Published:Updated:

“கட்சிக்காக விட்டுக் கொடுங்கண்ணே!” - சமரசம் பேசிய முனுசாமி; உடன்படாத பன்னீர்

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் வேட்பாளர் அந்தஸ்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்த அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இப்போது எதிர்கட்சித் தலைவர் பொறுப்பைக் கேட்பதால் அ.தி.மு.க-வில் அனல் கிளம்பியிருக்கிறது.

மொத்த எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையில் பத்து சதவிகிதம் எம்.எல்.ஏ-க்களை ஒரு கட்சி பெற்றிருந்தால், அக்கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்த்து வழங்கப்படும். ஒருவேளை இரண்டு கட்சிகள் பத்து சதவிகிதம் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் பெற்றிருந்தால், எந்தக் கட்சியிடம் மிகுதியான எம்.எல்.ஏ-க்கள் பலமிருக்கிறதோ, அவர்களுக்கு எதிர்கட்சித் அந்தஸ்த்து வழங்குவது வழக்கம். இந்த கணக்கின்படி, தமிழகத்தில் குறைந்தபட்சம் 24 எம்.எல்.ஏ-க்களை ஒரு கட்சி பெற்றிருந்தால், அந்த கட்சியைச் சேர்ந்தவருக்கு சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்த்து வழங்கப்படும்.

அமைச்சருக்கு நிகரான அந்தஸ்த்துடைய இந்தப் பதவிக்கு சலுகைகள் ஏராளம். அரசு பங்களா, போலீஸ் பாதுகாப்பு, வாகன வசதி, பயணப்படி, மருத்துவ வசதிகள் என ஆட்சி முடியும் வரை அரசின் சலுகைகளை அனுபவிக்கலாம். மிக முக்கியமான விவகாரங்களை சட்டமன்றத்தில் எழுப்பி, அதன்மீது விரிவான விவாதம் நடத்தக் கோரவும், சட்டமன்றத்தில் முன்வரிசையில் முதல் இருக்கையில் அமரவும் எதிர்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்
விகடன்

நெடுஞ்செழியன், கருணாநிதி, க.அன்பழகன், ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின் எனப் பல தலைவர்கள் அலங்கரித்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவியை, தனக்கு வேண்டுமென பன்னீர் கேட்பதுதான் எடப்பாடியை கடுப்பேற்றியிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஜெயலலிதாவுக்கு பச்சைத் துரோகம் செய்தவர்கள் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் - மு.க ஸ்டாலின் விளாசல்

இதுகுறித்து அ.தி.மு.க சீனியர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், ``எதிர்கட்சித் தலைவர் பஞ்சாயத்து தேர்தல் ரிசல்ட் வெளிவருவதற்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது. தனக்கும் எடப்பாடிக்கும் நெருங்கிய சில நிர்வாகிகளிடம், தன்னுடைய விருப்பத்தை பன்னீர் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். `ஒருவேளை நம்ம கட்சி ஆட்சியமைக்க முடியலைனா, எதிர்கட்சித் தலைவர் பதவியை நான் பொறுப்பேத்துக்கனும்னு என் ஆதரவாளர்கள் விரும்புறாங்க’ என்றிருக்கிறார் பன்னீர். இந்தத் தகவல் எடப்பாடியின் காதுக்குச் சென்றும், அவர் கண்டுகொள்ளவில்லை. அன்றிலிருந்தே பன்னீரின் மனம் தகிக்க ஆரம்பித்துவிட்டது.

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

தேர்தல் ரிசல்ட்டில் அ.தி.மு.க 65 இடங்களில் வெற்றி பெற்றதும், தனக்கு நெருக்கமான தென்மாவட்ட வழக்கறிஞர் பிரமுகரிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் பன்னீர். அப்போது, `வன்னியருக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் பிரச்னை என இந்தத் தேர்தலில் தென்மாவட்டத்துல நாம சந்திச்ச எதிர்ப்புகள் ஏராளம். இதற்கு காரணமே எடப்பாடி தான். தேவையில்லாத விவகாரங்களைக் கிளப்பி, தேர்தல் நேரத்துல நமக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கிட்டார். கடைசியில, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை வாங்கிக் கொடுத்த சி.வி.சண்முகமே ஜெயிக்கலை. வன்னியர் சமூக வாக்குகள் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களைத் தவிர பிற பகுதிகள்ல அ.தி.மு.க-வுக்கு லாபத்தைத் தரலை.

இடறிய எடப்பாடி... டபுள் கேம் பன்னீர்!

ஆனால், எல்லா எதிர்ப்பையும் மீறி தென்மாவட்டத்துல 20 தொகுதிகள்ல அ.தி.மு.க ஜெயிச்சிருக்கு. அம்மா இருந்தபோதே எதிர்கட்சித் தலைவராகவும், துணைத் தலைவராகவும் நான் இருந்திருக்கேன். இப்ப நானே எதிர்கட்சித் தலைவர் பதவியை நேரடியாகக் கேட்டா அது நல்லா இருக்காது. நீங்க நாலு பேருகிட்ட பேசும்போது, எனக்கு ஆதரவாப் பேசுங்க’ என்றிருக்கிறார். இதன்படி, அந்த வழக்கறிஞர் பிரமுகரும் பன்னீருக்கு ஆதரவாகப் பேச, விவகாரம் எடப்பாடியிடம் எட்டியிருக்கிறது. பன்னீரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி தொகுதியில் வெற்றி பெற்றவருமான கே.பி.முனுசாமியை போடிநாயக்கனூருக்கு அனுப்பினார் எடப்பாடி.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

மே 4-ம் தேதி போடியில் பன்னீரைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ‘கட்சிக்காக நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுங்கண்ணே’ என்றதும்தான் தாமதம், பன்னீருக்கு சுர்ரென கோபம் தலைக்கேறிவிட்டது. `முதல்வர் வேட்பாளரை விட்டுக் கொடுக்கச் சொன்னீங்க, விட்டுக் கொடுத்தேன். வழிகாட்டுதல் குழுவுல அவர் தன் ஆதரவாளர்களை அதிகமாக நியமிச்சப்போ விட்டுக் கொடுக்கச் சொன்னீங்க, விட்டுக் கொடுத்தேன். இதுக்கு மேல விட்டுக் கொடுக்குறதுக்கு எதுவும் இல்லைங்க. எதிர்கட்சித் தலைவர் பதவியை அவருக்கு விட்டுக் கொடுக்குறதா தேர்தலுக்கு முன்னாடி நாம எதுவும் பேசிக்கலை. நான் தான் அந்தப் பொறுப்பை ஏத்துக்கணும்னு கட்சிக்காரங்க விரும்புறாங்க. மே 7-ம் தேதி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடக்குதுல, அங்க அதையெல்லாம் பேசிக்கலாம்’ என்று தடாலடியாக கூறியிருக்கிறார் பன்னீர். மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் முனுசாமி கிளம்பிவிட்டார்” என்றனர்.

`அதிர்ஷ்டத்தால் முதல்வரானவர் எடப்பாடி; முன்னேறி முதல்வராகிறார் ஸ்டாலின்!'- கருணாஸ் கலகல!

அ.தி.மு.க வெற்றிபெற்றுள்ள 65 இடங்களில், சரிபாதிக்கு மேல் கொங்கு மண்டலத்திலிருந்துதான் கிடைத்திருக்கிறது என்பதால் எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்தப் பதவியையும் எடப்பாடிக்கு தாரைவார்த்துவிட்டால், கடைசி வரை அ.தி.மு.க-வில் தான் நம்பர் 2-வாக மட்டுமே இருக்க முடியும் என்று யோசிக்கிறாராம் பன்னீர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மூலமாக பன்னீரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றன. கொங்கு மண்டலத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``இதெல்லாம் கட்சிக்குள் எழும் சிறு சிறு சச்சரவுகள்தான். எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, எல்லாவற்றையும் பேசி முடித்துவிடுவோம். எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் தேர்தெடுக்கப்படுவார்” என்றார்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

கொரோனா ஊரடங்கால் ஜெ. சமாதியில் மீண்டும் ஒரு தர்மயுத்தம் தொடங்குவதற்கு பன்னீருக்கு வாய்ப்பில்லை. மவுனமாக தர்மயுத்தம் நடத்துவதற்கு அவரிடம் போதிய எம்.எல்.ஏ-க்கள் பலமும் இல்லை. என்ன செய்யப் போகிறார் பன்னீர் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு