Election bannerElection banner
Published:Updated:

பட்டுக்கோட்டை: `20 வருடங்களுக்குப் பிறகு சூரியன்’ உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்

திமுக-வினர் கொண்டாட்டம்
திமுக-வினர் கொண்டாட்டம் ( ம.அரவிந்த் )

பட்டுக்கோட்டை தொகுதியைக் கூட்டணிக்கு ஒதுக்காமல், திமுக போட்டியிடும் என தலைமை அறிவித்தது. அத்துடன் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ-வான அண்ணாத்துரை என்பவரையும் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை திமுக தொடர்ந்து 15 ஆண்டுகள் கூட்டணிக்குக் கட்சிக்கு ஒதுக்கிவந்த நிலையில், இந்த முறை திமுக-வே நேரடியாகப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளரை திமுக தலைவர் ஸ்டாலின் அறித்தவுடனேயே அப்பகுதியைச் சேர்ந்த திமுக-வினர் பட்டாசு வெடித்ததுடன், பட்டுக்கோட்டைக்கு சூரியன் வந்துவிட்டது என உற்சாக கோஷமிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக வேட்பாளர் அண்ணாதுரை
திமுக வேட்பாளர் அண்ணாதுரை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் திமுக., அதன் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவந்தது. ஒவ்வொரு முறையும் திமுக நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்துவிட்டு தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஆர்வமுடன் காத்திருப்பர்.

ஆனால் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வரும்போது பட்டுக்கோட்டை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். போட்டியிட விரும்பியவர்களுக்கு மட்டுமல்ல, கட்சித் தொண்டர்களுக்கும் இது ஏமாற்றத்தைத் தந்தாலும் தலைமையின் அறிவிப்புக்குக் கட்டுப்பட்டு தேர்தல் பணிகளைச் செய்தனர்.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

இந்தநிலையில், இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கு பட்டுக்கோட்டை தொகுதியைக் கேட்டு அழுத்தம் கொடுத்துவந்தது. இதனால் தற்போதும் திமுக-வுக்கு தொகுதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் நிர்வாகிகள்,தொண்டர்கள் மத்தியில் எழுந்தன.

ஒவ்வொரு முறையும் கூட்டணிக் கட்சிக்கான தொகுதி அறிவிப்பு வந்தபோதும் பட்டுக்கோட்டை கூட்டணிக்குச் செல்கிறதா என்பதை அறிய பதைபதைப்புடனேயே எதிர்கொண்டும் வந்தனர். மேலும் திமுக தலைமையிடம் பட்டுக்கோட்டை தொகுதியைக் கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது எனவும் சில மாதங்களாகவே தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தநிலையில் பட்டுக்கோட்டை தொகுதியைக் கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுக போட்டியிடும் எனத் தலைமை அறிவித்தது. அத்துடன் வேட்பாளராக முன்னால் எம்.எல்.ஏ-0வான அண்ணாத்துரை என்பவரையும் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது அப்பகுதி திமுக-வினரைப் பெரும் கொண்டாட்ட மன நிலைக்குத் தள்ளியிருக்கிறது. பட்டுக்கோட்டைக்கு 15 வருடங்கள் கழித்து சூரியன் வரப்போகிறது என உற்சாகமாகக் கூறி பிரசாரப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து திமுக-வைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். தேர்தலில் கட்சிகளுடன் வைக்கப்படும் கூட்டணி என்பது வெற்றிக்கான அச்சாணியாகவே பார்க்கப்படும். ஆனால் ஒரு தொகுதியை தொடர்ச்சியாகக் கூட்டணிக்கு ஒதுக்கிவந்தால், கட்சியின் வளர்ச்சி என்பது தடைப்படும்.

திமுக நிர்வாகிகள்
திமுக நிர்வாகிகள்

அத்துடன் நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலருக்கும் சோர்வை உண்டாக்கிவிடும். எங்க தொகுதியான பட்டுக்கோட்டை தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவந்தது. நாங்கள் தலைவர் ஸ்டாலின் மீதுள்ள பற்றாலும், கட்சி மீது கொண்ட கொள்கையாலும் தலைமையின் இந்த முடிவை நூறு சதவிகிதம் ஏற்றுக்கொண்டு தேர்தல் பணிகளைச் செய்தோம்.

ஆனால் ஒவ்வொரு முறையும் நம்ம கட்சிக்குத் தொகுதியை ஒதுக்குங்க என்ற கோரிக்கையை வைத்து வந்தோம். ஆனாலும் கூட்டணியிலிருந்த தமாகா., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொகுதியைப் பெற்றுவிடும். 2001 தேர்லில் திமுக போட்டியிட்டு தோல்வியுற்றது. அதன் பிறகு 2006 தொடங்கி 2016 வரை கூட்டணிக் கட்சிக்குச் சென்றுவிட்டது. அதன்படி பார்த்தால் 20 வருடங்கள் பட்டுக்கோட்டை தொகுதியில் உதயசூரியன் உதிக்கவில்லை.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

20 வருடங்கள் என்பது ஓர் இளைய தலைமுறையைக்கொண்டது. அவர்கள் மத்தியில் திமுக-வைக் கொண்டு சேர்க்க முடியாத சூழல்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதை திமுக-வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் அடிக்கடி கவலையுடன் கூறுவார். ஆனாலும் நாங்கள் கட்டுகோப்பாக, கொள்கையின் மீதுகொண்ட பிடிப்புடன் இருந்ததால் எங்கல் பகுதியில் கட்சி வளர்ச்சியடைந்துகொண்டேயிருந்தது. இந்த முறையும் கூட்டணிக் கட்சிக்குத் தொகுதி சென்றுவிடக் கூடாது என்ற கவலையும் எங்களைச் சூழ்ந்திருந்தது.

'உழைப்புக்கு மதிப்பில்லை' - தி.மு.க-வுக்குத் தாவிய முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ!

தேர்தல் பற்றிய பேச்சு தொடங்கப்பட்ட உடனேயே தலைமைக்கு எங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தி, நம்பிக்கையுடன் காத்திருந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. எங்கள் உணர்வை உணர்ந்த தலைமை திமுக-வே போட்டியிடும் என அறிவித்ததுடன், வேட்பாளராக முன்னால் எம்.எல்.ஏ-வான அண்ணாத்துரை என்பவரையும் அறிவித்துள்ளது. பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கிட்டத்தட்ட பண்டிகைக்கு நிகராக நாங்கள் இதைக் கொண்டாடிவருகிறோம். அதுமட்டுமல்லாமல் நிச்சயம் தொகுதியை திமுக கைப்பற்றும். பெரும் எழுச்சியுடன் அனைவரும் தேர்தல் பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர். சொல்லப்போனால் 20 வருடங்களுக்குப் பிறகு பட்டுக்கோட்டையில் சூரியன் உதிக்கவிருக்கிறது’ என உற்சாகமுடன் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு