Published:Updated:

`அரசுடன் தொடர்புடைய தொழிலைச் செய்ததில்லை!’-ஓ.பி.எஸ் மீதான குற்றச்சாட்டுக்கு மகன் சொல்வதென்ன?

ஜெயபிரதீப்
News
ஜெயபிரதீப்

ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப், தற்போது வீடியோ ஒன்றையும், நான்கு பக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாள்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவந்த விவகாரம், `துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது துறை சார்ந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது மகன்களின் நிறுவனத்திற்கு அனுமதியளித்திருக்கிறார். மேலும், அதற்கு, தனது அரசு இல்ல முகவரியை மகன்கள் பயன்படுத்தியும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்’ என்பது தான். இதனை அடிப்படையாக வைத்து தி வீக் இதழ், செய்தி வெளியிட்டது. தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட, சர்ச்சையாக வெடித்தது. இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக, ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப், தற்போது வீடியோ ஒன்றையும், 4 பக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

OPS
OPS

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ``தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நான் ஒரு தகுந்த விளக்கத்தினை அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். நானும், என் சகோதரரும், எங்களது வாழ்நாளில் அரசாங்கம் நேரடியாக சம்பந்தப்பட்ட எந்த ஒரு தொழில்களையும் இதுவரை நாங்கள் செய்ததில்லை. அதாவது, ஒப்பந்தப்புள்ளி கோரி அரசாங்கத்திடம் இருந்து பணம் வரும் எந்த தொழில்களையும் நாங்கள் செய்ததில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2001ம் வருடத்தில் இருந்து அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் 15 ஆண்டுகளில். எங்களது மாவட்டமான தேனியிலும் சரி, சென்னையிலும் சரி, எந்த ஒரு அமைச்சர் பெருமக்களிடமோ, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளிடமோ எங்கள் தந்தையில் பெயரை பயன்படுத்தி எங்கள் தொழில் சம்பந்தமாகவோ, அல்லது நண்பர்களுக்கான சிபாரிசோ கேட்டதில்லை. தொலைபேசியில் கூட நேரடியாக உரையாடியதில்லை. இதனை, கடந்தகால என் தந்தையிடம் பணியாற்றிய அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

மு.க.ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட குற்றசாட்டு
மு.க.ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட குற்றசாட்டு

கடந்த 18 வருடங்களாக நான், விவசாயம் சார்ந்த தொழிலும், சொந்தமாக இடம் வாங்கி, மக்கள் வசிக்கக்கூடிய வசதிகளை செய்து, பிளாட் போட்டு, சரியான முறையில் நகர ஊரமைப்புத்துறையினரின் ஆய்விற்கு பின்னர், அனுமதி வாங்கி விற்பனை செய்கிறேன். வசதிகள் செய்யாமல், அரசாங்கத்திடம் ஒப்புதல் வாங்கினால் தான் அதிகார துஷ்பிரயோகம். இது எங்கள் வாழ்வாதாரத் தொழில். இதில் எங்கு தவறு இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. துணைமுதல்வர் கடந்த 2017ம் ஆண்டு தான் வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பே 2016ம் ஆண்டு எனது நிலத்திற்கு முறைப்படி ஒப்புதல் வாங்கியுள்ளேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கம்பெனியின் முகவரி அரசாங்கம் சம்பந்தப்பட்ட கட்டடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதே மற்றொரு குற்றச்சாட்டு, என்னுடைய கம்பெனி, என் சொந்த கட்டடமான கிரீன்வேஸ் சாலையில் சல்மா கிரீன் கேஸ்டில் இரண்டாவது அடுக்குமாடியில் இயங்குகிறது. ஒருவரை தொடர்புகொள்வதற்கு கொடுத்த முகவரியை எங்களது கம்பெனி அந்த இடத்தில் தான் இயங்குகிறது என அப்பட்டமான பொய்யை எப்படி உங்களால் கூற முடிகிறது?

``நான் தொழில் ஆரம்பித்ததில் இருந்து என் தந்தை மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால், 15 ஆண்டுகளாக தங்கள் மூலமாகவும், தங்களின் நெருக்கமானவர்கள் மூலமாகவும் எவ்வளவோ தொந்தரவுகளை செய்துள்ளீர்கள்.நான் அதனை பொருட்படுத்தவில்லை. தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், அவர்களின் தொழில்களையும் உதாரணப்படுத்தி என்னால் பேச முடியும். ஆனால், மற்றவர்களைப் பற்றி புறம்பேச நான் விரும்பவில்லை” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனையே வீடியோவாகவும் பேசி வெளியிட்டுள்ளார் ஜெயபிரதீப். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில், அ.தி.மு.க ஆதரவாளர்களால், வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.