Published:Updated:

`கைக்கு வந்ததை விட்டுவிட்டார்கள்!' - புலம்பும் பேராவூரணி தி.மு.க விசுவாசிகள்

பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ( ம.அரவிந்த் )

``தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகக் கடிதமாக எழுதி அனுப்ப இருக்கிறோம். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என அவர் விசாரிக்க வேண்டும். அதுதான் எங்களைப் போன்ற விசுவாசிகளின் ஆசை.''

`பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தைக் கைப்பற்றுவதற்கு தி.மு.க நிர்வாகிகள் முறையாகச் செயல்படவில்லை. அத்துடன் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு எதிர்த்தரப்பைச் சேர்ந்த மற்றொருவருக்கு ஒன்றிய கவுன்சிலர்களை வாக்களிக்கச் செய்தனர். இதனால்தான் ஒன்றிய சேர்மன் பதவியை அ.தி.மு.க கைப்பற்றிவிட்டது. இதுதொடர்பாக தலைவர் ஸ்டாலினுக்குப் புகார் அனுப்பப் போகிறோம்' என்கிறார்கள் டெல்டா மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

மறைமுகத் தேர்தல்
மறைமுகத் தேர்தல்

`தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 12-க்கான சேர்மன் பதவியை தி.மு.க கைபற்றியுள்ளது. இதில் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தைத் தவிர மீதம் உள்ள பதிமூன்றையும் தி.மு.க கைப்பற்றும் நிலையே இருந்தது. இதில், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் தி.மு.கவின் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் ஆகியோரின் தவறான செயல்பாடுகளால் அ.தி.மு.கவின் கைக்குப் போய்விட்டது' எனத் தி.மு.க விசுவாசிகள் சிலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட தி.மு.கவினரிடம் பேசினோம். ``தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதியான பேராவூரணி எப்போதும் அ.தி.மு.க-வுக்குச் செல்வாக்கு மிகுந்த பகுதி. இதன் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் துரை.மாணிக்கம். அ.தி.மு.க சார்பில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றிபெற்ற இவர், ஒன்றிய சேர்மன் பதவிக்குப் போட்டியிடவும் தயாரானார். ஆனால், அப்பகுதி எம்.எல்.ஏ கோவிந்தராஜ் மற்றும் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் ஆகியோர் சசிகலா என்பவரை முன்னிறுத்தி, அவருக்கு சிபாரிசு செய்தனர்.

துரை.மாணிக்கம்
துரை.மாணிக்கம்

இதனால், விரக்தியடைந்த துரை.மாணிக்கம் தி.மு.கவுக்குத் தாவுவதற்குத் தயாரானார். இந்தநிலையில் தி.மு.க ஒன்றியச் செயலாளரான அன்பழகன், அ.தி.மு.கவைச் சேர்ந்த மாலா போத்தியப்பனை ஆதரிக்குமாறு தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களிடம் தெரிவித்திருந்தார். முதலில் நடந்த மறைமுகத் தேர்தலில் இருதரப்புமே வாக்களிக்க வராததால், கடந்த 30ம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.கவைச் சேர்ந்த சசிகலா என்பவர் ஒன்றிய சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையில் துரை.மாணிக்கம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் அன்பழகன் மற்றும் மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோரை அணுகி, `என்னுடன் சேர்த்து ஒன்றிய கவுன்சிலராக வெற்றிபெற்ற மொத்தம் 4 பேர் தி.மு.க-வுக்கு வந்து விடுகிறோம். எனக்கு சேர்மன் பதவியும், நீங்கள் துணை சேர்மன் பதவியும் வைத்துக் கொள்ளலாம்' என டீல் பேசினார். இதை துரை.சந்திரசேகரன், தி.மு.கவின் தலைமைக்குக் கொண்டு செல்லாததோடு பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தைப் பிடிக்க முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பேராவூரணி தி.மு.கவின் கையைவிட்டுச் சென்றது.

மாலா போத்தியப்பன்
மாலா போத்தியப்பன்

அத்துடன் செல்வாக்கு மிகுந்த அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் துரை.மாணிக்கம், தானே வழிய வந்து தி.மு.கவிற்கு வருகிறேன் எனக் கூறியிருக்கிறார். அவரை தி.மு.கவிற்குள் கொண்டு வந்திருந்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவிற்குப் பெரும் பலம் ஏற்பட்டிருக்கும். இது ஒருபுறம் இருக்க மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.கவைச் சேர்ந்த மாலா போத்தியப்பனுக்கு வாக்களிக்க தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர் அன்பழகனும், துரை.சந்திரசேகரனும். இதற்காகப் போத்தியப்பனிடமிருந்து அன்பழகன் பெரியதொகையைப் பெற்றுக்கொண்டு, அதில் சந்திரசேகரனுக்கும் பங்கு கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

பணத்திற்கு ஆசைப்பட்டு செயல்பட்டதால் ஊராட்சி ஒன்றியமும் போய்விட்டது; மாற்றுக் கட்சியிலிருந்து தி.மு.கவிற்கு வருவதற்குத் தயாராக இருந்தவர்களும் கைநழுவிப் போயினர். இதைத் தலைவர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காகக் கடிதமாக எழுதி அனுப்ப இருக்கிறோம். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என அவர் விசாரிக்க வேண்டும். அதுதான் எங்களைப் போன்ற விசுவாசிகளின் ஆசை. அத்துடன் இதையெல்லாம் இப்போதே சரி செய்தால்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெறும்'' என்றனர்.

அன்பழகன்
அன்பழகன்

இதுகுறித்து அன்பழகனிடம் பேசினோம், ``துரை.மாணிக்கம், மறைமுகத் தேர்தலில் எங்களிடம் வாக்குகள் மட்டுமே கேட்டார். கட்சிக்கு வரத் தயாராக இல்லை. ஆனால், மாலா போத்தியப்பன் தி.மு.கவிற்கு வருவதாகச் சொன்னதுடன் கட்சியில் உறுப்பினராகவும் ஆகிவிட்டார். அதனாலேயே, அவரை ஆதரித்தோம். இதில் பணம் பெற்றுக்கொண்டு செயல்பட்டதாகக் கூறப்படும் தகவல் பொய்யானது. தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே திட்டமிட்டுப் பொய்ப் புகாரை பரப்பி வருகின்றனர்'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு