Published:Updated:

`கருணாநிதியிடம் கொஞ்சம் இருந்தது; ஸ்டாலினிடம் அதுகூட இல்லை!' - வெடிக்கும் பழ.கருப்பையா

`உண்மைதான். நான் கட்சி மாறுகிறேன். ஆனால், கொள்கை மாறாதவன். தனித் தமிழ் அரசியலைத்தான் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறேன்.

பழ.கருப்பையா
பழ.கருப்பையா

``தி.மு.க கார்ப்பரேட் கட்சியாக மாறிவிட்டது. மக்களைச் சந்தித்து அரவணைத்துச் செல்லாமல், தனியார் நிறுவனங்களை நம்பி கட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் கட்சியில் நான் எப்படி இருக்க முடியும். இதனால்தான் தி.மு.க -விலிருந்து வெளியேறிவிட்டேன்'' என்று வெடிக்கிறார், பழ. கருப்பையா.

பழ.கருப்பையா
பழ.கருப்பையா

தமிழக இலக்கிய மேடைகளில், அரசியல் மேடைகளில் விமர்சகராக வலம்வருபவர், பழ.கருப்பையா. தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துப் பேசிவந்த இவர், பின்னர் அ.தி.மு.க -வில் இணைந்தார். துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்புக் கொடுக்க, எம்.எல்.ஏ ஆனார். பின்னர், அ.தி.மு.க-வில் தன்னால் செயல்பட முடியவில்லை என விமர்சித்த அவர், தி.மு.க-வில் இணைந்தார். கடுமையாக கருணாநிதியை விமர்சித்த அவர், தி.மு.க-வில் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்தார். தற்போது, அந்தக் கட்சியிலிருந்தும் வெளியேறியிருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க-விலிருந்து விலக என்ன காரணம் என்று பழ.கருப்பையாவைத் தொடர்புகொண்டு பேசினோம். ``தி.மு.க கார்ப்பரேட் கட்சியாக மாறிவிட்டது. மக்கள், தொண்டர்களை அரவணைத்துச்சென்று கட்சி நடத்தாமல், சில தனியார் நிறுவனங்களை நாடி கட்சியை வளர்க்கவேண்டிய சூழலில் தற்போது தி.மு.க இருப்பது வேதனையாக இருக்கிறது.

பழ.கருப்பையா
பழ.கருப்பையா

மக்களை அரவணைத்துப்போகிற தலைமைத்துவம் அண்ணாவைத் தவிர யாருக்குமில்லை. கலைஞருக்குக் கொஞ்சமிருந்தது. ஆனால், ஸ்டாலினுக்கு கொஞ்சம்கூட இல்லை. கடந்த ஆறு மாதங்களாக நான் அங்குதான் இருக்கிறேன். ஸ்டாலினும் என்னைப் பார்க்கவில்லை. நானும் அவரைப் பார்க்கச் செல்லவில்லை. தற்போது, பா.ஜ.க-வினர் மதவாத சித்தாந்தங்களை அதிகமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

Vikatan

இதை அழுத்தம் திருத்தமாக எதிர்க்கவேண்டிய தி.மு.க-வும் அறிக்கை விட்டால்போதும் என்று அறிக்கையோடு முடித்துக்கொண்டிருக்கிறது. இவர்கள் எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கிருக்கும் எம்.எல்.ஏ -க்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்கள் எதுவுமே இல்லாமல் போய்விட்டது.

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்

நான் பல கட்சிகளிலிருந்து மாறிக்கொண்டிருப்பதால், கட்சி மாறி என்று என்னை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மைதான். நான் கட்சி மாறுகிறேன். ஆனால், கொள்கை மாறாதவன். தனித் தமிழ் அரசியலைத்தான் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறேன். சுயமரியாதை இழந்து கட்சியில் இருக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. அந்த வேகத்தில்தான் தி.மு.க-விலிருந்து வெளியேறினேன். இது ஒன்றும் தவறில்லையே?'' என ஆதங்கப்பட்டார்.