Published:Updated:

கேரளா: `சிவசங்கரனைக் காரணம் காட்டி அரசுக்கு எதிராக யுத்தம்!’ - பினராயி விஜயன் ஆவேசம்

செய்தியாளர் சந்திப்பில் பினராயி விஜயன்
செய்தியாளர் சந்திப்பில் பினராயி விஜயன்

`சுங்கத்துறை நடவடிக்கை எடுத்த கேஸை திசை மாற்றி, மாநில அரசு மீதும், முதல்வர் அலுவலகத்தின் தலையிலும் கட்டிவைக்க எதிர்க்கட்சியும் வேறு சிலரும் முயல்கிறார்கள்’ என்கிறார் பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பை தினமும் நடத்திவருகிறார். அதில் தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரன் ஐ.ஏ.எஸ் கைதுசெய்யப்பட்டது குறித்தும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சி.பி.எம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஸ் கொடியேரி கைதுசெய்யப்பட்டது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இது சம்பந்தமான அனைத்துக் கேள்விகளையும் கேட்குமாறு கூறிய பினராயி விஜயன் பின்னர் செய்தியாளர்களிடம், ``ஒரு அதிகாரியின் செயல்களை அரசின் தலையில் கட்டிவைத்து, அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதைத் தீவிரமாக்கவும் முயல்கிறார்கள். இந்த அரசு எந்த ஊழலையும் பார்த்துக்கொண்டிருக்காது. நாட்டை புதிய தரத்தில் உயர்த்தும்விதமாக அரசு செயல்படுகிறது. தவறான பிரசாரங்கள் மூலம் அதை மறைக்கப்பார்க்கிறார்கள்” என்றார்.

கைதுசெய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்
கைதுசெய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்

தொடர்ந்து, ``யு.ஏ.இ தூதரக பார்சலில் வந்த 14 கிலோ தங்கம், விமான நிலைய சோதனையில் கண்டெடுக்கப்பட்டது. சுங்கத்துறையினர் அவரது பணி சம்பந்தமாக செய்த சோதனையில் டியூட்டி செலுத்தாமல் கொண்டுவரப்பட்ட தங்கத்தைக் கண்டுபிடித்தனர். இதில் யு.ஏ.இ தூதரகத்தைச் சேர்ந்த சிலர் மீது வழக்கு பதிவு செய்ததுடன், கைதும் செய்திருக்கிறார்கள். இதில் கேரள கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கரனுக்கு தொடர்பு உண்டு என்ற விவரம் கிடைத்ததும், மாநில அரசு தலையிட்டு அவரைப் பதவியிலிருந்து மாற்றியது. மேலும் தலைமைச் செயலாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி சிவசங்கரனை சஸ்பெண்ட் செய்ததுடன், அது தொடர்பாக துறைரீதியாக விசாரணையும் நடத்திவருகிறோம். இந்தச் சம்பவத்தில் மாநில அரசைக் குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை.

ஸ்வப்னா சுரேஷ் ஸ்பேஸ் பார்க்கில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திருந்தார். அவர்மீது குற்றச்சாட்டு வெளியானதும் அவரைப் பணியிலிருந்து நீக்கியதுடன், அவர் குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டது அரசு. மத்திய அரசின் சுங்கத்துறை விதியை மீறிய சம்பவம் வெளியில் வந்ததால், சுங்கத்துறை நடவடிக்கை எடுத்த கேஸை திசை மாற்றி மாநில அரசு மீதும், முதல்வர் அலுவலகத்தின் தலையிலும் கட்டிவைக்க எதிர்க்கட்சியும் வேறு சிலரும் முயல்கிறார்கள்” என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், ``இந்த அரசு அமைவதற்கு முன் சிவசங்கரனை எனக்குத் தெரியாது. அரசு வந்ததும் தலைமைக்கு உத்யோகஸ்தர்கள் குறித்து விசாரித்தோம். பதவி உயர்வில்தான் முதன்மைச் செயலாளராக சிவசங்கரன் நியமிக்கப்பட்டார். கட்சி நிர்பந்தத்தால் சிவசங்கரனை நியமித்ததாகக் கூறுவது தவறு. அப்படிக் கட்சி நிர்பந்திக்கவும் செய்யாது. சிவசங்கரனின் செயல்பாடுகளுக்கு அரசு பொறுப்பு ஏற்க முடியாது. கேரளத்தில் ஒன்பது சதவிகித மக்கள் வெளிநாடுகளில் பணிக்காகச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் 22 லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் இருக்கிறார்கள். 2016-ல் யு.ஏ.இ தூதரகம் தொடங்கப்பட்டது. அதனால் அவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கலந்துகொள்வது வழக்கம்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

அகில இந்திய சர்வீசிலுள்ள அந்த அதிகாரியின் தொடர்புகளுக்கும், தனிப்பட்ட நடவடிக்கைகளும் மாநில அரசு பொறுப்பேற்க முடியாது. அவரது செயல்பாடுகள் அரசை பாதிக்கும் எனக் கண்டறியப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, சிவசங்கரனைக் காரணம் காட்டி அரசுக்கு எதிராக யுத்தம் நடத்துவது அவசியமற்றது" என்றார். ஆனால் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஸ் கொடியேரி கைது செய்யப்பட்டது குறித்து எந்த பதிலும் கூறாமல் பேட்டியை நிறைவு செய்துவிட்டார் பினராயி விஜயன்.

அடுத்த கட்டுரைக்கு