Published:Updated:

`டெல்லியிலிருந்து வராத சிக்னல்; நாளை ஓ.பி.எஸ் முக்கிய ஆலோசனை!’ - பரபரப்பாகும் பொதிகை இல்லம்

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

அ.தி.மு.க-வில் உள்கட்சிக் குழப்பம் அதிகரித்திருக்கும் நிலையில், நாளை முக்கிய ஆலோசனையில் ஓ.பி.எஸ் ஈடுபடவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற பஞ்சாயத்து உச்சத்திலிருக்கும் நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்திலுள்ள பண்ணை வீட்டில் மூன்று நாள்களாக ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்திவந்தார். கொங்கு மண்டலத்திலிருந்து முன்னாள் காங்கேயம் எம்.எல்.ஏ செல்வி, திருப்பூர் முன்னாள் எம்.பி சிவசாமி, திருப்பூர் வடக்கு இளைஞர் பாசறைச் செயலாளர் சந்திரசேகர் எனப் பல பிரமுகர்கள் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்துவிட்டுச் சென்றார்கள். இந்தநிலையில், இன்று மதியத்துக்கு மேல் சென்னைக்குக் கிளம்பும் ஓ.பி.எஸ்., கிரீன்வேஸ் சாலையிலிருக்கும் தனது இல்லத்தில் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இது குறித்து நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், ``வரும் 15-ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவிருப்பதாகத் தெரிகிறது. அதில், தன் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பொறுப்பு வாங்கி விட ஓ.பி.எஸ் தீவிரமாக முயல்கிறார். ஆனால், இதுவரை டெல்லியிலிருந்து பாசிட்டிவ் சிக்னல் எதுவும் வரவில்லை.

இந்தச் சூழலில், வழிகாட்டுதல்குழு அமைத்தே ஆக வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருக்கிறார். ஒவ்வொரு சமூகத்துக்கும் இந்தக் குழுவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ஓ.பி.எஸ் வலியுறுத்துவதால், கொங்குப் பகுதி அமைச்சர்கள் இதற்கு உடன்பட மறுக்கின்றனர். சென்னையிலுள்ள ஓ.பி.எஸ்-ன் பொதிகை இல்லத்தில் நாளை முக்கிய ஆலோசனை நடைபெறவிருக்கிறது. இதில்தான், அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்பட வேண்டிய `யார் முதல்வர் வேட்பாளர்?’ என்ற கேள்விக்கான விடை குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது. தன்னுடைய டிமாண்டுகள் நிறைவேற்றப்படவில்லையென்றால், தீவிரமான முடிவுகள் எடுக்கவும் ஓ.பி.எஸ் தயங்க மாட்டார்” என்றனர்.

`எது நடக்கவிருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும்!’ - ஓ. பன்னீர் செல்வம்

இந்தநிலையில், `தமிழக மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க தொண்டர்களின் நலனைக் கருத்தில்கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்திருக்கின்றன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!’ என்று ஓ.பி.எஸ் இன்று காலை ட்வீட் செய்திருப்பது கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது.

டீல் முடிந்துவிட்டது என்று ஒருசாராரும், பிரளயத்துக்கு ஓ.பி.எஸ் தயாராகிவிட்டார் என்று மற்றொரு சாராரும் கட்சிக்குள் ரகளையைக் கூட்டுகிறார்கள். ஆனால், `நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகுதான் ஓ.பி.எஸ் முடிவு எடுப்பார்’ என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது `பொதிகை இல்லம்’ பரபரப்பாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு