Published:Updated:

'பெரியார், அண்ணா பெயரால் கல்லாக் கட்டுவோரை ஒழியுங்கள்!'

ரஜினி
ரஜினி

ரஜினியின் புதிய அரசியல் நிலைப்பாடாக அவர் மேற்கொள்ள இருப்பது 'ஆன்மிகவாதம்' என்கின்றனர். அதனுடைய பொருள் இறை மறுப்பாளர்களோடு மோதல்! அதனுடைய தொடக்கம்தான் பெரியாரோடு மோதல் என்கின்றனர்.

பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அது பெரியார் உயிருடன் இருந்த காலம். சேலத்திலே நடந்த மாநாட்டிலே ராமனின் படத்தைச் செருப்பால் அடித்தார்கள் அவரின் தொண்டர்கள். இதைக் குறிப்பிட்டு ரஜினிகாந்த் 'துக்ளக்' விழாவிலே பேசினார். ராமனும் சீதையும் அந்த ஊர்வலத்திலே ஆடையின்றி எடுத்துச் செல்லப்பட்டனர் என்றும் பேசினாராம். உண்மை தெரியாமல் பேசக்கூடாது என்று திராவிடர் கழகத்தினர் ரஜினிமீது பாய்ந்தனர். ராமனும் சீதையும் ஆடையுடன்தான் இருந்தனர் என்னும் ஒன்றைச் சொல்லி, ரஜினி முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசிவிட்டார் என்பதுபோல் கச்சை கட்டுகின்றனர்.

ராமன் செருப்பால் அடிக்கப்பட்டாரா இல்லையா... அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பெரியார் தன்னுடைய தொண்டர்களைத் தடுத்தாரா... இல்லையே!

அதற்கு அடுத்து அவர்களின் வாதம், 'ஜனசங்கத்துக்காரர் ஒருவர் செருப்பைப் பெரியார் மேல் வீசினார்; அப்படி வந்து விழுந்த செருப்பை எடுத்துத்தான் ராமனை அடித்தோம்' என்று விலகிய நிலையிலேயே வாதிடுகின்றனர் பெரியார் அன்பர்கள். வந்து விழுந்த செருப்பால் அடித்தால் என்ன? கொண்டு வந்திருந்த செருப்பால் அடித்தால் என்ன? இரண்டுக்கும் என்ன வேறுபாடு? 'ஆமாம் அடித்தோம்; இனியும் அடிப்போம்' என்று உக்கிரமாகப் பேசிப் பழக்கப்பட்ட திராவிடர் கழக அன்பர்கள் தாங்கியும் வழுவியும் பேச வேண்டிய கட்டாயம் என்ன?

பெரியார்
பெரியார்

பெரியார் இழிவுபடுத்தப்பட்டார் என்று ஊருக்கு ஊர் நீதிமன்றங்களை நாட வேண்டிய கட்டாயம் என்ன? ரஜினி வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய இன்றியமையாமை என்ன?ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆவேசமும், நீதிமன்றங்களும்தான் பெரியாரின் மதிப்பைச் சரியாமல் நிலைநிறுத்தப் போகின்றனவா? ரஜினி வீட்டுக்கு முன்னால் செய்கின்ற கலகங்கள் அவரை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டவைதானே? 'நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்', 'எடுத்த நிலையிலிருந்து பின்வாங்க மாட்டேன்' என்று ரஜினியைச் சொல்லவைத்து, அவரை வீறார்ந்த நிலைப்பாட்டைக் கொள்ளச் செய்தது யார்? நீங்கள்தானே!

தமிழ்நாட்டில் எந்தக் கட்சித் தலைவர் பேசினாலும் யார் காதிலும் விழுவதில்லை. ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுகின்ற கூட்டங்களுக்குக் கேட்பதற்குக் காசு கொடுத்து ஆள் பிடித்து வருகிறார்கள். ஆனால், ரஜினி ஒரு சிறு அரங்கில் பேசியது இவ்வளவு அதிர்வை உண்டாக்குகிறதே! இன்றைய தலைவர்கள், அவர் எது பேசினாலும் எகிறுவதும், உடனே அதை விவாதப் பொருள் ஆக்கிவிடுவதும், அவருடைய நுழைவு குறித்த அச்சத்தைத்தானே காட்டுகிறது!

பெரியாரின் மீது ரஜினி கை வைப்பதற்கு அவருக்குப் பின்புலத்தில் உள்ள இந்துத்துவ சக்திகளே காரணம் என்கின்றனர். இந்துத்துவப் பின்னணியோடு கூட்டு வைத்துக்கொண்டதன் விளைவு, 35 விழுக்காடு வாக்கு வங்கி கொண்ட அ.இ.அ.தி.மு.க 18 விழுக்காடாகச் சுருங்கிவிட்டதே! இந்துத்துவத்தை எதிர்த்து என்று சொல்வதைவிட, அதை எதிர்க்க நேரிட்டுவிட்ட தி.மு.க., நின்ற இடங்களிலெல்லாம் வென்றுவிட்டதே! தி.மு.க-வின் வெற்றியின் அளவு இந்துத்துவாமீதுள்ள வெறுப்பின் அளவுதானே!

ரஜினியின் புதிய அரசியல் நிலைப்பாடாக அவர் மேற்கொள்ள இருப்பது 'ஆன்மிகவாதம்' என்கின்றனர். அதனுடைய பொருள் இறை மறுப்பாளர்களோடு மோதல்! அதனுடைய தொடக்கம்தான் பெரியாரோடு மோதல் என்கின்றனர். பெரியார், ராமனைச் செருப்பால் அடித்ததைக் கையில் எடுத்தால், இந்து மத உணர்வாளர்களை ஒன்றுதிரட்ட முடியும் என்று ரஜினி நம்புவதாகத் திராவிடத் தரப்பினர் சொல்கின்றனர்.

40 ஆண்டுகளுக்கு முன்னால், பெரியார் செருப்பால் அடித்த காலகட்டம் தேர்தல் காலகட்டம்! ஆகவே அந்தச் செயல் பெரிதாக்கப்பட்டது; கலைஞர் கலங்கிப்போனார்! ஆனால், தேர்தல் முடிவுகள் கலைஞருக்குப் பெருத்த வெற்றியைத் தேடித்தந்தன! 'என்மீதிருந்த பழி நீங்கியது' எனப் பெரியாரும் நெகிழ்ந்தார். ஒருவன் கடவுள் மறுப்பாளன் என்பதால், தோற்கடிக்கப்படுவான் என்றால் நேருவும் அண்ணாவும் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. திராவிட இயக்கம் ஐம்பதாண்டுகளாகப் பதவிக் கட்டிலில் தொடர்ந்து இருந்திருக்க முடியாது. கலைஞரின் அரசியல் அந்தச் சேலம் மாநாட்டோடு முடிந்துபோயிருக்க வேண்டும்...

ராமனை அடித்ததும், பிள்ளையாரை உடைத்ததும் நாத்திகப் போக்குகளின் வெளிப்பாடுகள்தாம். இங்கே இன எழுச்சிப் போரை எடுத்து நடத்த எந்த ஆத்திகரும் முன்வரவில்லை. அதற்குத் தலைமை தாங்கிய பெரியாரையும் அண்ணாவையும் தமிழ் மக்கள் முழுதாக ஏற்றனர். அவர்களின் பெயரால் கல்லாக் கட்டுகிற இருவரையும் ஒழியுங்கள். பெரியார் அண்ணா உருவாக்கிய எழுச்சிக்கு எதிராக நிற்காதீர்கள்..!

- பழ.கருப்பையா எழுதிய சிறப்புக் கட்டுரையின் சுருக்கமான வடிவம் இது. முழுமையான கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > புரியாத ரஜினியும் பெரியாரின் தொண்டர்களும் https://www.vikatan.com/news/controversy/pala-karuppiah-talks-about-rajinikanth-controversial-speech

"தாமரை மலரும் என்று ரஜினியே நம்ப மாட்டார்!"

''இந்து மதத்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிற நீங்கள், மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கை, ஆபாசங்களை இதுபோல் விமர்சிப்பதில்லையே... பயமா?"

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி

"நடைமுறையில், நாங்கள் நாத்திகர்களாக இருந்தாலும் 'சட்டப்படி நாங்களும் இந்துக்கள்'தான். அந்த இந்து மதம்தான் எங்களை 'தாசி புத்திரர்' என்று பொருள்படும்படியாக 'சூத்திரர்' என்று சொல்லி இழிவுபடுத்துகிறது. அந்த இந்து மதம்தான், நாங்கள் இந்துக்களாக, பக்தியாளர்களாக இருந்தாலும்கூட 'நீங்களெல்லாம் கோயிலுக்குள் நுழையக்கூடாது' என்று பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பித்து எங்களையெல்லாம் வெளியே நிறுத்திவைத்திருக்கிறது. அந்த இந்து மதம்தான், பக்தியோடு நாங்கள் ஆகமம் கற்றிருந்தாலும் வழிபாட்டுப் பயிற்சி பெற்றிருந்தாலும் 'நீங்களெல்லாம் அர்ச்சகர்களாக முடியாது' என்று சொல்லிக் கேவலப்படுத்துகிறது. அந்த இந்து மதத்தின் யோக்கியதையை விளக்குவதுதான் பெரியாரிய இயக்கங்களின் நோக்கங்கள். எங்களை சமமாகப் பாவிக்கிற ஏனைய மதங்களைப் பற்றி நாங்கள் பேச வேண்டிய தேவையே எழவில்லை. அதேசமயம் பகுத்தறிவு அடிப்படையில் எல்லா மதக் கடவுளர்களையும்தான் நாங்கள் மறுக்கிறோம்.

'ஞாயிறு மையக் கோட்பாட்டை' வலியுறுத்தியதற்காகவே கிறித்துவர்களால் சிறையிலடைக்கப்பட்டு இறந்தும்போனார் கலிலியோ. 350 வருடங்களுக்கு முன்பு நடந்துமுடிந்த இந்தத் தவற்றுக்கு இப்போதைய போப் ஃபிரான்சிஸ் வருத்தம் தெரிவிக்கிறார்; மன்னிப்பு கேட்கிறார். காலம் கடந்தாவது தங்களது தவற்றை உணர்ந்து திருத்திக்கொள்கிற திறந்த மனப்பான்மையுள்ள அவர்களோடு, 'தாசி புத்திரர்கள்' என்று எங்களை இழிவுபடுத்துகிற சொல்லைக்கூடத் திரும்பப் பெற முடியாதவர்களை எப்படி ஒப்பிட முடியும்?"

''தமிழ்நாட்டில் வலுவாக இருக்கும் தி.மு.க-வை வீழ்த்த, 'பெரியார் எதிர்ப்பு அரசியலை' முன்னெடுக்கிறார்கள் வலதுசாரிகள்' என்ற விமர்சனத்தை உணர்ந்திருக்கிறீர்களா?"

"பெரியார் பற்றி அவதூறாக, இல்லாததை இட்டுக்கட்டுகிறார் என்று ஆரம்பத்தில் ரஜினிகாந்துக்கு கண்டனம் மட்டுமே தெரிவித்தோம். ஆனால், இப்போது பா.ஜ.க-வின் கட்டளையை ஏற்று, 'மன்னிப்பு கேட்கமாட்டேன்' என்று ரஜினிகாந்த் சொல்கிறபோதுதான் அவரை எதிர்த்து நாங்கள் போராடுகிற நிலைக்கு வந்திருக்கிறோம். இதனால், தி.மு.க-வுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை.

எங்கள் தத்துவத் தலைவரைப் பற்றித் திட்டமிட்டுப் பொய்யாகப் பேசுகிறபோது, அதைக் கண்டிக்க வேண்டியதும், ஆணவமாக நடக்கிறபோது அதை எதிர்த்துப் போராடுவதுமான தேவையும் வந்துவிடுகிறது. அதேநேரம் தி.மு.க பற்றி எங்களுக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் போதாமை பற்றி கருத்து கொண்டிருந்தாலும் இந்துத்துவா ஆபத்திலிருந்து மக்களைக் காக்கக்கூடிய ஒரே அரசியல் கட்சியாக நாங்கள் தி.மு.க-வை மட்டும்தான் பார்க்கிறோம்."

''தமிழகத்தில் பா.ஜ.க. காலுான்ற முடியாது; அரசியலில் ரஜினிகாந்த் வெற்றிபெற முடியாது என்றெல்லாம் விமர்சிக்கிற நீங்களே, ரஜினிகாந்த்தின் பேச்சுக்கு எதிராகப் பதறுவது உங்கள் பயத்தைத்தானே காட்டுகிறது?"

"தமிழ்நாட்டில், பா.ஜ.க காலூன்றிவிடும்; ஆட்சியைப் பிடித்துவிடும், தாமரை மலரும் என்பதையெல்லாம் துக்ளக் படிக்கிற அறிவாளியான ரஜினிகாந்த்தே நம்பமாட்டார்."

- 1971-ல் சேலத்தில் நடைபெற்ற 'மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு - பேரணி'யில் பங்கேற்ற 'திராவிடர் விடுதலை கழக'த் தலைவர் கொளத்தூர் மணி அளித்த விரிவான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "தாமரை மலரும் என்று ரஜினியே நம்ப மாட்டார்!" https://www.vikatan.com/government-and-politics/controversy/kolathur-mani-talks-about-rajinis-speech-on-periyar

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

பின் செல்ல