Published:Updated:

தேனி: மூன்று நாள்கள், முக்கியச் சந்திப்புகள்! - ஓ.பி.எஸ் இன்று சென்னை பயணம்

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

அரண்மனைப்புதூர் விலக்குப் பகுதியில் சென்டர்மீடியனில் 100 அடி நீள பேனர் வைத்திருந்தனர் கட்சியினர். அதில் `நாளைய முதல்வரே...’ என எழுதப்பட்டிருந்தது. மற்ற அனைத்து பேனர்களிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரும், படமும் தவறாமல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் தேனி வந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கைலாசபட்டியிலுள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார். வழக்கமாக ஓ.பி.எஸ் தேனி வந்தால், அவரை சந்திக்க மாவட்டக் கட்சி நிர்வாகிகள் வருவார்கள். அதேபோல, அன்றும் வரிசையாகக் கட்சி நிர்வாகிகள் பண்ணை வீட்டுக்கு வந்தனர். தொடர்ந்து அன்றைய இரவு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதி, மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன், மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான் என ஐவர், பண்ணை வீட்டுக்கு வந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் அரை மணி நேர ஆலோசனைக்குப் பின்னர் வெளியே வந்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், `இது அரசியல் சார்பற்ற சந்திப்பு’ எனக் கூறினார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இந்தநிலையில், நேற்று வெளிமாவட்டக் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் என வரிசையாக, பண்ணை வீட்டுக்கும், போடி சட்டமன்ற அலுவலகத்துக்கும் வந்து ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினார்கள். கூடவே, தங்கள் ஆதரவைத் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

`எது நடக்கவிருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும்!’ - ஓ. பன்னீர் செல்வம்

அதில், எடப்பாடியின் கொங்குமண்டலத்திலிருந்தும் கட்சியினர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ செல்வி தனது ஆதரவாளர்கள் சுமார் நூறு பேருடன் வந்திருந்தார். அவருடன் திருப்பூர் வடக்கு பாசறைச் செயலாளர் சந்திரசேகர் மற்றும் கட்சியினர் வந்திருந்தனர். தொடர்ந்து அருப்புக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ மணிமேகலை, திருப்போரூர் ஒன்றியத் தலைவர் சங்கீதா, தாராபுரம் நகராட்சி முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசினார்கள். வேளச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ அசோக் மற்றும் தென்காசி வாசுதேவன்நல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ மனோகரன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களோடு ஓ.பி.எஸ்-ஐ சந்தித்துப் பேசினார்கள்.

இந்தநிலையில், இன்று காலை ட்விட்டரில் ஓ.பி.எஸ், ``தமிழக மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில்கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!” எனப் பதிவிட்டார்.

இந்தநிலையில் இன்று காலை தேனி நாகலாபுரத்தில், அரசு நகரும் நியாயவிலைக்கடை தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ள பெரியகுளத்திலிருந்து புறப்பட்டார் ஓ.பி.எஸ். வழி நெடுகிலும், கட்சியினர் பேனர்வைத்தும், பட்டாசு வெடித்தும், வாகனத்தில் மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். அரண்மனைப்புதூர் விலக்குப் பகுதியில் சென்டர்மீடியனில் 100அடி நீள பேனர் வைத்திருந்தனர் கட்சியினர். அதில் `நாளைய முதல்வரே...’ என எழுதப்பட்டிருந்தது. மற்ற அனைத்து பேனர்களிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரும், படமும் தவறாமல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஓ.பி.எஸ் புறப்படும் நேரத்தில், `அம்மாவின் அரசியல் வாரிசே...’ என ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

என்ன முடிவு எடுக்கப்போகிறார் ஓ.பி.எஸ் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிகரித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு