Published:Updated:

சசிகலா வருகை: ஓ.பி.எஸ். தொடர் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி டென்ஷன்

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

``எடப்பாடியுடன் இருந்தபடியே, கடைசி நேரத்தில் தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளுவார் ஓ.பி.எஸ். அதற்காத்தான் இந்தக் காத்திருப்பு’’ - ஆதரவாளர்கள்.

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த வாரம் நடந்த சட்டசபையில் விவசாயிகள் கடன்களை முதல்வர் பழனிசாமி தள்ளுபடி செய்து அறிவிப்பு செய்தவுடன், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பலரும் வந்து முதல்வரின் காலைகளை தொட்டு வணங்கிவிட்டு சென்றனர். அமைச்சர்கள் முதலமைச்சரைப் பார்த்து பவ்யமாகக் கும்பிட்டனர். இந்தக் காட்சிகளை அருகில் இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒருகட்டம் வரையில் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு, தனது இருக்கையில் இருந்து எழுந்துவிட்டாராம். அவருக்கு இதுபோன்ற செயல்கள் பிடிக்கவில்லை என்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

சசிகலா வருகை பற்றி இதுவரை ஓ.பி.எஸ். கருத்து ஏதும் சொல்லவில்லை. மௌனம் காக்கிறார். அதேபோல், எடப்பாடி பழனிசாமியை வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவும் இல்லை. அரசு பணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரங்களைச் செய்து வருகிறார். அதற்கு நேர்மாறாக, துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவரது சொந்தப் பணத்தில் அவரை முன்னிலைப்படுத்தி விளம்பரங்களை செய்து வருகிறார். ஒ.பி.எஸ்-ஸும்சரி, அவரது ஆதரவாளர்களும் சரி நடக்கும் அரசியல் சூழ்நிலை பற்றி கருத்தே தெரிவிக்காமல் அடக்கியே வாசிக்கிறார்கள். இதுதான் எடப்பாடி பழனிசாமியை டென்ஷன் ஆக்கியிருக்கிறது என்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாக, எடப்பாடி தரப்பினர் ஓ.பி.எஸ்-ஸையும், அவரது கோஷ்டியினரையும் மதிப்பதில்லை என்று புகார் எழுந்திருக்கிறது. `பல அரசியல் விவகாரங்களில் ஆலோசனை செய்வதில்லை. தன்னை அவமானப்படுத்துகிறார்கள்’ என்று ஓ.பி.எஸ்-ஸே நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார். அவரை பி.ஜே.பி-யின் பி டீம் என்று எடப்பாடி கோஷ்டியினர் சந்தேகம் எழுப்புகிறார்கள். டெல்லி பி.ஜே.பி. தலைவர்கள் அளவில் ஒ.பி.எஸ்-ஸுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அவரது கோஷ்டியினர் வெளிப்படையாக சொல்லுகிறார்கள். அ.தி.மு.க-வில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு முடிவுக்கு வந்தால் தலைமை பதவி ஓ.பி.எஸ்-ஸை தேடி வரும் என்பது அவரது கோஷ்டியினர் கணக்குப் போடுகிறார்கள்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

சசிகலா தரப்பினரைப் பொறுத்தவரையில், ஓ.பி.எஸ்-ஸை எதிரி என்றும், இ.பி.எஸ்-ஸை நம்பிக்கை துரோகி என்று வர்ணிக்கிறார்களாம். காரணம்.. அவரிடம் இருந்த முதல்வர் பதவியை ராஜினமா செய்து சசிகலாவிடம் கொடுத்துவிட்டு, அவருக்கு எதிராக தர்மயுத்தத்தை ஓ.பி.எஸ் தொடங்கினார். ஆனால், எடப்பாடியோ, சசிகலாவிடம் இருந்து முதல்வர் பதவியை வாங்கிக்கொண்டு அவர் சிறைச்சாலைக்கு போனபிறகு எதிர்க்க ஆரம்பித்தார். இருவரில், `எதிரியைக் கூட மன்னித்துவிடலாம். நம்பிக்கை துரோகியை மன்னிக்கவே முடியாது’ என்று சசிகலா நினைப்பதாக அவரது தரப்பினர் சொல்லுகிறார்கள்.

சசிகலா: `கண்ணாடிக்கூண்டு; அ.தி.மு.க உறுப்பினருக்குச் சொந்தமான கார்... கைதுசெய்ய அரசு தீவிரமா?

கடந்த வாரம் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதன்முறையாக ஓ.பி.எஸ். வாய்திறந்து பேசினார். ஆனால், எந்த இடத்திலும் சசிகலா பற்றி கருத்து சொல்லவில்லை. `கட்சியின் நிலவும் உட்கட்சி பூசல்களைத் தீர்க்கவேண்டும். அப்போதுதான் வெற்றிபெறமுடியும். கட்சியைக் காப்பாற்ற எந்தவித நடவடிக்கையையும் எடுக்கத் தயங்கமாட்டேன்’ என்கிற ரீதியில் பேசினாராம்.

`சசிகலா ஆதரவு நிலைப்பாடு என்கிற சந்தேகம் நிலவுகிறதே... ஓ.பி.எஸ் ஏன் மௌனமாக இருக்கிறார்’ என்று அவரது ஆதரவு பிரமுகரிடம் கேட்டபோது, ``ஏற்கெனவே 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பது பற்றிய பேச்சு வந்தபோது, அதுபற்றி பொதுக்குழுவில் பேசிக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடப் பார்த்தாராம் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஓ.பி.எஸ். தொடர்ந்து அடம்பிடிக்கவே, வேறு வழியில்லாமல் சம்மத்தித்தார். அதுபோல், கட்சிக்குள் உள்ள பிரச்னையை ஓ.பி.எஸ் கிளப்பினால், ஏதாவது காரணங்களை சொல்லி, அவரை உடனே கட்சியை விட்டு முழுவதுமாக ஒரங்கட்டியோ, அல்லது நீக்கியோ விடுவார்கள். அதன் பிறகு, அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் போய்விடும்.

சசிகலா     -    ஓ.பன்னீர்செல்வம்
சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

அதைவிட, இப்போது பொறுமைகாத்து, நேரம் வரும் போது உக்கிரத்தைக் காட்ட நினைக்கிறார். கூட்டணி, சீட் பங்கீடு சம்பிரதாயங்கள் முடிந்ததும், அடுத்து அ.தி.மு.க-வில் வேட்பாளர் தேர்வு நடக்கும். அப்போது, தனது அஸ்திரத்தை எடுப்பார் ஓ.பி.எஸ். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற அந்தஸ்தில் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அந்தஸ்தில் எடப்பாடி பழனிசாமி... இருவரும் ஒவ்வொரு வேட்பாளர் படிவத்திலும் கையெழுத்துப்போட்டு, தேர்தல் கமிஷனிடம் தரவேண்டும். அந்த நேரம் வரும் போது, தனது அஸ்திரத்தைப் பயன்படுத்தக் காத்திருக்கிறார்.

உதாரணத்துக்கு, 140 இடங்களில் அ.தி.மு.க. நிற்கிறது என்றால், தனது கோஷ்டியைச் சேர்ந்த 70 பேருக்கு சீட் கேட்பார். கொடுத்தால்தான் கையெழுத்து என்று நிபந்தனை வைப்பார். ஒருவேளை, இன்றைய சூழ்நிலையில் சசிகலா பக்கம் ஓ.பி.எஸ். சாய்ந்தாலோ, அ.தி.மு.க-வுக்குள் சசிகலா வந்தாலோ... ஓ.பி.எஸ். தனது கோரிக்கையை நிச்சயமாக வைக்க முடியாது. அ.தி.மு.க, கொடி இருக்கும் இடத்தில் ஓ.பி.எஸ். இருந்தால் மட்டுமே அவர் விரும்பும் கோரிக்கையை எழுப்ப முடியும். அதனால்தான், சசிகலாவை இப்போதைக்கு ஆதரிக்கும் எண்ணமில்லை. ஆக, எடப்பாடியுடன் இருந்தபடியே, கடைசி நேரத்தில் தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளுவார் ஓ.பி.எஸ். அதற்காத்தான் இந்தக் காத்திருப்பு’’ என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு