Published:Updated:

`பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநரிடம் கேட்காதது ஏன்?’ - அற்புதம்மாள் கேள்வி

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

``பேரறிவாளனைக் கொண்டுவந்து சேர்க்கிறேன்’னு மறைந்த முதல்வரான அம்மா சொல்லிட்டுப் போனாங்க. ஆனா, அவங்க அமைச்சரவையில இருக்கிறவங்க விடுதலையைப் பத்தி ஆளுநர்கிட்ட கேட்க மாட்டேங்கிறாங்க’’ என்கிறார் அற்புதம்மாள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சென்னை புழல் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் இன்று வெளியே வந்திருக்கிறார். துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கோவிந்தசாமி தெருவிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளனை, அவரின் தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எனினும், கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக மகனைக் கட்டித்தழுவி வரவேற்க முடியவில்லையே என்கிற மனவருத்தம் அற்புதம்மாளின் முகத்தில் தெரிந்தது.

பரோலில் வீடு திரும்பிய பேரறிவாளன்
பரோலில் வீடு திரும்பிய பேரறிவாளன்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், ``உலகையே அச்சுறுத்தும் கொரோனா காலத்தில் இவ்வளவு பேரைச் சந்திப்பது, ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத்தான். சிறுநீரகத் தொற்று காரணமாக, என் பையனுக்குத் தொடர்ந்து வைத்தியம் நடந்துக்கிட்டிருக்கு. கொரோனா காலகட்டத்துல அவனுக்குத் தொடர்ந்து வைத்தியம் பார்க்கப்படலை. ஸ்டான்லி மருத்துவமனைக்கோ, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கோ போகும் சூழ்நிலையும் இல்லை. என் புள்ளைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைச்சலா இருக்கறதுனால பரோல் கேட்டு மனு போட்டேன். இந்த ஆறு மாசமா மாத்திரை, மருந்துகூட அவன் எடுத்துக்கலை.

சஞ்சய் தத் விடுதலை; ஆர்.டி.ஐ-யில் கிடைக்காத தகவல்! - மும்பை நீதிமன்றத்தை நாடிய பேரறிவாளன்

உடல்நிலை எப்படி இருக்குன்னே தெரியலை. மருத்துவர்களை வரவெச்சு, பரிசோதிச்சுப் பார்க்கணும். நான் 30 ஆண்டுகளாக போராடுறது அவன் உயிர் வாழுறதுக்காகத்தான். என் மகன் விடுதலைக்காக எல்லோரும் குரல் கொடுக்கணும். தண்டனை எல்லோருக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கு. இந்த ஒரு வழக்குல மட்டும் நிர்ணயிக்கப்படாத தண்டனை ஓடிக்கிட்டு இருக்கு. அரசு அமைச்சரவையைக் கூட்டி, `விடுதலை’னு அறிவிக்குது. ஆளுநருக்கு கோப்பு அனுப்பி ரெண்டு வருஷமாகுது. இன்னும் கையெழுத்து ஆகலைனு சொல்றாங்க. இந்த வழக்குல பலவித குழப்பங்கள் இருக்கு.`சட்டத்துல இடம் இல்லை’னு அரசு சொல்லுது.

மகன் பேரறிவாளனுடன் அற்புதம்மாள்
மகன் பேரறிவாளனுடன் அற்புதம்மாள்

இந்த வழக்கில் சட்டத்தை மீறித்தான் ஏழு பேரும் தண்டிக்கப்பட்டிருக்காங்க. நாங்க அதிகாரமற்றவங்க. எங்களால என்ன செய்ய முடியும்... கேட்கத்தான் முடியும். அவன் இளமைக் காலம் போயிடுச்சு. அவன் வாழ்க்கையை யாராலும் திருப்பிக் கொடுக்க முடியாது. வாக்குமூலம் வாங்கின அதிகாரி முதல் தீர்ப்பு சொன்ன நீதிபதி வரை பேரறிவாளன் நிரபராதினுதான் சொல்றாங்க. ஆனாலும், அவன் தொடர்ந்து சிறையிலதான் இருக்கான். அமைச்சரவை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சபை. அவர்கள் சேர்ந்துதான் விடுதலை செய்யலாம்னு ஆளுநருக்கு கோப்பு அனுப்பினாங்க.

அது என்ன ஆச்சுன்னு, தீர்மானம்போட்ட அமைச்சரவையில இருக்கறவங்கதான் கேட்கணும். அவங்க யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க. அந்த அம்மா எனக்கு வாக்குறுதி கொடுத்தாங்க. `உன் பையனை உன்கிட்ட சேர்க்கிறேன். வருத்தப்படாதே... அழாதே...’னு சொன்னாங்க. நிச்சயமா அந்த அம்மா என் பையனைக் கொண்டு வந்து சேர்த்துடுவாங்கனு நான் நம்பிக்கையா இருந்தேன். ஆளுநரைச் சந்திக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலை. அரசாங்கம் சொல்லுதே தவிர, செயல்படுத்தலை. இனியாவது என் புள்ளைய வாழ விடுங்க’’ என்றார் சற்று கரகரத்த குரலுடன்.

அடுத்த கட்டுரைக்கு