Published:Updated:

`அழகு இல்லாதது கவலையா இருக்கு...!' - உதவியாளரின் திடீர் மரணத்தால் கலங்கிய ஓ.பி.எஸ்

ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளரும், கார் ஓட்டுநருமான அழகு என்கிற அழகு சுப்பிரமணியம் நேற்று இறந்தார். அவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள தேனி வந்திருந்தார் ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ் உதவியாளர் அழகு சுப்பிரமணியம்.
ஓ.பி.எஸ் உதவியாளர் அழகு சுப்பிரமணியம்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி சட்டமன்றத் தொகுதி அலுவலக உதவியாளரும், அவரின் கார் ஓட்டுநருமான அழகு என்கிற அழகு சுப்பிரமணியம் சாலை விபத்தில் சிக்கினார். படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

அழகு சுப்பிரமணியம்
அழகு சுப்பிரமணியம்

யார் இந்த அழகு? ஓ.பி.ஸ்ஸின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ``அழகு சுப்பிரமணியத்தின் சொந்த ஊர் உத்தமபாளையம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஓ.பி.எஸ் உடன்தான் இருந்தார். அவரின் உதவியாளர். அடிக்கடி கார் ஓட்டுநராகவும் இருப்பார். ஓ.பி.எஸ் ஏதாவது முக்கியமான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், அவரின் காரை அழகுதான் ஓட்டிச்செல்வார். அப்படி ஒரு நம்பிக்கையான ஆள். ஓ.பி.எஸ் மனைவி விஜயலெட்சுமியின் உறவுக்காரர். உத்தமபாளையத்தில் விஜயலெட்சுமியின் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் அழகு.

போடி தொகுதியில் ஓ.பி.எஸ் வெற்றி பெற்று அலுவலகம் அமைத்தபோது, அதை முழுவதும் அழகு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார் ஓ.பி.எஸ். தொகுதிக்குள் என்ன தேவை, என்ன பிரச்னை, என்ன செய்ய வேண்டும் என அனைத்தும் அழகுக்கு நன்கு தெரியும். தொகுதி மக்களின் கோரிக்கை மனுக்கள் தொடங்கி கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்ய சிபாரிசுக் கடிதம் வரை சகலமும் தயார் செய்து கொடுப்பது அழகுதான். சென்னையிலிருந்து போடி அலுவலகம் வரும் ஓ.பி.எஸ்., தொகுதி நிலவரத்தை அழகு கிட்டதான் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி
தேனி அரசு மருத்துவக் கல்லூரி

இந்நிலையில், கடந்த 9ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அழகு, சாலை விபத்தில் சிக்கினார். இதில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

`ஜெயலலிதாவால் 1912-13ல் தொடங்கப்பட்டது!' - ஓ.பி.எஸ் பேச்சால் அதிர்ந்த தேனி விழா

அவரின் மூளை செயல் இழந்ததாக மருத்துவர்கள் நான்கு நாள்களுக்கு முன்னர் அறிவித்தனர். அதைத் தவறாகப் புரிந்துகொண்ட அழகுடைய உறவினர்கள், அவர் இறந்துவிட்டதாகக் கூறி இறுதிச் சடங்குகளைச் செய்யத் தயாரானார்கள். இதையறிந்த ஓ.பி.எஸ் இளைய மகன் ஜெயபிரதீப், மதுரை தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் பேசினார். `இதயத்துடிப்பு இருக்கும்போது இறந்துவிட்டதாகக் கூறுவது தவறு' என அழகு சுப்பிரமணியத்தின் உறவினர்களையும் அவர் கண்டித்தார். வென்டிலேட்டர் ஆம்புலன்ஸில் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் அழகு. கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் உட்பட தேனி மாவட்ட அ.தி.மு.கவினர் அனைவரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு அழகு மருத்துவமனையில் மரணமடைந்தார். கட்சி பேதமின்றி பழகக்கூடியவர். அவரை தெரியாதவர்கள் தேனியில் இல்லை எனலாம். நல்ல மனிதர்” என்றனர்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
சாரல் விழாவில் குவிந்த கோரிக்கை மனுக்கள்! - சங்கடத்தில் ஓ.பி.எஸ்

அழகு சுப்பிரமணியத்தின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் அனைத்தையும் ஜெயபிரதீப் கவனித்துக்கொண்டார். சென்னையில் இருந்து நேற்று காலை தேனி வந்த ஓ.பி.எஸ், மதியம் அழகு சுப்பிரமணியத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். உடன், அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். ஓ.பி.எஸ்’ன் குடும்பத்தில் ஒருவராக கருதப்பட்ட அழகு சுப்பிரமணியத்தின் இறப்பு குறித்து, `அழகு இல்லாதது கவலையா இருக்கு' என தனது நெருங்கிய சகாக்களிடம் கூறியிருக்கிறார் ஓ.பி.ஸ்.