Published:Updated:

புதுச்சேரி: `நாம் பிரித்தாளப்படுகிறோம்; மக்கள் ஒன்றிணைவதே தீர்வு!’ - ராகுல் காந்தி

புதுச்சேரி மக்களின் குறைகளை கேட்டறியும் ராகுல் காந்தி
புதுச்சேரி மக்களின் குறைகளை கேட்டறியும் ராகுல் காந்தி

`நாம் பிரித்தாளப்படுகிறோம். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் அனைத்து பிரச்னைகளுக்கும் திர்வு’ என புதுச்சேரியில் ராகுல் காந்தி கருத்து.

புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசின் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, பெரும்பான்மை சிக்கல், வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை, ஆளுநர் கிரண் பேடி நீக்கம் என அரசியல் பரபரப்பு நிலவி வரும் நேரத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வந்தடைந்தார். காங்கிரஸ் அரசுக்கு நெருக்காடியான இந்த தருணத்தில், ராகுலின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பரப்புரையின் ஒரு பகுதியாக, சோலை நகர் மீனவ கிராம மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், “ இங்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சொந்த வீட்டுக்கு வந்துள்ளது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. மீனவ சமுதாயத்துக்கு என் மனதில் உள்ள கருத்துக்களை சொல்வதற்காகவும், எதிர்காலத்தில் நாங்கள் உங்களுக்கு செய்ய வேண்டியது என்ன, என்பதை தெரிந்து கொள்ளவும் வந்துள்ளேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய ராகுல் மத்திய அரசை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்தார். அதில், ``மத்திய பா.ஜ.க அரசு 3 விவசாய சட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். இது விவசாயிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்துள்ளது. எந்த நாட்டிற்கும் விவசாயிகள்தான் முதுகெலும்பு. விவசாயிகள் போலவே மீனவர்களும். விவசாயிகள் நிலத்திலும், மீனவர்கள் கடலிலும் தொழில் செய்கின்றனர்.

ராகுல் காந்திக்கு மொழிபெயர்த்து உதவும் முதல்வர் நாராயணசாமி
ராகுல் காந்திக்கு மொழிபெயர்த்து உதவும் முதல்வர் நாராயணசாமி

ஏழை , பணக்காரர் என மீனவர்களிடமும் வித்தியாசம் உள்ளது. சாதாரண படகில் சென்றும், பெரிய படகில் சென்றும் மீன் பிடிக்கிறீர்கள். கடலுக்கு சென்று தொழில் செய்வது மிகவும் அபாயகரமானது. மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டு மீன்பிடிக்க செல்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அப்படிப்பட்ட உங்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும்? விவசாயிகளுக்கு வழங்கியதுபோல மீனவர்களுக்கும் நலத்திட்டங்களை அரசு செய்ய வேண்டும்.

மீனவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும். காப்பீட்டு திட்டங்கள், மீன்பிடி உபகரணங்கள் நவீனமயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மீனவர் வாழ்வாதாரம் சிறப்பாக அமையும்.” என அவர் பேசினார்.

ராகுலுக்கு மொழிபெயர்த்து உதவு நாராயணசாமி
ராகுலுக்கு மொழிபெயர்த்து உதவு நாராயணசாமி

பின்னர் பொதுமக்களிடம் தமிழில் பேசும்படி அழைத்து, புதுவை முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்க்க அவர்களது கருத்துக்களை தெரிந்து கொண்டார். கிராம மக்கள் பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். தூண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும், பழங்குடியினரை காக்கும் சட்டம்போல நாட்டில் உள்ள மீனவர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு கிடைக்கச் செய்ய வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், பணமதிப்பிழப்பாலும், கொரோனாவாலும் பாதிக்கப்பட்டோம் வாழ்வாதாரம் சீரமைக்கப்படும் என்றார்கள், ஆனால் எதுவும் நடக்கவில்லை, என மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அதற்கு பதிலளித்து பேசிய ராகுல், ``மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு சிறு, குறு தொழில்கள் அனைத்தையும் நசுக்குகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் அனைத்து உரிமையும் செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். எங்கள் கொள்கை அதற்கு மாறுபட்டது. நாங்கள் சிறு, குறு தொழில்களை உயர்த்த வேண்டும் என எண்ணுகிறோம். அதுதான் நாட்டுக்கு வலு சேர்க்கும். ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு, கொரோனா கால நிதியுதவி செய்யாதது சிறு தொழில்களை அழித்துள்ளது. பிரதமர் மோடி ஒரு சில வசதி படைத்தவர்கள், மீனவ பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், எங்கள் கொள்கை லட்சக்கணக்கான மீனவர்களுக்கே இப்பகுதி சொந்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்” என்றார்.

ராகுலிடம் பிரச்னையை கூறும் பொதுமக்கள்
ராகுலிடம் பிரச்னையை கூறும் பொதுமக்கள்

தொடர்ந்து பேசிய அவர், “ வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி நடப்பது மிகப்பெரும் மோசடி.

இங்கு மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை. 10 லட்சம் கோடி ரூபாயை கடனாக தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளனர். 1.5 லட்சம் கோடி ரூபாய் பெரு முதலாளிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா முடக்கத்தில் தொழிலாளர்கள் வீட்டுக்கு செல்ல இலவச ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் கூட வழங்கவில்லை மத்திய அரசு. நாம் பிரித்தாளப்படுகிறோம். நமக்கு நாமே சண்டைபோட்டுக் கொள்ளும் நிலை நிலவுகிறது. ஏழை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் அனைத்துக்கும் தீர்வு. முன்னேற்றப் பாதைக்கு இதுவே அழைத்துச்செல்லும்.

மக்களிடம் உரையாற்றும் ராகுல் காந்தி
மக்களிடம் உரையாற்றும் ராகுல் காந்தி

அரசியல்வாதிகள் வருவார்கள், பேசிவிட்டு செல்வார்கள். உங்கள் எண்ணத்தை கேட்கமாட்டார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கேட்கவே நான் உங்களை சந்திக்க வந்துள்ளேன். நான் பேசவிட்டுப்போக மட்டும் வரவில்லை. உங்கள் பிரச்னைகளை தீர்க்க மீண்டும் நான் வருவேன். என்னை கடலுக்கு அழைத்துச் செல்லுங்கள். மீன்பிடி கஷ்டங்களை நானும் அறிந்துகொள்கிறேன்” என்றார். முன்னதாக ராகுல்காந்தி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடந்த மாணவிகளுடனான சந்திப்பில் பங்கேற்று கலந்துரையாடினார்.

அடுத்த கட்டுரைக்கு