Published:Updated:

``எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமூகநீதிக்காகக் குரல் கொடுத்தவர்கள்; ஆனால் எடப்பாடி, பன்னீர்?” - திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமூகநீதிக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகியோர் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக பா.ஜ.க-வின் 10 சதவிகித நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள்.” என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

``எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமூகநீதிக்காகக் குரல் கொடுத்தவர்கள்; ஆனால் எடப்பாடி, பன்னீர்?” - திருமாவளவன்

”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமூகநீதிக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகியோர் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக பா.ஜ.க-வின் 10 சதவிகித நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள்.” என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

Published:Updated:
தொல்.திருமாவளவன்

தூத்துக்குடியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பலத்தைக்கொண்டு செயல்திட்டம் போட்டு நடைமுறைபடுத்திவருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்  இருந்த காலத்தில் சமூகநீதிக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள்.

திருமாவளவன்
திருமாவளவன்

பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள்.  இட ஒதுக்கீட்டுக்கு எம்.ஜி.ஆர் வருமான வரம்பு விதித்தபோது கடுமையான எதிர்ப்பு எழுந்தது. கடந்த 1980-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெறக்கூடிய அளவுக்கு மக்கள், எம்.ஜி.ஆரின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.  அதனால், தேர்தலில் தோல்வியைத் தழுவ நேரிட்டது. உடனடியாக  அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாகக் கூறினார்.  

அதன்படி, அந்த வருமான வரம்பு என்ற அரசாணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஓ.பி.சி மக்களுக்கு 30 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தினார். இது எம்ஜிஆரின்ஆட்சியில் நடந்த வரலாறு. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்தார். 50 சதவிகித உச்சவரம்பை மீறி இருந்தபோது, அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடி, அந்த உரிமையைப் பாதுகாப்பதற்கும், ஒன்பதாவது அட்டவணையில் இணைப்பதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டார். தற்போதும் அது பாதுகாப்பான முறையில் ஒன்பதாவது அட்டவணையில் இடம்பெற்றிருப்பதற்கு அ.தி.மு.க அரசு, குறிப்பாக ஜெயலலிதா தலைமையிலான அரசுதான் காரணம்.  

வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்கள்
வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்கள்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அகியோர் சமூகநீதிக்காகப் பாடுபட்ட நிலையில், அவர்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு  தற்போது கட்சியை நடத்திக்கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்  தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக பா.ஜ.க-வின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள். இது அ.தி.மு.க கட்சிக்கு விரோதம். இது மக்களுக்கு எதிரானது என்பதை அ.தி.மு.க-வினர் புரிந்துகொள்ள வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை பெற்றிருப்பது ஒரு நீண்டகாலப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.  உச்ச நீதிமன்றம் தன்னியல்பாக அதிகாரத்தைக் கையில் எடுத்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆறு பேரில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். நான்கு பேர் இலங்கையைச் சார்ந்தவர்கள். அவர்களைச் சிறப்பு முகாமில் அடைக்கக் கூடாது. இலங்கையிலும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், அங்கு அனுப்புவது குறித்து சிந்திக்க வேண்டும் என, ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.  

கிழிக்கப்பட்ட பதாகைகள்
கிழிக்கப்பட்ட பதாகைகள்

அயல்நாடுகளுக்கு உறவினர்களோடு தங்குவதற்குச் செல்ல விரும்பினால் அயல்நாடு செல்வதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். பா.ஜ.க-வின்  முன்னணித் தலைவர்களான மோடி, அமித் ஷா ஆகியோர் நேரத்துக்கு ஒன்றைப் பேசுவது, சூழலுக்கு ஒன்றைப் பேசுவது என்கிற நிலைப்பாட்டைக்கொண்டவர்கள்.  

`ஒரே மொழி, ஒரே கலாசாரம்’ என்பதுதான் பா.ஜ.க-வின் நிலைப்பாடு. நாடாளுமன்ற நடவடிக்கைகளை முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியைத் தவிர பிற மொழியை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.  இந்தி பேசக்கூடிய நாடாக ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றிவிட வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த நிலையில் அமித் ஷா, தமிழ்மீது அக்கறை இருப்பதைப்போல தமிழ்நாட்டுக்கு வந்து தமிழில் மருத்துவம் கற்றத்தர வேண்டும் என்று சொல்லியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது” என்றார்.

பதாகைகள்
பதாகைகள்

முன்னதாக, திருமாவளவனை வரவேற்பதற்காக விமான நிலையத்துக்கு முன்பு கட்சியினர் திரண்டிருந்தனர். இதில், கட்சித் துண்டுகளை தோளில் போட்டுக்கொண்டு சிலர், ‘ஸ்டெர்லைட்  ஆலையைத் திறக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வீழ்ந்தது பொருளாதாரம்’ என்ற பதாகைகளை ஏந்திக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர்.  இதைப் பார்த்த நிர்வாகிகள் அவர்களிடமிருந்து பதாகைகளைப் பிடுங்கிக் கிழித்து அவர்களை விரட்டியடித்தனர்.  இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.