Election bannerElection banner
Published:Updated:

கொளத்தூர் தொகுதி: ஸ்டாலினின் பலம் என்ன பலவீனம் என்ன?

ஸ்டாலின்
ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை எதிர்த்து, அ.தி.மு.க சார்பில் சீனியர் ஆதிராஜாராம் போட்டியிடுகிறார். கள நிலவரம் யாருக்கு சாதகமாக உள்ளது? வி.ஐ.பி-யை வீழ்த்துவாரா ஆதிராஜாராம்?

கொளத்தூர் தொகுதி 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது புதிதாக உருவாக்கப்பட்டது. அதன் முதல் சட்டமன்ற உறுப்பினரே ஸ்டாலின்தான். 2011 மற்றும் 2016 என இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் ஸ்டாலின். 2016-ல் வெற்றி பெற்றதும், கூடவே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வந்து சேர்ந்தது. மூன்றாவது முறையாக இங்கு போட்டியிடும் ஸ்டாலினின் பிளஸ் என்ன.. மைனஸ் என்ன அலசுவோம்.

தொகுதி தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது “பிளஸ் என்று பார்த்தால் நிறைய இருக்கிறது. கருணாநிதியின் நிழலில் வளர்ந்த மகன். சிறு வயதிலேயே மிசாவில் கொடுமைகளை அனுபவித்தவர் என்கிற அனுதாபம் இருக்கிறது. கட்சிக் கட்டமைப்பும் ஸ்டாலினுக்கு அங்கு வலுவாகவே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி போல ஒரு சமூகத்துக்குச் சொந்தக்காரராக ஸ்டாலினைப் பார்க்க முடியாது. எண்ணிக்கையில் சிறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே ’கேஸ்ட் நியூட்ரல் லீடர்ஸ்’ என்றுதான் அழைக்கப்படுவார்கள். ஸ்டாலின் தற்போது கேஸ்ட் நியூட்ரல் லீடர்தான். அனைத்து சாதியினரும், மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியத் தலைவராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.

கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த திமுக தலைவர் ஸ்டாலின்
கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த திமுக தலைவர் ஸ்டாலின்

2011 மற்றும் 2016 ஆகிய இரு தேர்தல்களின்போதும் கருணாநிதி உயிரோடு இருந்தார். அப்போது சாதாரண தி.மு.க நிர்வாகியாகத்தான் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார். ஆனால், இப்போது கட்சியின் தலைவர் என்கிற அந்தஸ்தில் இருப்பது கூடுதல் பலம். கருணாநிதி மீது கூட தனிப்பட்ட முறையில் ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. ஜெயலலிதா மீதும் இருந்தது. எடப்பாடி, பன்னீர் மீதும் இருக்கிறது. ஆனால், ஸ்டாலின் மீது அப்படிப்பட்ட தனிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு எதையுமே சொல்ல முடியாது. ‘மிஸ்டர் கிளீன்’ என்றுதான் ஸ்டாலினைச் சொல்லிட வேண்டும்” என்றனர்.

மைனஸ் என்ன என்பது குறித்து அ.தி.மு.க-வினரிடம் பேசினோம். “மக்களிடமும், தொண்டர்களிடமும் நெருக்கமாக இல்லாதது ஸ்டாலினுக்கான பலவீனம். எங்கள் முதல்வர் எடப்பாடி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர் போன்றோர்கள் மக்களிடமும், தொண்டர்களிடமும் எளிமையாகப் பழகக் கூடியவர்கள். ஸ்டாலின் தற்போது தேர்தலுக்காகத்தான் மக்களிடமும், தொண்டர்களிடம் நெருக்கமாக இருப்பதுபோல நடிக்கிறார். மற்றபடி, விலகியே இருப்பவர். முக்கியமானது பேச்சு. துண்டுச் சீட்டு வைத்துக்கொண்டு பேசுவது, துண்டுச் சீட்டைப் பார்த்தும் தவறாகப் பேசுவது, வருடங்களை மாற்றிக் குறிப்பிடுவது எல்லாமே பலவீனம்தான். இப்போதெல்லாம் இருபக்கமும் புராம்ப்டர் வைத்துக்கொண்டபோதும், கையில் துண்டுச் சீட்டுடன்தான் மேடையில் பேசுகிறார். எங்கள் வேட்பாளர் மக்களுடன் மக்களாக பழகக் கூடியவர் என்பது பெரிய பலம்” என்றனர்.

ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராமிடம் பேசினோம். ``ஸ்டாலினின் தவறுகளை எக்ஸ்போஸ் செய்வதுதான் என்னுடைய வியூகம். பெர்சனல் விஷயங்களைப் பேசும் அளவுக்கு தரம் தாழ்ந்தவனல்ல. அரசியல் ரீதியாகத்தான் பேசுவேன். தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை என்பது தெரியும். எல்லோரையும் மாட்டிவிட்டு தப்பிச்செல்வதுதான் அவர்களது குடும்பத்தின் வாடிக்கை. ஆ.ராசா, கனிமொழி, சாதிக் பாட்சா போன்றோரை சிக்கவைத்துவிட்டு ஸ்டாலின் குடும்பம் எஸ்கேப் ஆகிவிட்டது.

ஆதிராஜாராம்
ஆதிராஜாராம்

2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து களம் கண்டிருக்கிறேன். வெறும் 4000-த்து சொச்சம் வாக்குகளில்தான் தோல்வியைத் தழுவினேன். ஸ்டாலினுடன் ஏற்கனவே மோதியிருப்பதால் அவரைப்பற்றி ஆதிஅந்தமாக எனக்குத் தெரியும். இதுமட்டுமின்றி, எங்கள் அரசின் 10 ஆண்டுகால சாதனைகளையும், எடப்பாடியின் நிர்வாகத் திறனையும், தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளையும் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்துவருகிறேன். நிச்சயம் ஸ்டாலினைத் தோற்கடித்து வரலாறு படைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்றார்.

தொகுதி நிலவரம் குறித்துப் பார்த்தால், நாயுடு மற்றும் வன்னியர் சமூகம் அதிகம் வசிக்கிறார்கள். மற்றபடி, பட்டியலினத்தவரும், இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். நாயுடு சமூகம் அதிகம் இருப்பது, அதே சமூகத்தைச் சேர்ந்த ஆதிராஜாராமுக்கு சாதகம். இருந்தபோதிலும், கேஸ்ட் நியூட்ரல் லீடர் ஸ்டாலினை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற முறை தொகுதிக்குச் சென்று, தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார் ஸ்டாலின். மே 2-ம் தேதிதான் இதற்கு விடை கிடைக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு