Published:Updated:

`என்னைப் பற்றிக் குறைகூறிய அந்தத் தம்பி!' -பட்டுக்கோட்டை நிர்வாகி புகாருக்குப் பழநிமாணிக்கம் பதில்

பழநிமாணிக்கம்
பழநிமாணிக்கம்

நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தவர் பழநிமாணிக்கம். இந்தப் பகுதி மக்கள் அவர் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால், அவர் இங்கு வரவில்லை, கண்டுகொள்ளவில்லை என்ற குறை மக்களிடம் இருக்கிறது.

`பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிகளுக்கு தஞ்சை தொகுதி எம்.பி பழநிமாணிக்கம் வருவதில்லை என மக்கள் குறை கூறுகின்றனர்' எனப் பட்டுக்கோட்டை நிர்வாகி ஒருவர், தி.மு.க தலைமை நடத்திய காணொளியில் குறைகூறிப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பழநிமாணிக்கம்
பழநிமாணிக்கம்

தி.மு.க தலைவர் ஸ்டாலின், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்விதமாக `ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறார். இதற்காக ஹெல்ப்லைன் ஒன்றை அறிமுகம் செய்து அதில் உதவி கேட்டு வரும் அழைப்புகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மூலம் நிவாரண உதவிகளைச் செய்ய வைக்கிறார். இதற்காக காணொலி காட்சி மூலம் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு மாவட்ட நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினார். இதேபோல் தஞ்சை மாவட்ட தி.மு.க நிர்வாகிகளிடம் நடத்திய ஆலோசனையின் போது பட்டுக்கோட்டை நகரப் பொறுப்புக் குழு தலைவரான எஸ்.ஆர்.என் செந்தில்குமார் என்பவர் ஸ்டாலினிடம், `பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிகள், அ.தி.மு.க-வின் கைகளில் உள்ள நிலையில் நம்ம கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தொகுதிக்கு வரவில்லை, கண்டுகொள்ளவில்லை என்ற குறையிருக்கிறது. இதை நான் சொல்லவில்லை, மக்கள் சொல்கிறார்கள் தலைவரே’ எனப் புகார் கூறினார்.

எஸ்.ஆர்.என் செந்தில்குமார்
எஸ்.ஆர்.என் செந்தில்குமார்

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தஞ்சை மாவட்ட தி.மு.க-வினர் இதைப் பற்றிப் பரபரப்பாகப் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து செந்தில்குமாரிடம் பேசினோம், `பட்டுக்கோட்டை, பேராவூரணி என இரண்டு சட்டமன்றத் தொகுகளிலும் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சரியாகச் செயல்படுவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தவர் பழநிமாணிக்கம். இந்தப் பகுதி மக்கள் அவர் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் இங்கு வரவில்லை, கண்டுகொள்ளவில்லை என்ற குறை மக்களிடம் இருக்கிறது. எம்.எல்.ஏ-க்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தபோதும் அவர் கலந்துகொள்ளவில்லை. ஒன்றிணைவோம் வா திட்டத்தின் ஹெல்ப்லைனுக்கு இந்தப் பகுதியிலிருந்து நிறைய அழைப்பு செல்கிறது. அதைத் தலைவரின் உத்தரவின்படி நான் செய்து வருகிறேன்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த நேரத்தில் பழநிமாணிக்கம் வந்து உதவினால் நன்றாக இருக்கும் எனக் கட்சி நிர்வாகிகளும் மக்களும் நினைக்கிறார்கள். அதையே நான் தலைவரிடத்தில் சொன்னேன். எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது என்ன செய்வது மக்களிடத்தில் கட்சி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற அக்கறையில் சொன்னேன்” என்றார்.

பழநிமாணிக்கம் தரப்பினரோ, `கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உடனேயே முதல் ஆளாக எம்.பி நிதியில் இருந்து 5 கோடியையும் மாவட்ட நிர்வாகத்திடம் கொரோனா பணிக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒதுக்கினார். அந்த நிதியின் மூலமே செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் 600 பேர் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இது தமிழக அரசு செய்வதற்கு முன்பே அண்ணன் கொடுத்த நிதியின் மூலம் செய்யப்பட்டது.

பழநிமாணிக்கம்
பழநிமாணிக்கம்

தினமும் காலை தன் தொகுதிக்குட்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரிடத்திலும் போன் மூலம் பேசி தன் கவனத்திற்கு வந்த அனைத்துக் குறைகளுக்கும் நடவடிக்கை எடுக்க வைத்து வருகிறார். சத்தமில்லாமல் இன்னும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார். எப்போதும் அவர் செய்வதை வெளியே சொன்னதே இல்லை. இனிமேலும் சொல்லமாட்டார்” என்றனர்.

பழநிமாணிக்கத்திடம் பேசினோம், ``எங்கள் கட்சியின் உள்கட்சி ஜனநாயகத்தை வரவேற்கிறேன். அவரிடம் குறை சொல்லிய பொதுமக்களை நான் முன்பே அறிவேன். ஏதேனும் குறையிருந்தால் அவர்கள் என்னிடத்தில் தெரிவிப்பார்கள். என்னைப் பற்றிக் குறை கூறிய அந்தத் தம்பி, முதலில் அந்த நகரத்தில் உள்ள எங்கள் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டச் செயலாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு வாழ்த்துகிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு