Published:Updated:

`ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு உள்ளாட்சிப் பதவி!' -ஊர் ஒற்றுமையை நிலைநாட்டிய ஒரத்தநாடு கிராமம்

ஊராட்சி மன்றப் பதவிகளுக்கான வேட்பாளர்களை ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து அவர்களை போட்டியின்றி வெற்றிபெற வைக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

குலமங்களம் மக்கள்
குலமங்களம் மக்கள்

ஒரத்தநாடு அருகே உள்ள கிராமம் ஒன்றில் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு கட்சிக்கு ஒரு பதவி என ஊராட்சி மன்றத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள் என எந்தப் போட்டியும் இல்லாமல் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

குலமங்களம் மக்கள்
குலமங்களம் மக்கள்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதற்கான பிரசாரம் களைகட்டத் தொடங்கிவிட்டது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் ஊராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வது அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் விதம்விதமான போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

வேட்பு மனுதாக்கலை முடித்த கையோடு வாக்காளர்களைக் கவர்வதற்கு நூதனப் பிரசார யுக்திகளையும் சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு ஊராட்சியில் ஊர் மக்கள் ஒன்றுகூடி வித்தியாசமான முறையில் அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியின்றி பிரதிநிதிகளைத் தேர்வு செய்துள்ளனர்.

குலமங்களம்
குலமங்களம்

இதுகுறித்து குலமங்களம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் பேசினோம். `` ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே எங்கள் ஊரிலும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட முடிவு செய்தனர். இதனால் லட்சக்கணக்கில் பணம் செலவாகும், பல பிரச்னைகள் உருவாகும் எனக் கணித்தோம். எனவே, இதைத் தடுப்பதற்கு என்ன வழி எனவும் ஆலோசனை நடத்தினோம்.

கஜா துயரத்திலும் பட்டுப்போகாத 100 ஆண்டுகால ஆலமரம்! -மீண்டும் நிமிர்த்தப் போராடும் ஒரத்தநாடு

ஏற்கெனவே, எங்கள் ஊரில் கிராம நலவளர்ச்சி மன்றம் என்ற ஒரு குழுவை உருவாக்கியிருந்தோம். அதன்படி, ஊரில் உள்ள 280 ஏக்கர் கொண்ட சடையன் ஏரியை ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரும் பணியைத் தொடங்கி செய்து வருகிறோம். மேலும், ஊர் பொதுஇடத்தில் மது குடிக்கக் கூடாது, மது குடித்துவிட்டு யாரும் சத்தம் போட்டுப் பேசக்கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தோம். இதை மீறுபவர்களிடமிருந்து கட்டணம் வசூலித்து அதை ஊர் நலத்துக்குப் பயன்படுத்தி வருகிறோம்.

குலமங்களம்
குலமங்களம்

இந்நிலையில், ஊராட்சி மன்றப் பதவிகளுக்கான வேட்பாளர்களை ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து அவர்களை போட்டியின்றி வெற்றி பெற வைக்க வேண்டும் என முடிவு செய்தோம். தேர்தலே நடத்தாமல் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அந்த ஊராட்சியின் வளர்ச்சிக்கு அரசு நிதி அளிக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அதனால் ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தினோம்.

அதன்படி, ஊராட்சி மன்றத்தலைவர் பதவியை அ.தி.மு.க-வுக்கும் துணைத் தலைவர் பதவியைத் தி.மு.க-வுக்கும் வார்டு உறுப்பினர்கள் பதவியை காங்கிரஸ், தே.மு.தி.க உள்பட பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து மனுத்தாக்கல் செய்ய வைத்தோம். அவர்கள் அனைவரும் எதிர்ப்பின்றித் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

குலமங்களம்
குலமங்களம்

தொடக்கத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போட்டியிடப் போவதாகத் தெரிவித்தனர். பின்னர் அவர்களும் எங்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு போட்டியிடவில்லை. எங்களைப் பொறுத்தவரை ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டும், நலத்திட்டங்களை நிறைவேற்றி வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் அவ்வளவுதான்" என்றார் உற்சாகமான குரலில்.