Published:Updated:

`ஜனாதிபதி அரசாணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?' -காவிரி விவகாரத்தில் பி.ஆர்.பாண்டியன் சந்தேகம்

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

கொரோனா நோய்த் தாக்குதலில் நாடே முடங்கியுள்ள நிலையில், அவசர அவசரமாக அரசியல் சுயலாபத்திற்காக தமிழகம் போராடிப் பெற்ற உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க மத்திய அரசு முயல்கிறது.

``காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மத்திய அரசின் அரசாணை நகலை தீயிட்டு எரித்து, எதிர்ப்பு தெரிவித்த பி.ஆர் பாண்டியன், தமிழக பொதுப்பணித்துறை அறிக்கை சட்ட வல்லுநர்களின் கருத்தறியாமல் அவசர கோலத்தில் வெளியிடப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பாண்டியன்
பாண்டியன்

இதுபற்றி தமிழக காவிரி பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியனிடம் பேசினோம்.

"காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை ஆரம்பம் முதல் தொடர்ந்து எதிர்த்தும், ஏற்க மறுத்தும் வரும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்குத் துணைபோகும் வகையில் மத்திய அரசு செயல்பட்டுவருகிறது. அந்த வகையில், தற்போது ஆணையத்தை முடக்கும் மறைமுக நடவடிக்கையாக ஜல் சக்தி துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அரசாணை, குடியரசு தலைவரால் கடந்த 20.04.2020 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

கொரோனா நோய்த் தாக்குதலில் நாடே முடங்கியுள்ள நிலையில், அவசர அவசரமாக அரசியல் சுயலாபத்திற்காக தமிழகம் போராடிப் பெற்ற உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க மத்திய அரசு முயல்கிறது. ஏற்கெனவே, ஆணையம் அமைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவான வரையறையைத் தந்துள்ளது. அதன்படி, ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் செயல்படும். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், நீர்ப் பாசனத்துறை செயலாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆவர். ஆணையத்திற்கு, ஓய்வுபெற்ற நீர்ப் பாசனத்தில் அனுபவம் பெற்ற உயரதிகாரியைத் தலைவராக மத்திய அமைச்சரவை தேர்வு செய்து, உச்ச நீதிமன்ற அனுமதியோடு பணியமர்த்த வேண்டும்.

காவிரி
காவிரி

ஜல் சக்தி துறை செயலாளர், மத்திய அரசின் பிரதிநிதி என்ற அடிப்படையில் ஆணையத்தில் நிரந்தர உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். எந்த வகையிலும் ஜல் சக்தி துறை அலுவலக நிர்வாகப் பட்டியலில், ஆணைய அலுவலகச் செயல்பாடு இடம்பெற முடியாது. ஆணையத்திற்கான அலுவலகம், மத்திய அமைச்சரவைச் செயலாளரின் அலுவலகப் பட்டியலில் மட்டுமே இடம்பெற முடியும்.

ஆணையத்தில் முழு நேர உறுப்பினர்கள் மற்றும் அலுவலக நிர்வாகச் செலவினங்களை சம்பந்தப்பட்ட மாநிலங்கள்தான் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஆணையம் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான உதவிகளை மட்டுமே மத்திய அரசு செய்திட வேண்டும்.

இதற்கு மத்திய அரசோ, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ கட்டுப்பட மறுக்கும் பட்சத்தில், நேரடியாக ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என மிகத் தெளிவாக உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் வரையறுத்துள்ளது.

கோதாவரி ஆணையம் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஆனால் காவிரி ஆணையம் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. எனவே, கோதாவரி ஆணையத்தோடு காவிரி ஆணையத்தை ஒப்பிட்டு ஜல் சக்தி துறை முடிவெடுப்பது பொறுத்தமில்லாதது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகும் என்பதை தமிழக பொதுப்பணித்துறை உணர வேண்டும்.

ஜல் சக்தி துறை அதிகாரிகள் சொல்வதுபோல் இது சாதாரண அலுவலக நடைமுறையாக இருக்கும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் அரசாணை பிறப்பிக்கவேண்டிய அவசியம் என்ன?

உண்மைநிலை இவ்வாறு இருக்க, தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கை அவசர கோலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவரும் மத்திய அரசின் ஜல் சக்தி துறை அதிகாரிகளிடமே விளக்கம் கேட்டு, அதனடிப்படையில் கவனக்குறைவாக வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வறிக்கையால் தமிழகத்தின் காவிரி உரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆறு
காவிரி ஆறு

எனவே, தமிழக அரசு உரிய சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்து, உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்று, தமிழக விவசாயிகளின் நலன் கருதி குடியரசுத் தலைவரின் அரசாணையை ரத்துசெய்வதோடு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதிய தலைவரை நியமனம் செய்து, தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரும் 2 -ம் தேதி நடைபெற உள்ள தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் முன் வர வேண்டுமென வலியுறுத்துகிறேன். அரசாணையை எரித்து மத்திய அரசுக்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு