Published:Updated:

`106 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னும்...!' - தொண்டர்களிடம் ப.சிதம்பரம் உற்சாகம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்தார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம் ( ANI )

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இந்த வழக்கில், கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என சூழல் நிலவி வந்த நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அவரது முன்ஜாமீனுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக, இரு அமைப்புகளும் நீதிமன்றத்தில் முறையிட்டன. டெல்லி உயர் நீதிமன்றம், அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதையடுத்து, சி.பி.ஐ அதிகாரிகள் நள்ளிரவில் ப.சிதம்பரத்தின் வீட்டு காம்பவுண்டு சுவரேறிக்குதித்து, அவரை அதிரடியாகக் கைதுசெய்தனர். ஆகஸ்ட் 21-ம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

வெளிநாடு செல்ல செக்; பேட்டி, அறிக்கைக்கு நோ! - 106 நாள்களுக்குப் பிறகு ஜாமீனில் வருகிறார், ப.சி

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ பதிவு செய்த வழக்கில், சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இருந்தும், அமலாக்கத்துறையினர் பதிவுசெய்த வழக்கினால் சிதம்பரம் தொடர்ந்து சிறையிலேயே இருந்துவந்தார். முன்னதாக, அமலாக்கத்துறையினர் தன்மீது பதிவுசெய்துள்ள வழக்கிலிருந்து ஜாமீன் அளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் சிதம்பரம். ஆனால், நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.

 ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் சிதம்பரம். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சில நிமிட விவாதங்களுக்குப் பிறகு ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை பதிவுசெய்துள்ள வழக்கிலிருந்து ஜாமீன் வழங்கப்பட்டு, சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின் ப.சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்தார். டெல்லி திகார் சிறையிலிருந்து வெளியே வந்த சிதம்பரத்துக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ப.சிதம்பரம் `106 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு கூட, என்மீது ஒரு குற்றச்சாட்டு கூட சுமத்தப்படவில்லை'' என்றார்.