Published:Updated:

”நானும் முன்னாள் முதலமைச்சர்தான்” - அறிக்கை ஈகோ யுத்தத்தில் பன்னீர் - எடப்பாடி!

பன்னீருக்கு நெருக்கமானவர்களே, ‘அவர் பதுங்கிவிட்டார்’ எனச் சோர்வான நிலையில், தான் பதுங்கியதே பாயத்தான் எனக் காட்ட ஆரம்பித்திருக்கிறார் பன்னீர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவியை அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்பார்த்தனர். அந்தப் பதவிக்காக இருதரப்புமே கடுமையாக முட்டி மோதிய நிலையில், கட்சி எம்.எல்.ஏ-க்களை தன் கட்டுப்பாட்டில் எடப்பாடி எடுத்துக் கொண்டதால், எதிர்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடிக்குப் பன்னீர் விட்டுக் கொடுக்க வேண்டியதானது. இம்முடிவை அறிவிக்கும் கட்சியின் அறிக்கையில் கையெழுத்திவிட்டு, எடப்பாடிக்கு வாழ்த்துக்கூட சொல்லாமல் கட்சி தலைமையகத்திலிருந்து கோபமாக வெளியேறினார் பன்னீர். புரட்சி விதைகளை விதைப்பார் என பன்னீரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்த வேளையில், எதிர்பாராத ட்விஸ்ட்டாக எடப்பாடியின் பிறந்தநாளன்று அவரது இல்லத்திற்கே சென்று நேரில் வாழ்த்தினார் பன்னீர். இதை எதிர்பார்க்காத பன்னீருக்கு நெருக்கமானவர்கள், ‘அவர் பதுங்கிவிட்டார்’ எனச் சோர்வானார்கள். ஆனால், தான் பதுங்கியதே பாயத்தான் எனக் காட்ட ஆரம்பித்திருக்கிறார் பன்னீர்.

பழனிசாமி - பன்னீர்செல்வம்
பழனிசாமி - பன்னீர்செல்வம்

கொரோனா தடுப்புப் பணியில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், தேவையான ஆலோசனைகளை வழங்கியும் எதிர்கட்சித் தலைவர் என்கிற முறையில் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவருக்குப் போட்டியாக, தன் பங்கிற்கும் அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை எகிற வைத்திருக்கிறார் பன்னீர். இந்தப் பஞ்சாயத்து மே 8-ம் தேதியே ஆரம்பமாகிவிட்டது. இதற்கு முதல்நாள் நடந்த அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில்தான், எதிர்கட்சித் தலைவர் பதவியை யாருக்கு அளிப்பது என்பது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றிருந்தது. இந்தநிலையில், மே 8-ம் தேதி தனி ஆவர்த்தனமாக அறிக்கை வெளியிட்ட பன்னீர், ‘மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள், படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தினார். அந்த அறிக்கை அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் வெளிவரவில்லை. மாறாக, ’ஓ.பன்னீர்செல்வம், கழக ஒருங்கிணைப்பாளர், அ.இ.அ.தி.மு.க’ என்கிற பெயரில் மட்டுமே வெளியானது. அப்போதே எடப்பாடி முகாம் கடுப்பாகிவிட்டது என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: அ.ம.மு.க-வை உடைக்க அசைன்மென்ட்! - எடப்பாடி வியூகம்...

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், “எதிர்கட்சித் தலைவராக மே 10-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தேர்வானபிறகு, பன்னீரின் தனி அறிக்கைப்போர் நின்றுவிடும் எனக் கட்சியின் சீனியர்கள் பலரும் எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கும் அன்றே குண்டு வைத்தார் பன்னீர். கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மருத்துவர், செவிலியர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து தனி அறிக்கை பன்னீரிடமிருந்து வந்தது. உஷ்ணமான எடப்பாடி, தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட தருணம் பார்த்திருந்தார். மே 15-ம் தேதி, அதற்கான வாய்ப்பை தலைமைச் செயலக ஊழியர்கள் உருவாக்கிக் கொடுத்தனர். அன்றுதான், எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு என தனி அரசாங்க லெட்டர் பேடு தலைமைச் செயலகத்திலிருந்து வழங்கப்பட்டது.

பிரதமருக்கு எடப்பாடி எழுதிய முதல் கடிதம்
பிரதமருக்கு எடப்பாடி எழுதிய முதல் கடிதம்

தமிழக அரசின் லட்சிணை பொறிக்கப்பட்ட அந்த லெட்டர் பேடு கையில் கிடைத்தவுடன், முதல் வேலையாக தமிழகத்திற்கு கூடுதல் ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் மாத்திரை, கொரோனா தடுப்பூசிகள் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினார் எடப்பாடி. இந்தக் கடிதம் ஸ்டாலினை குறிவைத்தோ, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவோ எழுதப்பட்ட கடிதமல்ல. பன்னீருக்குப் போட்டியாக, ‘நான் தான் எதிர்கட்சித் தலைவர்’ என்பதைப் பதிவு செய்வதற்காக எழுதப்பட்ட கடிதம். மே 19-ம் தேதி, எடப்பாடி பழனிசாமியின் பெயரில் தனி அறிக்கையும் வெளியானது. பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்கிட வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார் எடப்பாடி. பதிலுக்குப் போட்டியாக அன்றைய தினமே, அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்களை முறைப்படுத்த வலியுறுத்தி பன்னீரிடமிருந்து தனி அறிக்கை வெளியானது. இருவருக்கும் இடையேயான அறிக்கைப் போர் வேகமெடுத்தது.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ - வலைவிரிக்கும் எடப்பாடி; திணறும் அ.ம.மு.க

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமருக்கு எடப்பாடி எழுதிய இரண்டாவது கடிதம்
பிரதமருக்கு எடப்பாடி எழுதிய இரண்டாவது கடிதம்

மே 20-ம் தேதி தன்னுடைய எதிர்கட்சித் தலைவர் லெட்டர் பேடில் பிரதமருக்கு இரண்டாவது கடிதம் எழுதிய எடப்பாடி, அரபிக் கடலில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்கக் கோரியிருந்தார். அவரது முதல் கடிதத்தில், வெறும் எதிர்கட்சித் தலைவர் என்று மட்டும்தான் இருந்தது. பிரதமருக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில், முன்னாள் முதலமைச்சர் என்கிற வாசகமும் கூடுதலாக இணைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்துக் கொண்டு பன்னீர் சும்மா இருப்பாரா என்ன?... அன்றைய தினமே, ‘கருப்பு புஞ்சை நோய்க்குரிய மருந்துகள் உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார் பன்னீர். முதல்முறையாக அந்த அறிக்கையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் என்கிற வாசகம் பன்னீரின் பெயருக்கு கீழே எழுதப்பட்டிருந்தது. ‘நான் எடப்பாடிக்குக் கீழ் பணியாற்றிய துணை முதலமைச்சரல்ல... அவருக்கு முன்பாகவே மூன்று முறை முதலமைச்சராக இருந்தவன்’ என எடப்பாடிக்கு பாடம் எடுக்கத்தான் ‘முன்னாள் முதலமைச்சர்’ என்கிற வாசகத்துடன் அந்த அறிக்கையை வெளியிட்டார் பன்னீர். இவர்களின் இந்த ஈகோ அறிக்கை யுத்தத்தால், கட்சியினர்தான் சோர்வடைகிறார்கள்” என்று நொந்து கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சர் அடையாளத்துடன் பன்னீரின் அறிக்கை
முன்னாள் முதலமைச்சர் அடையாளத்துடன் பன்னீரின் அறிக்கை

வழக்கமாக, அ.தி.மு.க தலைமையிலிருந்து வெளிவரும் அறிக்கைகள், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் படங்களுடன், கட்சியின் பெயருடன் கூடிய லெட்டர் பேடில்தான் வெளிவரும். சமீபகாலம் வரை அதுதான் நடைமுறையில் இருந்தது. ஆனால், இப்போது பன்னீர் - எடப்பாடி பெயரில் தனித்தனியாக வெளிவரும் அறிக்கைகளில் மறைந்த தலைவர்கள் எவருடைய புகைப்படங்களும் இல்லை. தலைவர்களின் அக்கப்போர் போதாதென்று, அ.தி.மு.க ஐ.டி விங் அணியினர் தங்கள் பங்கிற்கும் கோஷ்டி பூசலை வளர்த்துவிடுகிறார்கள்.

``எப்போதுமே நம்பர் டூ தானா?” - பன்னீர் கோட்டைவிட்ட தருணங்கள்!

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைகள், பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் அனைத்தும் அந்த ட்விட்டர் கணக்கிலிருந்தே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், பன்னீரின் அறிக்கைகள் எதையும் அந்த ட்விட்டர் கணக்கில் பதிவேற்றவில்லை. பெயருக்கு, தனியார் ஆம்புலன்ஸ்களை முறைப்படுத்த வலியுறுத்திய பன்னீரின் அறிக்கை மட்டும் ‘ரீ ட்விட்’ செய்யப்பட்டுள்ளது. அதைக் கூட, அ.தி.மு.க-வின் சொந்தக் கணக்கிலிருந்து பதிவேற்ற ஐ.டி விங் தரப்பினர் முன்வரவில்லை. ‘அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் பொருளாளருமான பன்னீருக்கே இந்த கதியா?’ எனக் கொந்தளிக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்

தனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம், எடப்பாடி தட்டிப் பறித்துவிட்ட நிலையில், அவரை எதிர்த்து வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இப்போது ‘சைலண்ட்’டாக அறிக்கை வாயிலாக போரைத் தொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த அறிக்கை யுத்தம், நேரடி கள யுத்தத்திற்கும் வழிவகுக்குமா என்பது போகப் போகத் தெரியும்.

ஆடுபுலி ஆட்டம்... பாய்வாரா, பதுங்குவாரா பன்னீர்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு