Published:Updated:

தனியார் பார்; இடிக்கப்பட்ட பேருந்து நிலையச் சுவர்?!-வைத்திலிங்கம் உறவினரால் சர்ச்சை! என்ன நடந்தது?

தனியார் டாஸ்மாக் கடைக்காக உடைக்கப்பட்ட அரசு சுவர்
தனியார் டாஸ்மாக் கடைக்காக உடைக்கப்பட்ட அரசு சுவர் ( ம.அரவிந்த் )

பேருந்து நிலையத்தின் சுற்றுச் சுவர் டாஸ்மாக் கடைக்காக இடிக்கப்பட்டது. அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய சூழலில் அரசு சுவரை இடிக்கும் அளவுக்கு தைரியம் கொடுத்தது யார்?

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்தின் சம்பந்தி, தன் உறவினர் பெயரில் நடத்திவரும் தனியார் டாஸ்மாக் கடை மற்றும் சொகுசு பாருக்குச் செல்ல தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தின் அரசு சுவரை இடித்து வழி ஏற்படுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, மாநகராட்சி சார்பில் சுவர் உடைக்கப்பட்ட இடத்தில் புதிய சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் சுவரை இடித்தவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வைத்திலிங்கத்தின் சம்பந்தி தவமணி. இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் இடதுபுறத்தில் அமைந்துள்ள சுற்றுச்சுவரின் பின்பகுதியில் தனது மைத்துனர் சிவக்குமார் பெயரில் டாஸ்மாக் கடை மற்றும் சொகுசு பார் நடத்திவருகிறார். பஸ்ஸில் வருபவர்கள் பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதிக்கு வந்தே இந்த டாஸ்மாக் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

இதனால் டாஸ்மாக் கடையின் வியாபாரமும் பாதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், அரசுக்குச் சொந்தமான புதிய பேருந்து நிலையத்தின் சுற்றுச் சுவரை ஒரு ஆள் சென்று வரும் அளவுக்கு இடித்து புதிய வழியை ஏற்படுத்தினர். தி.மு.க ஆட்சி நடைபெற்றுகொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அ.தி.மு.க பிரமுகரான தவமணி தைரியமாக தன்னுடைய தனியார் டாஸ்மாக் கடைக்காக அரசு சுவரை இடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனுக்கும் புகார் சென்றது. இதையடுத்து சுவர் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் புதிய சுவர் அமைத்து அந்த வழி அடைக்கப்பட்டது. ஆனால், இதற்குக் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சுவர் உடைக்கப்பட்ட தகவல் வெளியே பரவி சர்ச்சையானது. ஒருமுறை தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜெயலலிதா வந்தபோது அவருடைய வசதிக்காக அரசு சுவர் உடைக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்து சுவர் உடைப்பது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல என கமென்ட் அடித்தனர்.

சுவர்
சுவர்

இது குறித்து விஷயமறிந்த சிலரிடம் பேசினோம். ``சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.க-வைச் சேர்ந்த வைத்திலிங்கத்தின் சம்பந்தியான தவமணி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரெக்ரியேஷன் கிளப் என சொல்லப்படுகிற குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடை மற்றும் சொகுசு பார் நடத்த அனுமதி பெற்றார். அத்துடன் உடனடியாக `எஸ்.எஸ்.பார்’ எனப் பெயரிட்டு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல், அவசரகதியில் டாஸ்மாக் கடையுடன் பார் திறந்தார். தற்போது வரை விதிமுறையில் உள்ளபடி எந்த வசதியும் செய்யப்படவில்லை.

இந்தநிலையில் புதிய பேருந்து நிலையத்தின் வெளிப் பகுதிக்கு வந்தே அந்த டாஸ்மாக் கடைக்குச் செல்ல வேண்டும். கடைக்கு வர குறுக்கு வழியிருந்தால் நன்றாக இருக்கும்; வியாபாரமும் அதிகரிக்கும் என நினைத்த தவமணி, பேருந்து நிலையத்தின் சுற்றுச் சுவரை ஒரு நபர் தாராளமாக சென்று வரும் அளவுக்கு இடித்து வழி ஏற்படுத்தினார். அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய சூழலில், அரசு சுவரை இடிக்கும் அளவுக்கு தவமணிக்கு தைரியம் கொடுத்தது யார்?

சுவர் இடிக்கப்பட்ட இடம்
சுவர் இடிக்கப்பட்ட இடம்

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும், தற்போது தி.மு.க ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும் வைத்திலிங்கம் மற்றும் அவர் சம்பந்தி தவமணியுடன் தஞ்சாவூர் எம்.எல்.ஏ-வான டி.கே.ஜி.நீலமேகம், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க-வின் மத்திய மாவட்டப் பொறுப்பாளருமான துரை.சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் நல்ல தொடர்பில் இருக்கின்றனர்.

அந்த தைரியத்திலேயே தி.மு.க தரப்பிலிருந்து நமக்கு எதிர்ப்பு வராது என்பதை அறிந்து டாஸ்மாக் கடைக்காகச் சுற்றுச் சுவரை இடித்துள்ளார். ஆனால், இந்த விவகாரம் வெளியே தெரிந்து சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனுக்கும் புகாராகச் சென்றது. இதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். சில தினங்களுக்கு முன்பு சுவர் இடிக்கப்பட்ட இடத்தில் புதிய சுவர் எடுக்கப்பட்டது. ஜெயலலிதா அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக வைத்திலிங்கம் இருந்தபோது அவரின் நிழலாக வலம்வந்து அனைத்தையும் கவனித்தவர் தவமணி.

வைத்திலிங்கம் சம்பந்தி தவமணி
வைத்திலிங்கம் சம்பந்தி தவமணி

அ.தி.மு.க ஆட்சியின் கடைசி நேரம் வரை அதிகாரம் பொருந்தியவராகவே திகழ்ந்தார் தவமணி. அதே எண்ணத்தில் இப்போதும் இருக்கிறார். அரசு முக்கிய அதிகாரிகள், போலீஸ் தரப்பினர் எனப் பலரும் தவமணியைச் சந்தித்துப் பேசுவதை தற்போதும் தொடர்கின்றனர். தன்னிடம் தி.மு.க-வினரும் நெருக்கம் காட்டுகின்றனர். எந்த எதிர்ப்பும் வராது; வந்தாலும் சமாளித்துவிடலாம் என்றே சுவரை இடித்திருக்கிறார். மாநகராட்சி சார்பில் சுவர் அடைக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்னை பெரிதாகிவிடும் என எண்ணி அதிகாரிகள் உதவியுடன் அதை கமுக்கமாக முடித்துவிட்டார்’’ என்றனர்.

தவமணி மைத்துனர் சிவக்குமாரிடம் பேசினோம். ``அந்த இடத்தில் இருந்த பெரிய வேப்ப மரத்தை வெட்டும்போது மரம் விழுந்து சுவர் இடிந்துவிட்டது. மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக இடிந்த சுவரைச் சரிசெய்துவிட்டனர். அருகிலிருக்கும் சிலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக டாஸ்மாக் பாருக்காக சுவர் இடிக்கப்பட்டதாகக் கிளப்பி வருகிறார்கள்’’ என தெரிவித்தார். மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் பேசினோம். ``டாஸ்மாக் கடைக்காக சுவர் இடிக்கப்பட்டதாகத் தகவல் வந்ததையடுத்து அலுவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அது உண்மையென தெரியவந்ததையடுத்து சுவர் உடைக்கப்பட்ட இடத்தில் புதுச் சுவர் அமைக்கப்பட்டது’’ என முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு