Published:Updated:

பச்சைமாலுக்கு பதிலடி கொடுத்த தினகரன்! - குமரி அ.ம.மு.க-வில் உச்சக்கட்ட குழப்பம்

மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெங்கின்ஸ் மூலம் மீட்டிங் நடத்தி பச்சைமாலுக்கு `பதிலடி' கொடுத்திருக்கிறார் தினகரன். இது கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளர், முன்னாள் வனத்துறை அமைச்சர் என பல பதவிகளை வகித்தவர் பச்சைமால். நெல்லை மண்டல அ.ம.மு.க பொறுப்பாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பச்சைமால் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் கட்சித் தலைமையுடன் தொடர்பில் இருப்பவர், மண்டல நிர்வாகியிடம் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விலகுகிறார் என்பது வெறும் காரணத்துக்காக சொல்லப்படுவது என்கின்றனர் அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர்கள்.

ஜெங்கின்ஸ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம்
ஜெங்கின்ஸ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

பச்சைமால் அ.தி.மு.க-வில் இணைவதால் தினகரன் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. இதற்கிடையில், குமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளர் பதவியைப் பிடிப்பதற்காக முக்கியப் புள்ளிகள் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில், பச்சைமால் சென்றாலும் கட்சி பலமாக இருப்பதாக காட்டுவதற்காக மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெங்கின்ஸ் மூலம் மீட்டிங் நடத்தி பச்சைமாலுக்கு `நோஸ்கட்' கொடுத்திருக்கிறார் தினகரன். அதேசமயம் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெங்கின்ஸ் மூலம் கிழக்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அ.ம.மு.க முக்கிய நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளர் லெட்சுமணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு தலைமையிலிருந்து அழைப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட லெட்சுமணன் நேற்று இரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும் மாவட்டச் செயலாளர் பதவிக்காக கட்சித் தலைமையிடம் லெட்சுமணன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சசிகலாவின் தீவிர ஆதரவாளரும் பச்சைமாலால் அ.ம.மு.க-விலிருந்து ஓரம்கட்டப்பட்ட முன்னாள் மாவட்ட பொருளாளர் ஸ்ரீஐயப்பனும் மாவட்டச் செயலாளர் பதவிக்காக முயல்வதாக கூறப்படுகிறது.

லெட்சுமணன்
லெட்சுமணன்

கிழக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் கட்சித் தலைமை அறிவுறுத்தலின்படி நடத்தியதாக மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெங்கின்ஸ் தெரிவித்தார். அதேசமயம் முக்கிய திருமண நிகழ்வுக்குச் சென்றதால் ஆலோசனைக் கூட்டத்துக்குச் செல்ல முடியவில்லை என லெட்சுமணன் தெரிவித்தார். மொத்தத்தில் கன்னியாகுமரி மாவட்ட அ.ம.மு.க-வில் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறது.