Published:Updated:

`500-ல் 300 முடிந்தது..!’ - வாக்குறுதிகளின் நிலை என்ன... முதல்வரின் கூற்று எத்தகையது?!

முதல்வர் ஸ்டாலின்
News
முதல்வர் ஸ்டாலின்

`திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில், 300-க்கும் மேற்பட்டவற்றை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்கொள்கிறார். ஆனால், முக்கிய வாக்குறுதிகளே நிறைவேற்றப்படவில்லை என்பதே நிதர்சனம்’ என்கிறார்கள் அதிமுக-வினர்.

டிசம்பர் 22-ம் தேதி, சென்னை பெரம்பூர், டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``500-க்கும் மேற்பட்ட உறுதிமொழிகளை தேர்தல் அறிக்கையில் எடுத்துச் சொல்லியிருந்தோம். அவற்றில் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றியிருக்கிறோம். எனவே, படிப்படியாக மீதமிருக்கும் திட்டங்களை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என்ற அந்த உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

கிறிஸ்துமஸ் விழா
கிறிஸ்துமஸ் விழா

`உண்மையில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதா தி.மு.க அரசு?’ என்ற கேள்வியை அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் முன்வைத்தோம். ``என்னத்த செஞ்சாங்க, ஒண்ணுமில்லை... நகைக்கடன் தள்ளுபடி என்று சொல்வார்கள். நகைக்கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பை வெளியிட்டு, நிதியையும் விடுவித்து ரெசிப்ட் வரை போட்டுவிட்டுச் சென்றார் முன்னாள் முதல்வர் எடப்பாடியார். `மோசடி நடந்திருக்கிறது விசாரிக்கிறேன்’ என்று காலத்தைக் கடத்தி, நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கே யோசித்தவர்கள் இவர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முக்கியமாக நீட் தேர்வை ரத்துசெய்வதாக உறுதி கொடுத்தனர், செய்தார்களா... செய்ய முடிந்ததா? ஆனால், ஒருபக்கம் சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டே, மறுபக்கம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கொடுத்தவர் எடப்பாடி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகைக் கொடுப்பதாக தம்பட்டம் அடித்தார்கள். அதைப் பல பெண்கள் நம்பி வாக்களித்தனர். இப்போது கேட்டால் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துவருவதாகக் கதைகட்டுகிறார்கள். காஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுப்பதாகச் சொன்னார்கள், அதை மறந்தேபோய்விட்டார்கள். மின் கட்டணத்தை மாதா மாதம் செலுத்தும் வகையில் மாற்றியமைப்போம் என்றனர். அதைச் செய்வதை விட்டுவிட்டு, மின் கட்டணத்தைக் கடுமையாக வசூலிக்கத் தொடங்கிவிட்டனர். 2,000 ரூபாய் வரும் இடத்தில் 6,000 ரூபாய் என பில் வருகிறது. இது கட்டாயப் பகல் கொள்ளை!

மின்சாரம்
மின்சாரம்

விவசாயக் கடனை ரத்துசெய்வதாகச் சொல்லிவிட்டு, இப்போது சாத்தியமில்லை என்கிறார்கள். ஏழு பேர் விடுதலை, இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை பற்றிப் பேசினார்கள். இப்போது அதையும் மறுத்துவிட்டனர். நிறைவேற்றாத வாக்குறுதிகளைச் சொல்ல வேண்டுமென்றால் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

சிவசங்கரி, அதிமுக
சிவசங்கரி, அதிமுக

ஆனால், முத்தான மூன்று உருப்படியான, நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். தி.மு.க ஆட்சியில் விலையேற்றம்தான் நடந்திருக்கிறது. 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட விவசாயிகளுக்கான பொட்டாஷ் உரம் தற்போது 1,041 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு வெங்காய விலை ஏறியது, இப்போது தக்காளி விலை ஏறிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நகைக்கடனுக்கன அஸ்திவாரம் போட்டது, மகப்பேறு விடுப்பை அதிகரித்தது, தாலிக்குத் தங்கம் கொடுத்தது, டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலங்களாக அறிவித்தது, கஜா உள்ளிட்ட பல புயல்களை எதிர்கொண்டு சமாளித்தது எல்லாமே அ.தி.மு.க அரசுதான். எப்படிப்பட்ட நோய் என்று தெரியாதபோதே கொரோனாவை மிக லாகவமாகக் கையாண்டோம். அதை எதிர்க்கொள்ளக்கூடத் தெரியாமல் திணறியது தி.மு.க அரசு. பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் எனக் கருவறை முதல் கல்லறை வரையில் மனிதனுக்குத் தேவையானதைச் செய்துகொடுத்தது அ.தி.மு.க அரசுதான்.

கிறிஸ்துமஸ் விழாவி முதல்வர் ஸ்டாலின்
கிறிஸ்துமஸ் விழாவி முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததிலிருந்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. பாலியல் சம்பவங்களும், ஆணவக்கொலைகளும் தினச்செய்தியாகிவிட்டன. கஞ்சா விற்பனை படுஜோராக நடக்கிறது. சட்டம், ஒழுங்கு சரியில்லை. இதனால் மக்கள் ஏழே மாதத்தில் அதிருப்தி அடைந்துவிட்டனர்.

பால் விலையை இரண்டு ரூபாய் குறைத்தால் மட்டும் போதாது, ஏழை நடுத்தர மக்களின் வாழ்வு மேம்பட திட்டங்களைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். திட்டங்களிலும், டெண்டர்களிலும் கொள்ளையடித்தது, சமூக விரோத காரியங்களைச் செய்தது இவைதான் தி.மு.க அரசின் சாதனைகள்!” என்று பொரிந்து தள்ளினார்.

பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா
பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா

அ.தி.மு.க-வின் குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ``505 வாக்குறுதிகள் கொடுத்தோம். இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை போன்ற முக்கியமான 50 வாக்குறுதிகளைக் கழித்தால்கூட, 455 வாக்குறுதிகள் சிறிதானவை வருகின்றன. அவற்றில் 300-க்கும் மேற்பட்டதை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும்கூட விரைவில் செய்யவிருக்கிறார் முதல்வர். இவர்களுக்கு வாய் வார்த்தைகளால் பதில் சொல்வதைவிட, அது போன்ற செயல்பாடுகளால் பதில் சொல்வோம்” என்று முடித்தார்.