Published:Updated:

ஈ.பி.எஸ் 8,835; ஓ.பி.எஸ் 5,700 - இருவரின் வெளிநாட்டுப் பயணத்தால் இத்தனை கோடி வரும்... ஆனா...

 இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்

நடந்துமுடிந்த முதலீட்டாளர்கள் மாநாடு கணக்குகளே என்னானது என்பதற்கு அரசிடம் பதிலில்லை. இப்போது, வெளிநாடு விசிட் கணக்குகளையும் சேர்த்துக்கொண்டால், 14,500 கோடி நிதி தமிழகத்திற்கு வரவேண்டும். இது எப்போது வரும் என்பது காலத்துக்கே வெளிச்சம்.

பாண்டிய, சேர, ஈழ தேசங்களை வென்றெடுத்த இராஜேந்திர சோழன், சாளுக்கிய தேசங்களையும் சுழற்றி தன் உடைவாளுக்குள் சொருகிக்கொண்டு, கி.பி.1019-ல் கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டார். 'கங்கைகொண்ட சோழன்' என்கிற பட்டமும் அவரைத் தேடிவந்தது. மிகச் சரியாக, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்ட இரண்டு பேர்... அட, நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் தாங்க, தமிழகத்தின் நெற்களஞ்சியங்களைப் பொற்காசுகளால் நிரப்ப 12 ஆயிரம் மைல்களுக்கு அப்பாலும் சென்று முதலீடுகளை வாரிச் சுருட்டித் திரும்பியுள்ளனர். முதலீடுகள் கொண்டுவந்த பை ஓட்டைப் பையா என்பது விவாதத்திற்கு உரியது என்றாலும், திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய இவ்விருவரும் சாதித்தது என்ன... சற்று திரும்பிப்பார்ப்போம் வாருங்கள்...

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
லண்டனில் எடப்பாடி பழனிசாமி
லண்டனில் எடப்பாடி பழனிசாமி

இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு 14 நாள்கள் பயணமாகக் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கிளம்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலில் லண்டன் நகருக்குச் சென்றார். அங்கு செயல்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் சேவை, கொசுக்களைக் கட்டுப்படுத்தும் செயல்முறைகளை ஆய்வு செய்ததோடு, பிரபலமான கிங்ஸ் மருத்துவமனையையும் சுற்றிப் பார்த்தார். மருத்துவப் பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடு, கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

செப்.2-ம் தேதி அமெரிக்கா சென்ற முதல்வர் எடப்பாடி, பஃபல்லோ நகரிலுள்ள கால்நடைப் பண்ணையில் கடைபிடிக்கப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார். இத்தொழில்நுட்பங்களை, சேலம் மாவட்டம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடைப்பண்ணை பூங்காவில் செயல்படுத்தவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டார். செப்டம்பர் 3-ம் தேதி, நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், 2,780 கோடி ரூபாய் மதிப்பிலும் சான் ஹூசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 2,300 கோடி ரூபாய் மதிப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மாட்டுப் பண்ணையில் முதல்வர்
மாட்டுப் பண்ணையில் முதல்வர்
அமெரிக்காவில் எடப்பாடி பழனிசாமி
அமெரிக்காவில் எடப்பாடி பழனிசாமி

இதைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள அனெஹெய்ம் நகருக்குச் சென்ற முதல்வர், அங்கு செயல்படுத்தப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை ஆய்வுசெய்தார். இத்திட்டத்தை தமிழகத்தில் மேம்படுத்தி செயல்படுத்திட மாதிரி அலகு அமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். துபாய் சுற்றுப்பயணத்தில், 3,750 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆக, மொத்தம் 41 நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 8,835 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக மார்தட்டுகிறார் எடப்பாடியார். சரி, இந்த முதலீடுகள் எப்போது தமிழ்நாட்டுக்கு வரும்? ஜெ.தீபாவின் மொழியில் சொல்ல வேண்டுமானால், ‘அதை அவர்தான் கூற வேண்டும்’.

ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தம் ஈர்த்திருந்தாலும் ஏற்படுத்தாத தாக்கத்தை, கோட் சூட்டோடு எடப்பாடியார் வலம் வந்த காட்சிகள் ஏற்படுத்திவிட்டன. தமிழக நெஞ்சங்களைத் தைத்துவிட்டன. "உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, எடப்பாடியாருக்குத்தான் கோட் சூட் கலக்கலா இருந்துச்சு” என்று நம்மிடம் சொன்ன ரத்தத்தின் ரத்தத்திடம், ‘நெசமாத்தான் சொல்றியா’ என்று கேட்கக்கூட நம்மால் முடியவில்லை. வெளிநாட்டுப் பயணத்தில் உடன் எடுத்துச்சென்ற பத்து கோட்- சூட்டுகளையும் பத்து லொகேஷன்களில் வைத்து போட்டோ ஷூட் முடித்துத் திரும்பியுள்ளார் எடப்பாடியார். இதுவே பெரிய சாதனைதான்.

ஈ.பி.எஸ் 8,835; ஓ.பி.எஸ் 5,700 - இருவரின் வெளிநாட்டுப் பயணத்தால் இத்தனை கோடி வரும்... ஆனா...
கோட், சூட் அணிந்தபடி எடப்பாடி பழனிசாமி
கோட், சூட் அணிந்தபடி எடப்பாடி பழனிசாமி
ரஜினி - கமல் அரசியல் ரூட்...  முன்பே கணித்த ஜூனியர் விகடன்!

இணை ஒருங்கிணைப்பாளரே வெளிநாடு பறக்கும்போது, ஒருங்கிணைப்பாளர் என்ன தக்காளி தொக்கா?! ‘போட்றா டிக்கெட்ட’ எனக் களத்தில் குதித்தார் ஓ.பி.எஸ். குருப்பெயர்ச்சி முடிந்தவுடன் அமெரிக்கா பயணத்திட்டம் ரெடியானது. நவ.9-ம் தேதி அமெரிக்கா சென்று இறங்கிய ஓ.பி.எஸ், வேட்டி சட்டையில் முட்டிவரை கோட் போட்டுக்கொண்டு வலம் வர, நவீன பாரதியாரோ என வெளிநாட்டினரே விழிகளை விரித்தனர். அவர்கள் சுதாரிக்கும் முன்னர், அவர்களிடமிருந்தே அரை டஜன் விருதுகளை வாரிக் குவித்ததில் ஒளிந்திருக்கிறது ஓ.பி.எஸ்ஸின் ராஜதந்திரம்.

ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பி.எஸ், வெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழகத்தில் தொழில் தொடங்கத் தேவையான உதவிகளை அளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார். சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிகாகோ குளோபல் ஸ்டாடஜிக் அலையன்ஸ் உதவியுடன், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் தமிழ்நாடு உறைவிட நிதிக்கு 700 கோடி மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தாண்டி, தனது துறை தொடர்பாக வேறெந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் ஓ.பி.எஸ் போடவில்லை. பத்து நாள்களும் விடுமுறை சுற்றுப் பயணமாகவே அவருக்கு அமைந்துவிட்டது.

OPS
OPS
ஓ.பி.எஸ். விருது பெறும் தருணம்
ஓ.பி.எஸ். விருது பெறும் தருணம்
அமெரிக்காவில் விருது பெரும் ஓ.பி.எஸ்.
அமெரிக்காவில் விருது பெரும் ஓ.பி.எஸ்.

தங்கத் தமிழ்மகன், ஆசியாவின் ரைசிங் ஸ்டார், வீரத் தமிழன், பண்பின் சிகரம் என வெளிநாடு விசிட்டில் விருதுகளைக் குவித்தது ஓ.பி.எஸ் தான். எடப்பாடியார் தனது வெளிநாடு விசிட்டில் விருது ஏதும் பெறவில்லை. 'ராசியப்பன் பாத்திரக்கடையில் வடிவேலு கோப்பைகளை அள்ளிய கணக்காக, அரைடஜன் விருதுகளை வாரிக் குவித்துள்ளார்' என எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தாலும் ஓ.பி.எஸ் அசரவில்லை. அவர் எண்ணமெல்லாம், எடப்பாடியார் எட்டாயிரம் கோடி முதலீடு என்று சொல்லியிருப்பதால், தன் பங்கிற்கு ஏதாவது சொல்லியாக வேண்டுமே என்பதில்தானிருந்தது. வீட்டுவசதி, குடிநீர், போக்குவரத்து போன்ற திட்டங்களுக்கு உலக வங்கி ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தன் பங்கிற்கு குறிப்பிட்டுள்ளார். 700 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தோடு இதைச் சேர்த்தால், மொத்தம் 5,700 கோடி வருகிறது. சரி... உலக வங்கித் தரப்பில் யாருடன் பேசினார், என்ன பேசினார்... இந்த நிதியெல்லாம் எப்போது வரும்… மறுபடியும் ஜெ.தீபா மொழியில் சொல்வதானால் ‘அதை அவர்தான் கூற வேண்டும்’.

வெளிநாடு விசிட் முடித்துவிட்டு எடப்பாடியார் தாயகம் திரும்பியபோது, விமானநிலையத்திலிருந்து க்ரீன்வேஸ் சாலை இல்லம் வரை தடபுடலான வரவேற்பளிக்கப்பட்டது. முதல்வரின் காருக்கு முன்னால் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் அணிவகுத்துச்சென்றனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்-ன் வருகைக்கு, நேருக்கு மாறான காட்சிதான் அரங்கேறியது. அவரது ஆதரவாளர்களான அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மதுசூதனன், மாவட்டச் செயலாளர்கள் ராஜேஷ், வாலாஜாபாத் கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன் என வெகுசிலரே விமானநிலையம் பக்கம் எட்டிப்பார்த்தனர். லோக்கல் எம்.எல்.ஏ -க்களான தி.நகர் சத்யா, விருகை ரவி கூட கிண்டி தாண்டவில்லை. இதிலிருந்தே ‘அமெரிக்கா கொண்ட சோழன்’ பட்டம் யாருக்குச் சென்றிருக்கும் என்பதை யூகிக்கலாம்.

எடப்பாடிக்கு வரவேற்பு
எடப்பாடிக்கு வரவேற்பு
எடப்பாடிக்கு வரவேற்பு
எடப்பாடிக்கு வரவேற்பு
ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு
ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு
ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு
ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, 2015 செப்டம்பரில் முதலாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, இரண்டரை லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்திருப்பதாகக் கூறினார். கடந்த ஜனவரி 25-ம் தேதி, இரண்டாவது முதலீட்டாளர் மாநாட்டை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூன்று லட்சம் கோடி ரூபாய் முதலீடு வரவிருப்பதாகக் கூறினார். இந்த முதலீடு கணக்குகள் என்னானது என்பதற்கு அரசிடம் பதிலில்லை. இப்போது, வெளிநாடு விசிட் கணக்குகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே, 14,500 கோடி நிதி தமிழகத்திற்கு வரவேண்டும். அது எப்போது வரும் என்பது காலத்துக்கே வெளிச்சம்.

``நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல!" - எடப்பாடி பழனிசாமி சிறப்பு நேர்காணல் #VikatanExclusive

கிராமப்புறத்தில் ‘அப்பன் வீட்டு சொத்து ஆளுக்கொரு குத்து’ என்றொரு பழமொழி உண்டு. மக்கள் வரிப்பணம்தானே என அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆளுக்கொரு திசையில் முதலீட்டை ஈர்ப்பதற்காகப் பயணிக்கிறார்கள். என்றாவது ஒருநாள், இந்த முதலீடு பயணங்களின் முடிச்சுகள் அவிழும்.

அடுத்த கட்டுரைக்கு