Published:Updated:

சசிகலா அதிமுக-வில் இணைப்பு?! `கழகத் தலைமை முடிவெடுக்கும்!' - ஓ.பி.எஸ்-ன் புதிய ட்விஸ்ட்

எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சிலர் சசிகலாவுக்குக் கட்சியில் இடம் கிடையாது என்ற தொனியில் பேசிவரும் நிலையில், அதிமுக-வில் சசிகலா என்ட்ரி பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வரும் 30-ம் தேதி பசும்பொன்னில் நடைபெறவிருக்கும் தேவர் குருபூஜை நிகழ்ச்சிக்காக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கிரீடம், தங்கக் கவசத்தை வங்கி லாக்கரிலிருந்து எடுத்து ஒப்படைப்பதற்காக மதுரை வந்திருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவைக் கட்சியில் இணைப்பது பற்றிச் செய்தியாளர்களிடம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை வந்த ஓ.பி.எஸ்
மதுரை வந்த ஓ.பி.எஸ்

ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``அதிமுக-வின் கொள்கை, அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும் என்பதுதான். அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம்" என்றவரிடம், 'சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொள்ளுமா?' என்ற கேள்வி எழுப்பப்பட்டது

``சசிகலாவை அதிமுக-வில் இணைப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவெடுப்பார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாகவே இன்றளவும் இருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே கட்சி தற்போது செயல்பட்டுவருகிறது.

இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்திவருகிறோம். பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, அதிமுக அரசு கொண்டு வந்த எந்தத் திட்டத்தையும் நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதிமுக அரசின் திட்டங்களை நிறுத்தினால் நாங்கள் சட்டபூர்வமாகப் போராடுவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு சசிகலா வந்ததில் அரசியல் கிடையாது!

அம்மா உணவகத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுவந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். தொடர்ந்து அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டுவந்த உணவுகளை வழங்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

திமுக அரசு மிகவும் அவசரப்படுகிறது. எதிர்க்கட்சிகளைக் காழ்ப்புணர்ச்சியுடன் அழிக்க வேண்டுமென நினைக்கின்றனர், அது நடக்காது.

மதுரை வந்த ஓ.பி.எஸ்
மதுரை வந்த ஓ.பி.எஸ்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் திமுக-வின் அத்துமீறிய செயல்களால் அதிமுக-வின் வெற்றிகள் பல்வேறு இடங்களில் மறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசுக்கு அதிமுக ஆறு மாத காலம் அவகாசம் அளித்திருந்தது. இனியும் அதிமுக அரசின் திட்டங்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் திமுக செயல்பட்டால் போராட்டம் நடத்தப்படும்.

கொடநாடு மர்மங்களைத் தேடி: “அந்த 5 மாஜிக்களை விசாரிச்சா...” -எடப்பாடி பழனிசாமி சகோதரர்! | பகுதி - 4

அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்குடன், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு பொறுப்பு இருக்கிறது. இரண்டு அரசுகளும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்க வேண்டும்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சிலர் சசிகலாவுக்குக் கட்சியில் இடம் கிடையாது என்ற தொனியில் பேசிவரும் நிலையில், சசிகலா பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு