரவில்லை என்பதில் தலைவர் ரொம்ப அப்செட். இப்போது மீண்டும் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் தஞ்சை காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகனுக்கும் திருமணம் விரைவில் நடைபெறவிருக்கிறது. வரும் ஜூன் 23-ம் தேதி பூண்டியில் திருமண வரவேற்புக்கு நாளும் குறித்திருந்தனர். ஆனால், கொரோனாப் பரவல் உச்சத்தில் இருப்பதால், கவலையில் ஆழ்ந்திருக்கிறாராம் தினகரன். இருந்தாலும், சென்னை அடையாற்றிலுள்ள தன் வீட்டிலிருந்தபடியே மகளின் திருமண ஏற்பாட்டை கவனிக்கிறாராம். ‘நேர்ல வந்து பத்திரிகை வைக்க முடியலைங்க. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டால் அவசியம் நீங்க திருமணத்துக்கு வரணும்’ என்று போனிலேயே அழைப்புவிடுக்கிறார்.

என்ன செய்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள்?

ட்விட்டரில் அப்டேட்!

கிட்டத்தட்ட புதுக் கட்சியைத் தொடங்குவதுபோல மிகப்பெரிய வேலை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இருக்கிறது. கொரோனாத் தொற்று மீடியா புல்லட்டின் போல நாள்தோறும் கட்சி நிர்வாகிகளின் வெளியேறுதல் படலம் நடந்து ஒருவழியாக அமைதியாகியிருக்கிறது கட்சி. ஈ.சி.ஆரில் இருக்கும் கமலின் வீட்டில் ஒருமுறை தீவிபத்து ஏற்பட்டதால் அந்த வீட்டை அப்படியே போட்டுவிட்டு, தற்போது சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ‘சோமர்செட்’ ஓட்டலில்தான் கமல் நிரந்தரமாகத் தங்குகிறார். அவருக்காக ஓட்டலின் 5-வது மாடி முழுமையாக ஒதுக்கப்பட்டு, வீடு போன்ற செட்டப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுப் பரவலால் வெளியில் செல்லாமல் தொடர்ந்து ஓய்வில் இருக்கிறார் கமல். அதேநேரம், தோல்வி குறித்தும், நிர்வாகிகளின் வெளியேறுதல் குறித்தும், கட்சியை மறுகட்டமைப்பு செய்வது பற்றியும் நாள்தோறும் இணையவழியே நிர்வாகிகளுடன் உரையாடிவருகிறார் கமல்.

மேலும், தனிப்பட்ட முறையில் கட்சியை எப்படிக் கொண்டு செல்லலாம் என்று அனைவரும் தனக்கு மெயில் அனுப்புமாறும் கூறியிருக்கிறார். காலியாக உள்ள அனைத்துப் பொறுப்புகளுக்கும் ஆட்களை நியமிக்கவும் ஆலோசனை நடக்கிறது. கொரோனாப் பரவல் முடிந்து அனுமதி கிடைத்ததும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ பட ஷூட்டிங், ‘இந்தியன் 2’ ஷூட்டிங் என இரண்டிலும் விரைவில் பங்கேற்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு