Published:Updated:

கேன்சலான டெல்லிப் பயணம்... மலப்புரம் ஜோதிடர் ஆரூடம்! - ஓ.பி.எஸ் `யூ டர்ன்’ பின்னணி

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

டெல்லியின் முடிவால் ஓ.பி.எஸ் சற்று அப்செட் ஆகியிருந்தாலும், மகன் ரவீந்திரநாத்துக்கு அடுத்த வருடம் பதவி கிடைத்துவிடும் என ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பதால் மனதைத் தேற்றிக்கொண்டாராம்.

10 நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். டெல்லியிலிருந்து அமெரிக்கா செல்ல திட்டம் வகுத்திருந்த நிலையில், திடீரென டெல்லி விசிட் ரத்து செய்யப்பட்டிருப்பது அ.தி.மு.க வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்க பையனுக்குக் கொடுத்தா, மாநிலங்களவையிலிருந்து ஒருவருக்குக் கொடுக்கணும்னு எடப்பாடி கேட்பார்.
.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், ``விரைவிலேயே மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளது. இதில், தன் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பதவியைப் பெற்றுத்தர ஓ.பி.எஸ் கடுமையாக முயன்று வந்தார். இது தொடர்பாக அமெரிக்கா செல்வதற்கு முன்னர், நவம்பர்7-ம் தேதி இரவு டெல்லியில் சில பி.ஜே.பி தலைவர்களைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், இரண்டு நாள்களுக்கு முன்னதாக டெல்லியிலிருந்து வந்த போன்கால் அவரது பயணத்தையே மாற்றிவிட்டது.

பி.ஜே.பி-யின் முக்கிய டெல்லிப் பிரதிநிதி ஒருவர்தான் ஓ.பி.எஸ்ஸிடம் பேசினார். `நவம்பர்13-ம் தேதி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குது. இதுக்குள்ள மத்திய அமைச்சரவையை விரிவுப்படுத்தி, முக்கிய இலாக்காக்களை தங்களுக்கு ஒதுக்கணும்னு சிவசேனா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் பிரதமருக்கு நெருக்கடி கொடுக்குறாங்க. ஏற்கெனவே மகாராஷ்ட்ராவுல சிவசேனா கொடுக்குற டார்ச்சரால மோடி கடும் அப்செட்ல இருக்கார். மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையோட இருந்தாலும், மாநிலங்களவையில 81 எம்.பி-க்கள் பலம்தான் பி.ஜே.பி-க்கு இருக்கு. அ.தி.மு.க, ஜே.டி.(யு), சிவசேனா ஆதரவுடன்தான் எந்த மசோதாவையும் நிறைவேற்ற வேண்டியதிருக்கு.

அமெரிக்காவுக்கு புறப்படும் ஓ.பி.எஸ்
அமெரிக்காவுக்கு புறப்படும் ஓ.பி.எஸ்

உங்க பையனுக்குக் கொடுத்தா, மாநிலங்களவையிலிருந்து ஒருவருக்குக் கொடுக்கணும்னு எடப்பாடி கேட்பார். இப்ப இருக்குற நெருக்கடியான சூழல்ல, அ.தி.மு.க-வுக்கு அமைச்சரவையில இடமளிக்க மேலிடம் விரும்பல. நீங்க தேவையில்லாம அலைஞ்சு நேரத்த வீணாக்க வேண்டாம்’ என்று அட்வைஸ் செய்துள்ளார். இதைத் தொடர்ந்துதான் ஓ.பி.எஸ்ஸின் டெல்லிப் பயணம் ரத்து செய்யப்பட்டு, சென்னையிலிருந்து துபாய் வழியாக அமெரிக்காவுக்குப் பறக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது” என்றனர்.

Vikatan

டெல்லியின் முடிவால் ஓ.பி.எஸ் சற்று அப்செட் ஆகியிருந்தாலும், மகன் ரவீந்திரநாத்துக்கு அடுத்த வருடம் ஏப்ரலில் நிச்சயம் பதவி கிடைத்துவிடும் என கேரளாவின் மலப்புரம் பிரசன்ன ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பதால் மனதை தேற்றிக் கொண்டாராம். இப்போதிருக்கும் பதவியை எக்காரணத்தைக் கொண்டும் இழந்துவிட வேண்டாமென்று கூறியுள்ள அந்த ஜோதிடர், 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு ஓ.பி.எஸ்ஸின் மீன ராசி, சிம்ம லக்னத்துக்கு நல்ல நேரம் அமையும். அதன்பிறகு எந்த அரசியல் முடிவையும் எடுத்துக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கியுள்ளாராம்.

ஜோதிடம்
ஜோதிடம்

ஜோதிடர் தந்த நம்பிக்கையில், கிளம்பும் தருவாயில் தன்னைச் சந்தித்து வாழ்த்து கூறியவர்களுக்கு, ஓ.பி.எஸ் ஜாலி மூடில் நன்றி சொல்லிவிட்டு அமெரிக்கா பறந்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு