Published:Updated:

`காமராஜ் அள்ளிக் கொடுக்கிறார், துரைக்கண்ணு..?!' - கொரோனா நிவாரணத்தால் கொதிக்கும் பாபநாசம் மக்கள்

அரிசி கொடுக்கும் துரைகண்ணு
அரிசி கொடுக்கும் துரைகண்ணு

பாபநாசம் தொகுதி மக்கள், `நன்னிலம் தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்குள்ள அமைச்சர் பொருள்களை முறையாகக் கொடுக்கிறார். ஆனால் துரைக்கண்ணு அரிசியை மட்டும் கொடுக்கிறார்' எனப் புலம்புகின்றனர்.

அமைச்சர் துரைக்கண்ணு தன் தொகுதிக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பில் உதவும்விதமாக பத்துக் கிலோ அரிசியை வழங்கிய நிலையில் துரைக்கண்ணு தொகுதியை ஒட்டியுள்ள பகுதிகளான நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர்.காமராஜ் கொடுத்த நிவாரணப் பொருள்களை பற்றியே அனைவரும் பேசி வந்தது நிர்வாகிகளைச் சோர்வடைய வைத்துள்ளது.

அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியையொட்டி உள்ள பகுதிகளான உத்தமநாதபுரம், அன்ணுக்குடி, உத்தானி, நல்லூர் இனாம்கிளியூர் உள்ளிட்ட பல ஊர்கள் நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது. உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் தொகுதி நன்னிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பாபநாசம் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நிவாரண உதவிப் பொருள்களாக அனைவருக்கும் பத்துக் கிலோ அரிசி வழங்கினார்.

இதேபோல் அமைச்சர் ஆர்.காமராஜ் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் அனைவருக்கும் அரிசி, மளிகை என ரூ.1,000 மதிப்புள்ள பொருள்களை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து வீடு தவறாமல் கொடுத்துள்ளார். இதையறிந்த பாபநாசம் தொகுதி மக்கள், `நன்னிலம் தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்குள்ள அமைச்சர் பொருள்களை முறையாகக் கொடுக்கிறார். ஆனால் துரைக்கண்ணு அரிசியை மட்டும் கொடுக்கிறார். அரிசி மட்டும் கொடுத்தால் எப்படி சாப்பிடமுடியும். மற்ற பொருள்களுக்கு எங்கே போவது.. தொடர்ந்து மூன்றுமுறை அவரை ஜெயிக்க வைத்துள்ளோம். அதற்குக் கொடுக்கிற மரியாதை இதுதானா?' எனப் புலம்பியுள்ளனர்.

அமைச்சர் ஆர்.காமராஜ்
அமைச்சர் ஆர்.காமராஜ்

இதையடுத்து தஞ்சை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரும் புலம்பியிருக்கின்றனர். பாபநாசம் தொகுதிக்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் தொடங்கி முக்கிய நிர்வாகிகள் வரை பலரையும் மக்களுடைய இந்தப் புலம்பல் சோர்வடைய வைத்தது. அத்துடன் துரைகண்ணுவுக்கு வேண்டிய சிலர், `அண்ணே ஆர்.காமராஜ் சிறப்பாகக் கொரோனா நிவாரணப் பணி செய்திருப்பதாக நம்ம தொகுதி முழுவதும் ஒரே பேச்சாக இருக்கிறது. நம்ம கட்சி அமைச்சர்தான் என்றாலும் நம்மைவிட இங்கு ஸ்கோர் செய்துவிட்டார். நம்முடைய ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் எனப் பலரும் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டுள்ளனர்' எனக் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் தரப்பு, கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தும்விதமாக ஊராட்சி செயலாளர்களுக்கு தலா ரூ.3,000, ஊராட்சி கிளைச் செயலாளர்களுக்கு ரூ.2,000 மற்ற நிர்வாகிகளுக்கு அவர்களின் பொறுப்புக்கு ஏற்றாற்போல் கொடுத்து உற்சாகப்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், ரம்ஜான் பெருநாள் வரவிருப்பதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மற்றும் கிளைச் செயலாளர்களுக்கு ரூ.5,000 வழங்கியுள்ளார். அமைச்சரின் இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டு அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

துரைக்கண்ணு மற்றும் ஆர்.காமராஜ்
துரைக்கண்ணு மற்றும் ஆர்.காமராஜ்

``எப்படியும் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பாபநாசம் தொகுதியில் துரைகண்ணுதான் போட்டியிடுவார். கட்சிக்காரர்களுக்குப் பணம் கொடுத்ததன் மூலம் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

இதுகுறித்து அமைச்சர் துரைகண்ணுவின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ``தொடர்ந்து மூன்றுமுறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். அவருடைய எளிமை எப்படிப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள். தன்னால் முடிந்ததை தொடர்ந்து எப்போதும் செய்து வருகிறார். கட்சியைத் தன் குடும்பமாக நினைத்துச் செயல்படுவதால் கட்சியினருக்கும் உதவி செய்கிறார். எதையும் எதிர்பார்த்து அவர் செய்வதில்லை" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு