Published:Updated:

`ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள், ரோஹிங்கியாக்கள்!’ - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பகீர்

கிஷன் ரெட்டி
கிஷன் ரெட்டி

`ஹைதராபாத் ஓல்டு சிட்டியில் தங்கியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்த தேவையான அனைத்துத் தகவல்களும் எங்களிடம் இருக்கின்றன’ - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) - பா.ஜ.க இடையில் கடும்போட்டி நிலவுகிறது. ஹைதராபாத்தில் முஸ்லிம் வாக்குகளும் அதிகமிதால், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியும் களத்தில் இறங்கி, தேர்தலைச் சந்திக்கிறது.

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனில் (GHMC) மொத்தம் 150 வார்டுகள் உள்ளன. இந்த்முறை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஹைதராபாத் மாநகராட்சியைத் தன்வசப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுவருகிறது பா.ஜ.க.

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், நவம்பர் 27-ம் தேதி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செவெல்லா நாடாளுமன்றப் பகுதிகளில் பிரசாரம் செய்வார் என்றும், நவம்பர் 28-ம் தேதி, மல்கஜ்கிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் பேரணியில் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்பார் என்றும் பா.ஜ.க அறிவித்திருக்கிறது. அதேபோல், பிரசாரத்தின் கடைசி நாளான நவம்பர் 29-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செகந்தராபாத்தில் நடைபெறும் பேரணியில் கலந்துகொண்டு பேசுவார் என்றும் பா.ஜ.க கூறியிருக்கிறது.

பா.ஜ.க-வின் `B டீம்’ என  விமர்சிக்கப்படும் ஒவைசி...  தமிழ்நாட்டில் யார் அப்படி?

இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, ``தலைநகரான ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள் வசித்துவருகிறார்கள். பாகிஸ்தானியர்களைத் தவிர, ரோஹிங்கியா முஸ்லிம்களும் ஹைதராபாத்தில் வசித்துவருகிறார்கள். இந்த விவகாரத்தை மத்திய அரசு கவனித்துவருகிறது" என்று கூறினார். தேர்தல் சூழலில் கிஷன் ரெட்டியின் இந்தப் பேச்சால் சர்ச்சை வெடித்திருக்கிறது.

ஹைதராபாத்
ஹைதராபாத்

கிஷன் ரெட்டி மேலும் கூறுகையில்,``ஹைதராபாத் ஓல்டு சிட்டியில் தங்கியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்த தேவையான அனைத்துத் தகவல்களும் எங்களிடம் இருக்கின்றன. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்தோரின் அனைத்து விவரங்களும் எங்கள் அறிக்கையில் இருக்கின்றன. அவர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். ரேஷன் கார்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் போன்ற எந்தவொரு மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது. ஆனால், இது ஒரு சில இடங்களில் நடந்திருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ரோஹிங்கியாக்களைத் தவிர, ஹைதராபாத்தில் குறைவான அளவில் பாகிஸ்தானியர்களும் இருக்கிறார்கள். மத்திய அரசு, இந்தப் பிரச்னையை ஆராய்ந்துவருகிறது" என்றும் அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

முன்னதாக, தெலங்கானா பா.ஜ.க தலைவர் பாண்டி சஞ்சய் குமார், சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், ``ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், ஓல்டு சிட்டியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி சட்டத்துக்கு புறம்பாகத் தங்கியிருக்கும் ரோஹிங்கியாக்களை ஹைதராபாத்திலிருந்து வெளியேற்றுவோம். ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரோஹிங்கியாவிலிருந்து வாக்காளர்கள் இல்லாமல் நடத்த வேண்டும்'’ என்று பேசியிருந்தார்.

ஹைதராபாத்: பாலியல் வன்கொடுமை; பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை! - 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

சஞ்சயின் பேச்சுக்கு, பதிலளிக்கும்விதமாகக் கருத்து தெரிவித்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ``ஹைதராபாத் ஓல்டு சிட்டியில் பாகிஸ்தானியர்கள் இருந்தால், அதற்கு பிரதமர் மோடியும் அமித் ஷாவும்தான் பொறுப்பு. ஏனென்றால், அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது பாகிஸ்தானியர்கள் இங்கே நுழைந்ததால், அது அவர்களின் தோல்வியே. இந்து - முஸ்லிம்கள் இடையே வெறுப்புச் சுவரை உருவாக்க பா.ஜ.க விரும்புகிறது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு மோடியை பா.ஜ.க அழைத்து வரட்டும். எத்தனை இடங்களில் அவர்கள் வெற்றிபெறுகிறார்கள் என்று பார்ப்போம்" என்று சொன்னார்.

அடுத்த கட்டுரைக்கு