Published:Updated:

`தனிப்பட்ட கருத்துக் கூறுவது அவரவரின் விருப்பம்!’- ரஜினி கருத்து குறித்து கடம்பூர் ராஜு

”ஒரு பிரச்னையை ஒவ்வொருவரும் ஒரு கருத்தோடு அணுகுவார்கள். தனிப்பட்ட முறையில் கருத்துக் கூறுவது அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது” என்று குடியுரிமை சட்டம் குறித்த நடிகர் ரஜினியின் கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார்.

வேட்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு
வேட்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பிரசாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு
பிரசாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அ.தி.மு.க தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜு, அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய அவர், பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ”தமிழக அரசு, கிராமப் பகுதிகளுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம், பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவற்றை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறோம்” என்றவரிடம், குடியுரிமை சட்டம் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதில் கூறிய அவர், “ஒரு பிரச்னையை ஒவ்வொருவரும் ஒரு கருத்தோடு அணுகுவார்கள்.

வேட்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ
வேட்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ

தனிப்பட்ட முறையில் கருத்துக் கூறுவது அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். குடியுரிமை தொடர்பாகப் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடந்துவருகிறது. இச்சட்டம் தொடர்பான அனைத்துப் போராட்டங்களையும் மத்திய அரசு கவனித்துவருகிறது. அதில், சட்டத் திருத்தம் கொண்டுவரலாம் என கருத்துச் சொல்வது அனைவரின் உரிமை. மக்கள் உணர்வுகளைத் தூண்டுகிற பிரச்னைகளை அரசியலாக்கக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து.

ஒரு சட்டம் கொண்டுவந்தால் அதைப் பற்றி விவாதிக்கலாம். மக்கள் மன்றம் என்றழைக்கப்படும் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் விவாதிக்கலாம். ஆனால், மக்களின் உணர்வுகளைத் தூண்டி, வன்முறை வரை கொண்டுசென்று மக்களைத் திசைதிருப்புவதை எந்த அரசியல் கட்சி செய்தாலும் அது கண்டிக்கத்தக்கது” என்றார்.

கோ.தர்மனுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு
கோ.தர்மனுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு

இதற்கிடையில், சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மனின் இல்லத்துக்குச் சென்று சால்வை அணிவித்து வாழ்த்திய அமைச்சர் கடம்பூர் ராஜு, ”எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது கோவில்பட்டிக்குக் கிடைத்த பெருமை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எழுத்தாளரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும், இயற்கை மண் வளத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் நூல்தான் 'சூல்'. இந்தக் கருத்தை அடிப்படையாகக்கொண்டு, மன்னர் காலத்திலிருந்தே செய்யப்பட்டுவந்த குடிமராமத்துப் பணிகளை, தற்போது தமிழக அரசும் சிறப்பாகச் செய்துவருகிறது. கடந்த 82 ஆண்டுகளாக தூர்வாரப்படாத மேட்டூர் அணை முதல் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் வரை தூர்வாரப்பட்டன.

சோ.தர்மனுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு
சோ.தர்மனுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு

இதன் பயனால், இந்த ஆண்டு பெய்த பருவ மழையால், நீர்நிலைகள் நிரம்பிவழிகிறது. மழையில் கிடைக்கும் நீர் வீணாகாமல் சேமிக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டதையே இந்த நாவலின் மையக் கருத்தும் வலியுறுத்துகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.