Published:Updated:

`விவாதங்களில் நம்பர் ஒன் ரவீந்திரநாத்; அன்புமணி..?!' -அதிர்ச்சி கொடுத்த நாடாளுமன்ற புள்ளிவிவரம்

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

மாநிலங்களவையில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்கும் தமிழக எம்.பி-க்கள் பட்டியலில் அன்புமணி ராமதாஸ் கடைசி இடத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களாகத் தேர்வாகிச் செல்பவர்களுக்குத் தாங்கள் சார்ந்த மாநிலம் மற்றும் தொகுதியின் நிலவரம் பற்றியும் தேசியப் பிரச்னைகளிலும் தங்களின் கருத்தை வலுவாக எடுத்து வைக்கக்கூடிய வாய்ப்புக் கிடைக்கிறது. ஆனால், அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரிவரப் பயன்படுத்துகிறார்களா என்பதில் கேள்வி எழுந்திருக்கிறது. 

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

பொதுத் தேர்தல் முடிவடைந்து 17-வது நாடாளுமன்றம் அமைந்த பின்னர் இரு கூட்டத் தொடர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதில் தமிழக எம்.பி-க்களின் வருகைப் பதிவு மற்றும் விவாதங்களில் பங்கேற்பது போன்ற செயல்பாடுகள், தேசிய அளவிலான எம்.பி-க்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகளும் திருப்திக்குரியதாக இருக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Vikatan

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து இரு அவைகளுக்குமான இணையத்தில் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இரு அவைகளிலும் இருக்கும் தமிழக எம்.பி-க்களின் செயல்பாடுகளுடன் ஒப்பிடுகையில் பா.ம.க-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் கடைசி இடத்தில் இருக்கிறார். அவரது வருகைப் பதிவு வெறும் 15 சதவிகிதம் மட்டுமே.  

அன்புமணி
அன்புமணி

அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றதால் இந்த ஆண்டில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ், இரு விவாதங்களில் மட்டுமே பங்கேற்றிருக்கிறார். அவர் எந்தக் கேள்வியையும் கேட்கவோ தனிநபர் மசோதா கொண்டுவரவோ இல்லை. கடந்த முறை (2014-ம் ஆண்டு) தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யாகத் தேர்வான சமயத்திலும் அவர் குறைவாகவே நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்றிருந்தார்.

தமிழகத்தின் 39 மக்களவை உறுப்பினர்களில் 26 பேர் முதல் முறையாக எம்.பி-யாகத் தேர்வானவர்கள். அதனாலோ என்னவோ பெரும்பாலான எம்.பி-க்கள் கூட்டங்களில் பங்கேற்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். 39 எம்.பி-க்களில் மூன்று பேர் 100 சதவிகிதம் வருகைப் பதிவு வைத்துள்ள நிலையில், 9 பேர் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வருகைப் பதிவை வைத்திருப்பதை இணையத்தின் தகவல் மூலம் அறிய முடிகிறது.  

ரவீந்திரநாத் குமார்
ரவீந்திரநாத் குமார்

அ.தி.மு.க சார்பாக மக்களவைக்குத் தேர்வான ஒரே எம்.பி-யான ரவீந்திரநாத் குமார் இதுவரை நடைபெற்ற 42 விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். தமிழக எம்.பி-க்களில் அவரே அதிக எண்ணிக்கையிலான விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். அ.தி.மு.க-வின் ஒரே எம்.பி என்பதால் அவருக்கு அனைத்து விவாதங்களிலும் பேசும் வாய்ப்பு கிடைப்பதுவும் அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவரது வருகைப் பதிவு 79 சதவிகிதமாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு