Published:Updated:

`இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை!'- பழ.நெடுமாறன் சொல்லும் காரணம்

தமிழ்த் தேசியம் நல்ல முறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. 40 ஆண்டுகளில் அடக்குமுறைகளைத் தாண்டி வளர்ந்துள்ளது.

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை பழ.நெடுமாறன் தொடங்கி 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. தேர்தல் அரசியலை மனதில் கொள்ளாமல் தமிழர் நலன், தமிழ்த் தேசியம் ஆகியவற்றின் வழியில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

இதைக் கொண்டாடும் வகையில் சிறப்பு மாநாடு ஒன்று மதுரை பாண்டி கோயில் அருகே நடந்தது. இந்த நிகழ்ச்சியில் `தமிழீழ விடுதலைப்போரில் தமிழர் தேசிய முன்னணியின் பங்கு', `தமிழ் தேசிய இயக்கம் 40 ஆண்டுக்கால செயல்பாடு', `தலை நிமிர்ந்த தமிழ்த் தேசியம்' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழகம் முழுவதுமிருந்து இக்கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

``எங்களுக்கு குடியுரிமை ஏன் அவசியம்?'' - முகாம் வாழ் ஈழத் தமிழர்கள் அடுக்கும் காரணங்கள்

மாநாட்டுக்கு முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த பழ.நெடுமாறன், ``தமிழ்த் தேசியம் நல்ல முறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. 40 ஆண்டுகளில் அடக்குமுறைகளைத் தாண்டி வளர்ந்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்தியா முழுவதிலும் கடும் எதிர்ப்பினைப் பெற்றுள்ளது. 3 இஸ்லாமிய நாடுகளைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து இஸ்லாமியர்கள் வந்தால் குடியுரிமை இல்லை என்கின்றனர். இது அரசியல் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. அதனால்தான் அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

இலங்கைத் தமிழர்கள் போரினால் இந்திய நாட்டுக்கு வந்தவர்கள். மொழி, பண்பாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது. அவர்களுக்குச் சொந்த நாடு உள்ளதால் அவர்கள் அங்கே செல்ல விரும்புகிறார்கள். ஆனால் தற்போதைய நிலையில் அங்கு செல்ல முடியாத சூழல் உள்ளதால் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை அளிக்க வேண்டும்.

உலகில் 70 நாடுகள் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை வழங்கியுள்ளன. தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம்கள் பராமரிப்பு இல்லாமல் சிறைபோல உள்ளது. இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற வேண்டும் சிந்தனையில் சட்டத்தைத் திருத்துகிறார்கள். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற கொள்கையுடன் செயல்படுகிறார்கள்" என்றார்.