Published:Updated:

`எம்.பி நிதி, தொகுதி மக்களுக்குச் சொந்தமானது!' - பினராயி விஜயனின் ரிக்வெஸ்ட்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கொரோனா தொற்று காரணமாக எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் குறைக்கும் செயலை வரவேற்கிறேன். ஆனால் எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது தொகுதி வளர்ச்சியை பாதிக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``உலகின் பல பகுதிகளிலும் கேரள செவிலியர்களின் சேவை பாராட்டுதலுக்குரியது. நிபா வைரஸ் பாதித்த சமயத்தில் நர்ஸ் லினி மரணமடைந்தார். அதுபோல கோட்டயத்தில் கொரோனா பாதித்த முதிய தம்பதியைக் கவனித்த ரேஷ்மா மோகன்தாஸுக்கு கொரோனா பாதித்தது. அவர் குணமடைந்தபிறகு மீண்டும் கொரோனா வார்டில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தது நமக்குத் தெரியும். டெல்லியிலும் மும்பையிலும் கொரோனா பாதித்த செவிலியர்களை நாம் நினைவில் கொள்வோம். அந்த செவிலியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசுக்கும் அம்மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

கொரோனா
கொரோனா

கேரளத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மொத்தமாக கேரளத்தில் 336 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இப்போது 263 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் கொரோனா சரியாகி வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 1,46,686 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா காரணமாக எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் குறைக்கும் செயலை வரவேற்கிறேன். ஆனால், எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது தொகுதி வளர்ச்சியைப் பாதிக்கும். மத்திய அரசு கொரோனாவுக்காக மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதி சம்பந்தமாக ஆட்சேபனைகள் எழுந்துள்ளன. எனவே நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்காமல் இருப்பது மாநிலத்துக்கு இழப்பாகும். எம்.பி-க்களின் நிதி அந்தந்த தொகுதி மக்களுக்குச் சொந்தமானது. அதை மத்திய அரசு நிறுத்துவது சரியல்ல. அதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

லாக் டவுன் சமயத்தில் மக்களின் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் மொபைல் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் ஒர்க்‌ஷாப் மற்றும் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்படும். மின்விசிறி, ஏ.சி ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளை ஒருநாள் மட்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரீசியன்கள் வீடுகளுக்கு சென்று பணி செய்ய வழிவகை செய்யப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு