Published:Updated:

தர்மபுரி: கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பஞ்சாயத்து தலைவி! - என்ன நடந்தது?

மனு அளிக்க வந்த பஞ்சாயத்து தலைவர்
மனு அளிக்க வந்த பஞ்சாயத்து தலைவர்

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஐந்தரை லட்சத்திற்கு மேல், என் கைகாசு செலவு செய்தும், கடந்த 6 மாதமாக மாவட்ட நிர்வாகம் நிதியை ஒதுக்கவில்லை.

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அடிலம் பஞ்சாயத்து தலைவர் தீபா அன்பழகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். எங்களுடைய கிராம பஞ்சாயத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கவில்லை. அதனால் கலெக்டரைச் சந்தித்து புகார் மனு கொடுப்பதாக கூறினார்கள். திடீரென அடிலம் பஞ்சாயத் தலைவர் தீபா அன்பழகன் தன்னுடைய வாகனத்திற்கு அருகே சென்றார். வாகனத்தில் வைத்திருந்த மண்ணெண்ணெய்க் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

மனு அளிக்க வந்த பஞ்சாயத்து தலைவர்
மனு அளிக்க வந்த பஞ்சாயத்து தலைவர்

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகளும், காவல்துறையினரும் ஓடிச் சென்று கேனை பிடிங்கி பஞ்சாயத் தலைவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார்கள். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அடிலம் பஞ்சாயத் தலைவர் தீபா அன்பழகன், ''நான் அடிலம் பஞ்சாயத் தலைவராக பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகி விட்டது. இந்த 9 மாதத்தில் வாக்களித்த மக்களுக்கு தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறேன்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராமங்களில் உள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி இருக்கிறேன். இதற்காக, ஐந்தரை லட்சத்திற்கு மேல் என் கைகாசு செலவு செய்திருக்கிறேன். இதற்கான நிதியை ஒதுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் கடந்த 6 மாதமாக நிதி ஒதுக்கவில்லை. மேலும் எங்க பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு கொடுக்க வந்தேன்.

போலீஸார் பேச்சுவார்த்தை
போலீஸார் பேச்சுவார்த்தை

ஆனால், மாவட்ட ஆட்சியர் என்னை சந்திக்காமல் அவமதிப்பு செய்தார்கள். பஞ்சாயத் தலைவரான எனக்கே இந்த கதி என்றால் அப்பாவி மக்களுக்கு நிலை ரொம்ப மோசம் என்பதால் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தேன். இச்சம்பவம் நடந்தும் கலெக்டர் என்னை சந்திக்க வில்லை. மாறாக என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள்'' என்றார்.

இதுபற்றி தர்மபுரி கலெக்டர் மலர்விழியின் உதவியாளரிடம் பேசினோம், ''மேடம் கொரோனா மீட்டிங்கில் இருப்பதால் தற்போது பேச இயலாது'' என்றார். இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் தரும் பட்சத்தில், அதனை உரிய பரிசீலனைக்குப் பின் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு