Published:Updated:

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்: கட்சியிலும் களத்திலும் பிரிந்து கிடக்கிறதா அணிகள்?!

எடப்பாடி பழனிசாமி நவம்பர் 8-ம் தேதி தனியாக சென்னை மழை பாதிப்புகளை ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார். 12-ம் தேதி பன்னீர்செல்வம் தனியாக பாதிப்புகள் குறித்த ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார்.

நவம்பர் மாதம் 6-ம் தேதி இரவு தொடங்கிய பேய் மழை 12-ம் தேதி வரை நீடித்தது. நவம்பர் நவம்பர் 7- தேதி காலை முதலே முதல்வர் ஸ்டாலின் மழை பாதிப்புப் பகுதிகளில் ஆய்வுக்குச் சென்றுவிட்டார். சென்னையில் 5 நாள்கள் தினமும் பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து டெல்டா, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்றார்.

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

முதல்நாள் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட போது, எடப்பாடி, தன்னுடன் இருந்தவர்களிடம், `ஒருநாள்தான் போவார்’ என்று அசால்ட்டாகச் சொல்ல, மறுநாளும் ஸ்டாலின் தண்ணீரில் இறங்கியதை எடப்பாடியால் நம்ப முடியவில்லை.

மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த்து எடப்பாடி பழனிசாமி
மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த்து எடப்பாடி பழனிசாமி

எடப்பாடியுடன் அப்போது பேசிக்கொண்டிருந்த நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும், `முதல்வர் விடமாட்டார் போல, ஒட்டுமொத்த நற்பெயரையும் அவரே தட்டிச் சென்றுவிடப்போறார்’ என எச்சரித்திருக்கிறார்களாம்.

உடனடியாக, கோடம்பாக்கம், கே.கே.நகர், கோயம்பேடு, விருகம்பாக்கம் என தென் சென்னைப் பகுதியில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு நடந்து சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து 9-ம் தேதியும் மழை பாதிப்புகளைப் பார்வையிட்ட எடப்பாடி, அதன் பின்னர். 12-ம் தேதி தாழ்வு மண்டலம் கரையைக் கடந்து ஓரளவு நிலைமை சீரடைந்த பின்னர் மீண்டும் ஆய்வுக்குச் சென்றார். சோழிங்கநல்லூர், பள்ளிக்கரனை போன்ற சென்னைப் புறநகரில் ஆய்வு மேற்கொண்டவர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இரட்டையர்களில் ஒருவர் வந்துவிட்டாரே இன்னொருவரைக் காணோமே என நெட்டிசன்கள் ஓ.பி.எஸ்-ஸை விமர்சிக்கத் தொடங்கினர். அதன் பின்னரே சென்னையில் ரவுண்ட் வந்தார் பன்னீர்செல்வம். ஏன் தாமதம் என்று விசாரித்தால், ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து நவம்பர் 9-ம் தேதி அ.தி.மு.க நடத்திய போராட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்தவர் பன்னீர்செல்வம்தான். அதற்கான பணிகளில்தான் கடந்த 5 நாட்களாக ஈடுபட்டிருந்தார். போராட்டத்துக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்தாலே தெரியும், ஓ.பி.எஸ் தனது செல்வாக்கை தெற்கில் மீட்டெடுத்துவிட்டார்’ என்று சொல்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வில்லிவாக்கம் என சில பகுதிகளுக்கு சென்றுவிட்டு, நலத்திட்ட உதவிகளைக் கொடுத்தார் பன்னீர். அடுத்த நாள் மீண்டும் சென்னையில் ஆய்வு செய்தார் பன்னீர்செல்வம். எடப்பாடியும், பன்னீர் செல்வமும் தங்களுக்குள் உள்ள பகைமையை ஒவ்வொரு முறையும் வெளிச்சம்போட்டுக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தனித்தனியாக அறிக்கைதான் விட்டார்கள் என்றால், மழை பாதிப்புகளைப் பார்வையிடுவதற்கும் தனித்தனியாகவே பயணித்தனர்.

எடப்பாடி - பன்னீர்
எடப்பாடி - பன்னீர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவர், ``2017-ல் அணிகள் இணைந்தது முதலே இருவருக்குள்ளும் முட்டல் மோதல் போய்க்கொண்டுதான் இருக்கிறது. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு என ஒவ்வொன்றிலும் மோதல்தான் தொடருகிறது. சமீபத்தில் சசிகலா சர்ச்சை மூலம் பிரச்னை வந்துள்ளது. எடப்பாடி அண்ட் கோ எல்லோரும் சசிகலாவுக்கு அ.தி.மு.க-வில் இடமில்லை என பேசும்போது, பன்னீரோ, `தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்’ என்றார். இது எடப்பாடி தரப்பை உஷ்ணமாக்கியது.

இந்தச் சூழலில்தான் சென்னையில் மழை பெய்து வெள்ளம் வந்தது. எடப்பாடி முதலில் சென்று ஆய்வு செய்தார். 3 நாட்கள் கழித்து பன்னீர் தனியாக ஆய்வுக்குச் சென்றார். சசிகலா தொடுத்த வழக்கில் கடந்த 10-ம் தேதி ஓ.பி.எஸ் பதில்மனுத் தாக்கல் செய்தார். அப்போது ‘சசிகலாவுக்கு அ.தி.மு.க-வுக்குள் உரிமையில்லை’ என்பதை பன்னீரின் வழக்கறிஞர் வாதம் வைத்துப் பேசியிருக்கிறார். இது எடப்பாடி தரப்புக்கு சற்று நிம்மதியைக் கொடுத்தாலும், ‘பன்னீரை நம்ப முடியாது, உஷாராகவே இருக்க வேண்டும்’ என்கிறார்கள் எடப்பாடி கோஷ்டியினர். அதனால்தான், எடப்பாடி தனி ரூட் எடுத்து சென்றுகொண்டிருக்கிறார்” என்றனர்.

ஜெ.சி.டி.பிரபாகர்
ஜெ.சி.டி.பிரபாகர்

களப்பணிகளிலும் ஏன் இருவரும் தனித்தனியாகச் செல்ல வேண்டும் என்ற கேள்வியை ஓ.பி.எஸ் ஆதரவாளரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான ஜெ.சி.டி.பிரபாகரிடம் கேட்டோம். “சிறிய நகராக, ஊராக இருந்தால் ஒன்றாக செல்லலாம். சென்னை மிகப்பெரிய சிட்டி, இருவரும் ஒரே இடத்துக்கு சென்று பார்வையிட்டால் பெரும்பகுதியைக் கவர் செய்திட முடியாது. அதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளை தனித்தனியாகச் சென்றபடியே பார்வையிட்டனர். எனினும், எடப்பாடி செல்லும் பகுதியில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும், ஓ.பி.எஸ் செல்லும் ஏரியாவில் எடப்பாடியின் ஆதரவாளர்களும் நன்றாக வரவேற்புக் கொடுத்தனர். எனவே இருவருக்குள்ளும் எந்தப் பிரச்னையுமில்லை” என்றார்.

எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் தனித்தனியே ஆய்வு மேற்கொண்டது விவாதபொருள் ஆன நிலையில், இன்று, (16-11-2021) ஒருவரும் ஒன்றாக பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன் நல திட்ட உதவிகளையும் வழங்கினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு