Published:Updated:

ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கலாம்! - சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் அனுமதி

ராம் பிரசாத்

'அந்த 12 கேள்விகளைத் தவிர சிதம்பரத்திடம் கேட்பதற்கு சிபிஐ-யிடம் கேள்விகள் இல்லை' என கபில் சிபல் வாதிட்டார்.

P.Chidambaram
P.Chidambaram

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றன. இந்த வழக்கில், கடந்தாண்டு கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதில், சிதம்பரம் பெயரும் அடிபடுவதால் அவரும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

P.Chidambaram
P.Chidambaram

இதையடுத்து, கடந்தாண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில், `இந்த வழக்குகளில் தன்னைக் கைதுசெய்யக்கூடாது' என மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கைதுசெய்வதற்கான தடையை தொடர்ந்து நீட்டித்தே வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மனுவை சிதம்பரம் தாக்கல் செய்தார். அவரது முன்ஜாமீனுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரைக் கைதுசெய்து விசாரிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதாகக் கூறப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி சுனில்கவுர், சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடிசெய்தார்.

இதையடுத்து, அவரைக் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர் சி.பி.ஐ அதிகாரிகள். நேற்று காலை காங்கிரஸ் அலுவலகத்தில் சிதம்பரம் இருக்கும் தகவலறிந்த சிபிஐ, அமலாக்கத்துறையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் அவர் அங்கிருந்து தனது இல்லத்திற்கு திரும்பிவிட்டார். அவரை பின்தொடர்ந்த அதிகாரிகளை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து சிபிஐ, அமலாகத்துறையின் அதிகாரிகளின் ஒரு பிரிவினர் சிதம்பரம் வீட்டுக்குள் ஏறிக்குதித்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், டெல்லி ஜோர் பாக் இல்லத்திலிருந்து ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்தனர்.

P.Chidambaram Home
P.Chidambaram Home
ANI

இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்தில் காத்திருந்தனர். குடும்பத்தினருடன் பேசுவதற்கு சிதம்பரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவரது தரப்பில் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதாடினர். சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷர் மேத்தா தனது வாதத்தில், ``ப.சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பேசாமல் இருப்பது அடிப்படை சுதந்திரமாக இருக்கலாம். ஆனால், வழக்கில் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது. வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்தியுள்ளோம். விசாரணைக்கு ஒத்துழைக்காததால்தான் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது'' என்றார்.

P.Chidambaram
P.Chidambaram
ANI

இதையடுத்து, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல், “ ஐ.என்.எக்ஸ் வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படிக் கைது செய்ய முடியும். 10 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. நேற்றிரவு சிபிஐ கேட்ட கேள்விகளுக்கும் சிதம்பரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 2018-ல் நடந்த விசாரணைப் புத்தகத்தை சமர்பிக்கச் சொல்லுங்கள். சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினாரா இல்லையா என்பது தெரியும்.

நேற்று இரவே, `விசாரிக்க வேண்டும்' என சிபிஐ றியது. சிதம்பரத்திடம் 12 கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்துவிட்டார். சிபிஐ-யிடம் இனி கேட்பதற்கு கேள்விகளே இல்லை. அதே கேள்விகளைத்தான் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். நண்பகல் 12 மணி வரையில் சிதம்பரத்திடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. 24 மணி நேரமாக சிதம்பரம் தூங்கவில்லை'' என வாதிட்டார். இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

CBI Office
CBI Office

இந்நிலையில் ப.சிதம்பரத்தை வரும் 26-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தினமும் அரைமணி நேரம் குடும்பத்தினர், வழக்கறிஞர்களை சந்திக்கலாம். நீதிமன்ற அனுமதியை அடுத்து சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு சிதம்பரம் அழைத்துச் செல்லப்படுகிறார். இன்றிரவு முதல் விசாரணை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.