Published:Updated:

`100 பவுன்சர்கள் முதல் ஓபிஎஸ் தம்பியின் எதிர்பாரா என்ட்ரி வரை!'- தினகரன் வீட்டு விசேஷ ஹைலைட்ஸ்.

சசிகலா, இளவரசி, விவேக் உள்ளிட்டோர் மேடைக்குச் சென்றனர் . அப்போது `புரட்சித்தாயே...’ என சசிகலா ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

தஞ்சாவூரில் நடைபெற்ற தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலா, மணமக்களை வாழ்த்தினார். அப்போது மேடையில் திரண்டிருந்த சசிகலா ஆதரவாளர்கள் `புரட்சித்தாயே...’ என கோஷமிட்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா கலந்துகொண்டதுடன், தினகரனிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் மகள் ஜெயஹரிணி - தஞ்சாவூர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசி திருமணம் கடந்த மாதம் சசிகலா தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக, கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு இன்று தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டுக்கு அமைக்கப்படுவதுபோல் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு, பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கிருஷ்ணசாமி வாண்டையார் செய்திருந்தார்.

தினகரன் மகள் திருமணம்
தினகரன் மகள் திருமணம்

சசிகலா கலந்துகொள்வதால் சென்னையிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த பவுன்சர்கள் கடும் கெடுபிடியுடன் நடந்துகொண்டதால், நிகழ்ச்சிக்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகள் முகம் சுளித்துக்கொண்டனர். காலை 10:30 மணிக்கு டி.டி.வி.தினகரன், அவர் மனைவி அனுராதாவுடன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார். மேடையில் நின்றபடி இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் டாக்டர் வெங்கடேஷ், சிவக்குமார் உள்ளிட்டவர்கள் வந்தனர். அப்போது, மணமக்களை வாழ்த்த ஒரே நேரத்தில் அனைவரும் மேடையில் ஏறி முண்டியடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

தினகரன் மகள் திருமணம்
தினகரன் மகள் திருமணம்

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், சிறிது நேரம் கழித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நிகழ்ச்சி மேடை ஏறினார். அப்போது, தினகரன் அவரை வரவேற்றார். ஓ.ராஜா தினகரனைக் கும்பிட்டபடி மணமக்கள் அருகே நின்று போட்டோ எடுத்துக்கொண்டதுடன், சிறிது நேரம் தினகரனிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி... தஞ்சையில் பிரமாண்டம்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

அதையடுத்து மதியம் 2 மணியளவில் சசிகலா மணமக்களை வாழ்த்த வருகைபுரிந்தார். சசிகலா வருவது தெரிந்ததும் மேடையில் பெரும் கூட்டம் கூடியது. 100-க்கும் அதிகமான பவுன்சர்கள் இருந்தும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் திணறிப்போனார்கள். பின்னர், சசிகலா, இளவரசி, விவேக் உள்ளிட்டோர் மேடைக்குச் சென்றனர் . அப்போது 'புரட்சித்தாயே!' என சசிகலா ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சில நிமிடங்களில் சசிகலா மேடையின் இடது புறத்திலிருந்த மணமகள் அறைக்குச் சென்றார்.

தினகரன் மகள் திருமணம்
தினகரன் மகள் திருமணம்

அறைக்கு வெளியே பலர் கூடி நின்றதால் டாக்டர் வெங்கடேஷ், 'தயவு செய்து எல்லோரும் கீழே இறங்குங்க!' எனச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார். ஓரளவுக்கு நிலைமை சீரான பிறகு வெளியே வந்த சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றனர். சசிகலாவின் வருகையால் பூண்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினகரன் மகள் திருமணம்
தினகரன் மகள் திருமணம்

சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ் பேசியிருக்கும் நிலையில், அவரின் தம்பி ஓ.ராஜா தினகரனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இணக்கம் காட்டியது அதிமுக-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு