Published:Updated:

`மோடியை அவதூறாகப் பேசுவதைப் பொறுக்க முடியாது!’ - பாகிஸ்தான் அமைச்சருக்குப் பதிலடிகொடுத்த கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியப் பிரதமர் மோடியை விமர்சித்திருந்த பாகிஸ்தான் அமைச்சருக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் வரும் 8-ம் தேதி வாக்குப் பதிவும் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது டெல்லியில் ஆட்சிசெய்யும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவிவருகிறது.

பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் அமைச்சர்

பொதுக் கூட்டங்களிலும் பிரசாரங்களிலும், மோடியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

`கெஜ்ரிவால் கட்டுப்பாட்டில் திகார்; தேர்தல் லாப கணக்கு!’- டெல்லி அரசை சாடும் நிர்பயா பெற்றோர்

டெல்லி தேர்தல் பற்றி ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்த பாகிஸ்தானின் மத்திய அறியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாட் ஹுசைன், “இந்திய மக்கள் பிரதமர் மோடியை அங்கீகரிக்கக்கூடாது. மற்றொரு மாநில தேர்தலான டெல்லியிலும் மோடியைத் தோற்கடிக்க வேண்டும். மோடியின் அற்பமான பேச்சும் மிரட்டல் போக்கும் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டத் திருத்தம் போன்றவற்றால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மோடி தன் ஆதரவை இழந்துவிட்டார்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவருக்கு பதிலடிகொடுக்கும் விதமாகக் கருத்து பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நரேந்திர மோடி எங்கள் நாட்டின் பிரதமர். எனக்கும் அவர் பிரதமர்தான். டெல்லி தேர்தல் என்பது உள்நாட்டுப் பிரச்னை. இதில், தீவிரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளர்களின் தலையீட்டை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பாகிஸ்தான் எவ்வளவு முயன்றாலும் எங்கள் நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் பதிவு, நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இன்னும் பலர் கெஜ்ரிவாலை விமர்சித்தும் வருகின்றனர்.

பின் செல்ல