`அல்லிநகரத்தில் தம்பி; பெரியகுளத்தில் மச்சான்!’- தேனி உள்ளாட்சியில் ஓ.பி.எஸ் குடும்பம்
தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா விருப்ப மனு அளித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட நேற்றும் இன்றும் விருப்ப மனுக்கள் அளிக்கப்படுகின்றன. தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்கும் இந்நிகழ்வில், பலர் கலந்துகொண்டு விருப்ப மனுக்கள் பெற்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 8 ஒன்றியங்களுக்கான விருப்ப மனுக்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டன. நேற்று காலை நல்ல நேரம் இல்லாததால், பலர் இன்று விருப்ப மனுக்களைப் பெற இருக்கிறார்கள். அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சையதுகான் தலைமையில், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் முன்னிலையில், விருப்ப மனுக்களை அ.தி.மு.க-வினர் பெற்றனர்.
இந்த நிலையில், தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா விருப்ப மனு பெற்றுக்கொண்டார். அதேபோல், பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட ஓ.பன்னீர்செல்வத்தின் மச்சான், வழக்கறிஞர் சந்திரசேகர் விருப்ப மனு பெற்றுக்கொண்டார். இச்சம்பவம் அ.தி.மு.க-வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read
“ஆவினில் ஆட்டம் போடுகிறார் ஓ.ராஜா!”

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஒருவர், ``ஓ.ராஜா கடந்த 2011 முதல் 2016 வரை பெரியகுளம் நகராட்சித் தலைவராக பதவிவகித்தார். அதன் தொடர்ச்சியாக மதுரை ஆவின் தலைவர், பிறகு தேனி ஆவின் தலைவர் ஆகிய பதவிகள். இதில், ஆவினுக்கும் ஓ.ராஜாவுக்கும் ராசி இல்லைபோல, அதனால்தான் மீண்டும் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு பெற்றிருக்கிறார். அதேபோல, பெரியகுளம் நகராட்சிக்கு ஓ.பி.எஸ் மச்சானும் வழக்கறிஞருமான சந்திரசேகர் விருப்ப மனு அளித்திருக்கிறார். பெரியகுளத்தில், கட்சிக்குள் சீனியர்கள் பலர் இருக்கும்போது சந்திரசேகர் விருப்ப மனு பெற்றது கட்சியினர் இடையே விவாதமானது. இருந்தாலும், விருப்ப மனு பெறுவதை வைத்து எதுவும் சொல்லிவிட முடியாது. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுதான் இறுதியாது.” என்றார்.
தன் மகனை தேனி நாடாளுமன்ற உறுப்பினராக்கி, தற்போது தன் தம்பி, மச்சானை நகராட்சித் தலைவர்களாக உட்கார வைத்துவிட்டால் போதும் என்ற கணக்கை கையில் எடுத்துள்ளாரா ஓ.பி.எஸ்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.