Published:Updated:

பல்ப் வாங்கலையோ... பல்ப்! - தமிழக பா.ஜ.க பரிதாபங்கள்!

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலை

மேலயும் பா.ஜ.க ஆட்சி... கர்நாடகாவுலயும் பா.ஜ.க ஆட்சி... யாருக்கு எதிரா உண்ணாவிரதம் இருக்கீங்க?

“மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும்!” என்று பிரதமர் மோடி அறிவித்த நாளில், ‘இந்தச் சட்டம் அரசால் கண்டிப்பாகத் திரும்பப் பெறப்படும்’ என முன்பு ராகுல் காந்தி பேசிய வீடியோ தேசிய அளவில் வைரலாகிக்கொண்டிருந்தது. ஆனால், எப்போதும்போல தமிழ்நாட்டில் வேறொரு சம்பவம் நடந்தேறியது. “ஐந்நூறு வருஷம் போராட்டம் நடத்தினாலும்கூட இந்தச் சட்டத்தில் ஒரு கமாகூட மாத்த மாட்டோம்’’ என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்தகாலத்தில் பேசியதைத் தோண்டியெடுத்து துவைத்துக்கொண்டிருந்தனர் நெட்டிசன்கள். ‘ஏன்டா, எப்பப் பார்த்தாலும் என் பக்கமே லைட்டத் திருப்புறீங்க, கால்வெக்குற இடமெல்லாம் கண்ணிவெடி வெச்சா, நாங்க எப்படித்தான்டா அரசியல் பண்றது?’ எனத் தன் கட்சிக்காரர்களிடம் அவர் புலம்ப, ‘ஆத்தாடி... இவிங்களை நம்பிப் புலம்பினா ஆடியோவா வெளியில வந்துடுமே’ எனச் சுதாரித்துக்கொண்டு கப்சிப் ஆனார்.

பல்ப் வாங்கலையோ... பல்ப்! - தமிழக பா.ஜ.க பரிதாபங்கள்!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, வேல் யாத்திரை, கந்த சஷ்டிக் கவசம், திருவள்ளுவருக்குக் காவி உடை என டிரேட் மார்க் அரசியலைச் செய்துவந்த பா.ஜ.க., தமிழ்நாட்டில் இந்த வழி செட் ஆகாது என முடிவெடுத்து, தமிழுணர்வு, விவசாயிகள் நலன், சட்டப் பிரச்னை, நிர்வாகச் சீர்கேடு எனப் பாதையை மாற்றியது. ஆனால், ஏற்கெனவே போய்ப் பார்த்த பாதைகள் பழக்கமானதாக இருந்ததால் அதில் விழுந்த அடிகள் கம்மி. பாணியை மாற்றிய பிறகு வாங்கியது எல்லாமே தவுசண்ட் வாட்ஸ் பல்புகள்தான். அவற்றைத்தான் நாம் வரிசையாக இங்கு எரியவிடப்போகிறோம்!

பல்ப் வாங்கலையோ... பல்ப்! - தமிழக பா.ஜ.க பரிதாபங்கள்!

காவிரி ஃபர்னிச்சர் காலி!

காவிரியின் குறுக்கே, மேக்கேதாட்டுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க சார்பில் தஞ்சாவூரில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அறிவிப்பு வந்தவுடனேயே, “ஏங்க... நீங்க பண்றதுல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா, மேலயும் பா.ஜ.க ஆட்சி... கர்நாடகாவுலயும் பா.ஜ.க ஆட்சி... யாருக்கு எதிரா உண்ணாவிரதம் இருக்கீங்க?’’ (நடிகர் விமல் மாடுலேஷனில் படிக்கவும்) என ஆரம்பத்திலேயே அடித்துத் துவைத்தனர் நெட்டிசன்கள். அண்ணன் சீமான் ஒருபடி மேலே போய், “நகையைத் திருடிட்டு ஓடுற திருடனும், ‘திருடன் திருடன்’னு கத்திட்டு ஒடுற மாதிரியில்ல இது இருக்கு’’ எனச் சொல்லி போராட்டத்தை `புஹாஹா’வாக்கினார். இதாவது நம்ம ஏரியாவுக்குள்ளதான். ஆனா, அண்ணாமலையின் உண்ணாவிரதம் குறித்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பத்திரிகையாளர்கள் கேட்க, “அண்ணாமலை சாப்பிட்டா எனக்கென்ன, சாப்பிடலைன்னா எனக்கென்ன!’’ எனக் கேட்டு ஒட்டுமொத்த ஃபர்னிச்சரையும் சுக்குநூறாக்கினார். ‘மத்தவங்க பண்ணாக்கூட பரவாயில்லை சார். கர்நாடக சிங்கம் நானு, என்னையவே...’ எனக் கண்கலங்கினார் அண்ணாமலை!

பல்ப் வாங்கலையோ... பல்ப்! - தமிழக பா.ஜ.க பரிதாபங்கள்!

‘நன்றி’க்கு ஊமைக்குத்து!

டீசன்ட் பாலிடிக்ஸ் செய்ய நினைத்து, தலைவர் ஊமைக்குத்து வாங்கிய சம்பவமும் நடந்தேறியது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து, தளர்வுகள் வரிசையாக அமல்படுத்தப்பட்ட காலம் அது. அப்போது, வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில் திறக்கப்படாததைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஒருசில நாள்களில் கோயில்கள் திறக்க அனுமதியும் அளிக்கப்பட, ‘வெற்றி... வெற்றி... நம் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி’ என பா.ஜ.க-வினர் கொண்டாடித் தீர்த்தனர். அந்த நேரத்தில், ‘தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோருக்கு நன்றி’ என அண்ணாமலை ட்விட்ட, கடுப்பானார்கள் பா.ஜ.க-வினர். ‘ஏங்க... முதல்வருக்கு எதுக்குங்க நன்றி சொல்லிட்டு இருக்கீங்க...’ என சீனியர்கள் கொதித்தெழ, திருதிருவென விழித்துச் சமாளித்தார் அண்ணாமலை!

தம்பி தெரிஞ்சுதான் பண்றீங்களா?

ஜூலை 18-ம் தேதியை, `தமிழ்நாடு நாள்’ என அறிவித்ததை எதிர்த்து களமாட முடிவெடுத்தார் அண்ணாமலை. “கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, நவம்பர் 1-ம் தேதியைத்தான் தமிழ்நாடு தினமாகக் கொண்டாட வேண்டும்’’ என அவர் அறிக்கைவிட, அதிர்ந்தது கமலாலய வட்டாரம். ‘தம்பி நாம என்ன அரசியல் பண்ணிட்டு இருக்கோம், நீங்க தமிழ்நாடு நாள் கொண்டாடச் சொல்லிட்டு இருக்கீங்க. இது நம்ம கொள்கைக்கே எதிரா இல்லையா? அ.தி.மு.க திராவிடக் கட்சி. அவங்க அறிக்கை விடுவாங்க. அதையே நீங்களும் காப்பி அடிப்பீங்களா, உங்களுக்கெல்லாம் என்ன ட்ரெயினிங் கொடுத்தாங்களோ?’ என மூத்த தலைவர்கள் கொந்தளிக்க, ‘நன்றி சொன்னாலும் திட்டுறீங்க... எதிர்த்தாலும் திட்டுறீங்க... இப்போ நான் என்னதான் செய்யுறது’ எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டு சைலன்ட்டானார்.

பல்ப் வாங்கலையோ... பல்ப்! - தமிழக பா.ஜ.க பரிதாபங்கள்!

பாட்டியம்மாவின் அட்டாக்!

‘அப்பாடா சிக்குச்சு மழை, எப்படி அரசியல் பண்றேன் பாரு’ என அடுத்த டாஸ்க்கைக் கையிலெடுத்தார் அண்ணாமலை. வெள்ளத்தில் சரியாக நடந்துவர வாய்ப்பிருந்த ஒருவரைத் தூக்கி, படகில் கவுத்து... அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை, லொகேஷன், ஆங்கிள், லைட்டிங் கரெக்‌ஷன்ஸ் எல்லாம் பார்த்து ஒரு வீடியோவை எடுக்க, சென்னை வெள்ளச் செய்திகளைவிட, இவர்களின் காமெடிக் காட்சிகள் வேகமாக வைரலாகின. ‘வீடியோ வர்றதுக்குள்ள மேக்கிங் வீடியோவை வெளியிலவிட்டு, கூட இருந்தே குழி பறிக்கிறீங்களேடா பாவிகளா... உங்களை நம்பி என் வேலையை ராஜினாமா பண்ணிட்டு வந்தேன் பாரு... என்னைச் சொல்லணும்’ எனப் புதிய டாஸ்க்கைத் தேடி தன் பயணத்தைத் தொடர்ந்தார். கொளத்தூரில் வீட்டு ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பாட்டியம்மாவிடம், ‘ `சி.எம்மோட தொகுதி எப்படி இருக்குன்னு பார்க்கலாம்’னு வந்தேங்கம்மா’ என அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ‘நீங்க இப்போ என்ன பண்ணப்போறீங்க’ என `முதல்வன்’ ரகுவரன் பாணியில் பாட்டி அட்டாக் செய்ய, ‘பண்றோம், அதுக்குத்தானே வந்திருக்கோம்’ எனச் சொல்லி அங்கிருந்து நடையைக் கட்டினார் தலைவர்.

பேக் ஃபயர் ஆன போராட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, மத்திய அரசை எதிர்த்து போராடும் வழக்கத்தைத்தான் இதுவரை நாடு கண்டிருக்கிறது. ஆனால் ஒரு சேஞ்சுக்காக, மாநில அரசைக் கண்டித்து ஒரு வார காலப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை. அறிவிப்பு வெளியானவுடனேயே, அதற்கான எதிர்வினைகள் வர ஆரம்பித்தன. ‘இவுங்களே வெப்பாங்களாம், இவுங்களே எடுக்கச் சொல்லிப் போராடுவாங்களாம்’ என்கிற கதையாக, “மத்திய அரசின் வரி அதிகமானதால்தான் விலை இந்த அளவுக்கு அதிகமாகியிருக்கிறது. யாரை ஏமாத்த இந்தப் போராட்ட நாடகம்?’’ என வறுத்தெடுத்தனர் நெட்டிசன்கள். கூடுதலாக, “எந்த முட்டாள்கள் வரியை ஏற்றினார்களோ அவர்கள்தான் குறைக்க வேண்டும்’’ என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் பதிலடியை நெட்டிசன்கள் கொண்டாட்டமாகப் பகிர்ந்துவந்தனர். ‘ஆகமொத்தம் நாம் எடுத்த இந்த வெப்பனும் நம்மளையேதான் தாக்கிடுச்சு மாஸ்டர்...’ என நொந்து நூடுல்ஸ் ஆனார் தலைவர்.

பல்ப் வாங்கலையோ... பல்ப்! - தமிழக பா.ஜ.க பரிதாபங்கள்!

இப்பவும் நான்தான் அவுட்டா?!

கடைசி சம்பவம் கோவை மாவட்டம் அன்னூரில் நடந்தது. அன்னூரில் தொழில் பூங்காவுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக நடந்த போராட்டத்துக்குச் சென்று கடையை விரித்தார் தலைவர். கன்னடம் பேசும் மக்கள் இருக்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டு, கன்னடத்தில் வீராவேசமாகப் பொரிந்து தள்ளினார். ஆனாலும், மக்கள் தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் வராமலிருக்க, பக்கத்திலிருந்த நிர்வாகியிடம் என்ன ஏதென்று விசாரித்தார். ‘சார் இவங்க பேசுறது வேற கன்னடம், நீங்க பேசுனதுல பாதிகூட புரிஞ்சிருக்காது’ என்று சொல்ல, ‘ஆரம்பத்துலயே சொல்லியிருந்தா என் எனர்ஜியெல்லாம் வேஸ்ட் பண்ணியிருக்க மாட்டானே ஜி’ என அங்கிருந்து மென்சோகமாக நடையைக் கட்டினார்.

‘அண்ணாமலையின் அடுத்த சம்பவம் எப்போ ஜி?’ என ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்!