அதிமுக-வில் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி நடை எடுத்துவைக்க, இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என ஓ.பி.எஸ் முரண்டு பிடிக்க, ஒரு வாரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நீதிமன்றம் சென்று புதிய தீர்மானங்களுக்குத் தடை வாங்கியதன் மூலம் ஓ.பி.எஸ் ஒற்றைத் தலைமைக்குத் தடைபோட்டார். ஆனால் அவரை செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில்வைத்து எடப்பாடி ஆதரவாளர்கள் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதியில் புறப்பட்ட பன்னீர்செல்வம் தரப்பினர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன.

இதையடுத்து தன்னுடைய மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத்துடன் டெல்லிக்குச் சென்றார் ஓ.பி.எஸ். அங்கு கட்சித் தலைமை குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார் எனத் தகவல் கசிந்தது. ஆனால் அவரோ, குடியரசுத் தலைவருக்குப் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக டெல்லிக்குச் செல்வதாகக் கூறிவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கிடையே பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், `ஒருங்கிணைப்பாளர் டெல்லியிலிருந்து வந்ததும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்திக்கவிருக்கிறார்’ எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்துக் வந்த ஓ.பி.எஸ்-ஸுக்கு விமான நிலையம், உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டப் பகுதிகளில் அவரின் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கும் வருகை தந்த ஓ.பி.எஸ்-ஸுக்கு அவரின் ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.
மதுரை - தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதிக்கு 4:30 மணிக்கு வந்த ஓ.பி.எஸ் சாஸ்தா கோயிலில் சுவாமி தரிசனம் செய்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். தேனி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நகரம், ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் கணவாய்ப் பகுதிக்கு வந்தனர்.

மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், மேளதாளங்களுடன் அவரின் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கணவாய் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அங்கிருந்து தனது பிரசார வாகனத்தில் ஏறி ஆதரவாளர்களைச் சந்தித்துக்கொண்டே வந்தார். அதையடுத்து ஆண்டிபட்டி ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அவருக்கு பட்டாசு வெடித்து உற்சாகமாக ஆதரவாளர்கள் வரவேற்றனர். பின் தேனியை நோக்கிப் பயணம் மேற்கொண்ட ஓ.பி.எஸ்-ஸைச் சந்தித்த தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியன் காவித்துண்டு அணிவித்து வரவேற்றார். அப்போது, `நாங்க எப்பவும் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்போம்’ என்றார். அதற்கு ஓ.பி.எஸ்-ஸும், அவரின் மகன் ரவீந்திரநாத்தும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

அதன் பின்னர் கண்டமனூர் விலக்கு வழியாக தேனிக்கு வந்த ஓ.பி.எஸ்-ஸுக்கு பங்களாமேடு, நேரு சிலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களிலும் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் அவரின் ஆதரவாளர்களுடன் எடப்பாடி அணிக்குச் சென்றதால், தேனி நகர், அல்லிநகரத்திலும் ஓபிஎஸ்-ஸிக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. பின்னர் அல்லிநகரம், லட்சுமிபுரம் வழியாக சொந்த ஊரான பெரியகுளத்தில் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார். முன்னதாக அவருடைய சகோதரர் ஓ.ராஜா வீட்டுக்குச் சென்றார். ஆண்டிபட்டி கணவாய் பகுதியிலிருந்து ஓ.ராஜாவும் அவரது காரில் உடன்வந்தார்.

காலை மதுரை விமான நிலையத்திலிருந்து கிளம்பியபோது அவரது பிரசார வாகனத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்திருக்கும் படம் ஒட்டப்பட்டிருந்தது. ஆதரவாளர்கள் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இபிஎஸ் படத்தின் மேல் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக-வில் அசாதாரண சூழல் இருக்கும் நிலையில் நேற்று சொந்த ஊருக்கு வந்த ஓ.பி.எஸ் மூன்று நாள்கள் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் காலை மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் சென்னைக்குச் செல்லவிருக்கிறார்.