Published:Updated:

பினராயி Vs அஜித் தோவல்... கேரள அரசியல் ஆட்டத்துக்குள் என்.ஐ.ஏ!

ஸ்வப்னாவின் தங்க வலை
ஸ்வப்னாவின் தங்க வலை

1968 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் தோவலிடம், கண்ணூர் மாவட்டம் தலசேரிக் கலவரத்தை அடக்கும் பொறுப்பு ஜனவரி 1972-ல் ஒப்படைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் கேரள மாணவர்கள் கூட்டமைப்பின் கண்ணூர் மாவட்டத் தலைவராக இருந்தவர், இன்றைய கேரள முதல்வரான பினராயி விஜயன்

ஸ்வப்னா சுரேஷ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. ''ஸ்வப்னா யாரென்றே தெரியாது'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினாலும், அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள் கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் தோழர்களை ஒருவழியாக்காமல் விடாதுபோலிருக்கிறது.

திருவனந்தபுரத்திலுள்ள யூ.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் முதல் குற்றவாளியான ஸரித் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷும், அவரின் நண்பர் சந்தீப் நாயரும் பெங்களூரில் தேசியப் புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கொச்சி அழைத்துவரப்பட்டு என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவிருக்கிறது என்.ஐ.ஏ.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்றாவது நபரான கொடுங்கல்லூரைச் சேர்ந்த பைசல் ஃபரீத் துபாயில் இருக்கிறார். இவருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ''துபாயில் பிசினஸ் செய்கிறேன். தங்கக் கடத்தலில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை எனக்குத் தெரியாது" என்று கூறியுள்ளார் பைசல் ஃபரீத். இதற்கிடையில் தங்கம் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவர் என றமீஸ் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.

பினராயி அரசைச் சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் இந்த விஷயத்துக்கு ஒரு முன்கதை உண்டு.

ஸ்வப்னாவின் தங்க வலை
ஸ்வப்னாவின் தங்க வலை

டிசம்பர் 1971... மதக்கலவரத்தால் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமானதால், அன்றைய சி.பி.ஐ - காங்கிரஸ் கூட்டணி அரசு செய்வதறியாது திகைத்தது. அன்றைய கேரள உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கே.கருணாகரன், கலவரத்தை அடக்குவதற்குத் துடிப்பும் தைரியமும் உள்ள ஓர் இளம் ஐ.பி.எஸ் அதிகாரியைத் தேடத் தொடங்கினார். அப்போது அவர் கண்ணில் சிக்கியவர் கோட்டயம் ஏ.எஸ்.பி-யாக இருந்த அஜித் தோவல். 1968 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் தோவலிடம், கண்ணூர் மாவட்டம் தலசேரிக் கலவரத்தை அடக்கும் பொறுப்பு ஜனவரி 1972-ல் ஒப்படைக்கப்பட்டது.

அந்தச் சமயத்தில் கேரள மாணவர்கள் கூட்டமைப்பின் கண்ணூர் மாவட்டத் தலைவராக இருந்தவர், இன்றைய கேரள முதல்வரான பினராயி விஜயன். இங்குதான் விஜயனுக்கும் தோவலுக்கும் முட்டத் தொடங்கியது. அப்போது ஆட்சியில் இருந்தது சி.பி.ஐ - காங்கிரஸ் கூட்டணியின் அச்சுத மேனன் அரசு என்பதால், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயனை முடக்குவதற்கு முழு ஆதரவு கிடைத்தது.

ஒரு சில வாரங்களில் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அஜித் தோவல், ஜூன் 1972-ல் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார். அப்போதிருந்தே பினராயி விஜயனுக்கும் அஜித் தோவலுக்கும் ஏழாம் பொருத்தம்தான் என்கிறார்கள் கேரளாவின் அரசியல் ஆழம் புரிந்தவர்கள். கிட்டத்தட்ட 48 வருடங்களுக்குப் பிறகு, என்.ஐ.ஏ வடிவில் மீண்டும் கேரள அரசியல் ஆட்டத்துக்குள் காலடியெடுத்து வைத்துள்ளார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல். இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் பற்றியும் முன்னுக்குப் பின் முரணாகக் கதைகள் உலவுகின்றன.

> மர்ம மங்கை ஸ்வப்னா சுரேஷ் பின்னணி...

> ஸ்வப்னா சுரேஷின் வழக்கு என்.ஐ.ஏ கைக்குச் சென்றதற்கு உளவுத்துறை சொல்லும் இரண்டு காரணங்கள்!

> ஆடியோ சர்ச்சை!

> ஸ்வப்னாவைத் தப்பவிட்டதா கேரள போலீஸ்?

- இவை தொடர்பான விரிவான பின்னணியுடன் கூடிய ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > ஸ்வப்னாவின் தங்க வலை... தோழர்கள் கொடுக்கும் விலை! - பின்னணியில் பி.ஜே.பி பகை? https://bit.ly/2Cg1tzt

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

ஸ்வப்னாவின் தங்க வலை... தோழர்கள் கொடுக்கும் விலை! - பின்னணியில் பி.ஜே.பி பகை?

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு