Election bannerElection banner
Published:Updated:

`எதிர்க்கட்சிகள் 50-ஐ தாண்டாது!’ - பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை... பின்னணி என்ன?

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

தி.மு.க கூட்டணிக் கட்சிகளைத் தவிர, எதிர்க் கூட்டணியிலுள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் மொத்தமே 50 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்க முடியாது என பிரசாந்த் கிஷோர் சொல்வது அதீத நம்பிக்கையா, எதார்த்தமா?

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. `நல்லபடியாக முடித்துவிட்டோம்’ என்ற நம்பிக்கையில் சென்னையிலிருந்து கிளம்பினார் தி.மு.க-வுக்கு தேர்தல் வியூகங்களை அமைத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர். இந்தநிலையில், ரிப்பப்ளிக் டி.வி-யின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்குப் பேட்டியளித்த பி.கே, ``தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகக் களமாடிய மொத்த கட்சிகளும் 50 தொகுதிகளில்கூட வெற்றிபெறாது” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்

எந்த நம்பிக்கையில் இவ்வாறு கூறினார் பி.கே? தி.மு.க-வினர் மத்தியில் விசாரித்தோம். ``மொழி, பண்பாடு, கலாசாரம் போலவே தேர்தல் அரசியலிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து மாறுபடுகிறது தமிழகம். உ.பி., டெல்லி முதல் ஆந்திரா வரை தேர்தல் வியூகம் அமைப்பதற்கு எவ்வாறான வியூகங்களை பிரசாந்த் கிஷோர் கையாண்டாரோ, அவற்றில் ஒன்றைக்கூட தமிழகத்தில் கையாளவில்லை. ஏனெனில், வடக்கில் உள்ளவற்றை தெற்கில் திணிக்க முடியாது.

உதாரணமாக, மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கு வேலை செய்யும் பி.கே., அங்கு பா.ஜ.க-வின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதைக் கண்டு மம்தா மீது அனுதாப அலையை வீசவைத்தார். அது போன்ற எதையும் இங்கு பி.கே அமல்படுத்தவில்லை. ஏனெனில், ஆளும் அ.தி.மு.க மீது மக்களுக்கு அப்படியொன்றும் பிடிமானம் இல்லை என்பதை வந்த சில மாதங்களிலேயே கண்டுணர்ந்துவிட்டார் பி.கே.

தமிழகர்களைப் பொறுத்தவரை நன்றி மறவாதவர்கள் என்பதை அறிந்த பி.கே., அதையே ஆயுதமாக்கி கொரோனா பேரிடர் காலத்தில் `ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை தி.மு.க-வுக்குக் கொடுத்தார். லாக்டெளனில் சும்மா வீட்டில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த தி.மு.க நிர்வாகிகளை மக்களைத் தேடி ஓடவைத்தார். லட்சக்கணக்கில் செலவு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கவைத்தார். இதுதான் தேர்தல் சமயத்தில் தி.மு.க வேட்பாளர்களுக்குப் பெரிதும் கைகொடுத்தது. இதன் காரணமாகவே, பெரும்பாலும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கே மீண்டும் சீட் வழங்கினார் ஸ்டாலின்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

சமூக வலைதளங்களில் தி.மு.க-வைத் தாக்கித்தான் பல செய்திகள், மீம்ஸ்கள் வருவதைக் கண்ட பி.கே., அதை எதிர்கொள்ளும் உத்வேகத்தை தி.மு.க ஐ.டி விங்குக்கு வழங்கினார். இவ்வாறு தொடர்ச்சியாக ஓராண்டாக தமிழக அரசியலைப் பார்த்து, படித்துணர்ந்து, அனுதாபத்தை உருவாக்கி அதன் மூலம்தான் தி.மு.க வெற்றிபெறும் என்கிற நிலை இல்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

அதேநேரம், ஆட்சிக்கு எதிரான மனநிலை பெருமளவுக்கு இல்லை என்பதையும், ஆனாலும்கூட `10 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டார்கள், ஜெயலலிதாவுக்குப் பிறகு நன்றாக சம்பாதித்துவிட்டார்கள் போதும்’ என்ற மனநிலையில் மக்கள் இருப்பதையறிந்து, அதற்கேற்ப அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழலைப் பற்றி மட்டுமே ஸ்டாலினைப் பேசவைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற கடைசி பிரசாரம் மூலம், ஊர் ஊராக ஸ்டாலினைப் பயணிக்கவைத்து, மனுக்களைப் பெற்றதோடு அவற்றுக்கு ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் தீர்வுகாணப்படும் என்று சொன்னது பெரும் வரவேற்பைப் பெற்றதாக ஐபேக் தனது ரிப்போர்ட்டில் குறிப்பிட்டது.

ஐபேக் அலுவலகத்தில் ஸ்டாலின்
ஐபேக் அலுவலகத்தில் ஸ்டாலின்

ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவன்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஐபேக் அலுவலகத்தில் இருந்தபடியே நிலவரத்தை கவனித்துவந்தார் பி.கே. முன்பைவிட தற்போது அ.தி.மு.க-வுக்கு நிகராக வாக்குக்குப் பணம் கொடுத்திருப்பது நல்ல பலனைத் தந்திருப்பதாக தமிழகம் முழுவதிலுமிருந்தும் ஐபேக் பணியாளர்கள் ரிப்போர்ட் அளித்தபடியே இருந்தனர். வாக்குப்பதிவு முடிந்து எக்ஸிட் போல் எடுக்கப்பட்டபோது, `வாக்காளர்களிடம் தி.மு.க-வுக்கு அதீத ஆதரவும் இல்லை, அ.தி.மு.க-வுக்கு அதீத எதிர்ப்பும் இல்லை. ஆட்சியை மாற்ற வேண்டும் என்று நினைத்த கணிசமான வாக்காளர்கள் கமல், சீமான், டி.டி.வி-யைவிட தி.மு.க-வை பிரிஃபர் செய்தனர்’ என்றுதான் எக்ஸிட் போலில் தகவல் கிடைத்தது.

மேற்கு வங்கத்தில் நேரடியாக பா.ஜ.க-வை எதிர்ப்பதால், பி.கே-வே நேரடியாக அங்கு தங்கி பணிபுரிந்தார். அங்கு கள நிலவரத்தை கணித்து பா.ஜ.க டபுள் டிஜிட்டைத் தாண்டாது, அதாவது 100 தொகுதிகளைக் கூடத் தொடாது என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். தமிழ்நாடு தேர்தல் பற்றி மட்டும் `50-க்கும் குறைவான தொகுதிகளைத்தான் ஒட்டுமொத்த எதிர் அணியினரும் பெறுவார்கள்’ எனச் சொல்லியிருக்கிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக வியூக அமைப்பாளராக சிறப்பாகப் பணியாற்றிவரும் பி.கே., உ.பி தவிர மற்ற அனைத்து மாநிலத் தேர்தல்களிலும், அவர் பணிபுரிந்த கட்சிக்கு வெற்றியையே தேடித்தந்திருக்கிறார். அதனால், அவரது இந்த அனுமானம் நிச்சயம் ரிசல்ட்டில் பிரதிபலிக்கும் என்று நம்புகிறோம்” என்பதோடு முடித்துக்கொண்டனர்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

ஏப்ரல் 6-ம் தேதி ஐபேக் அலுவலகத்துக்கு ஸ்டாலின் சென்றபோது, ‘தி.மு.க கூட்டணி 200 தொகுதிகளைத் தாண்டும்’ என்று பிரசாந்த் கிஷோர் சொன்னதாகத் தகவல் வெளியானது. தற்போது அதே பிரசாந்த் கிஷோர், இன்று சுமார் 50 தொகுதிகளை எதிர்க்ப்கூட்டணி பெறும் என்கிறார். அப்படியென்றால் தி.மு.க-வின் எண்ணிக்கை குறைகின்றதே... எதை உண்மை என நம்புவது?! உண்மை என்ன என்பது மே மாதம் 2 -ம் தேதி தெரிந்துவிடும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு